மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்

பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன?

பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம்.

500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது.

மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும்.

எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும்.

இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன.

மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று.

2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை.

நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது.

'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை.

ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன.

அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார்.

நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு.

தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை.

அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு இந்நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம்.

பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன்.

உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்து ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது.

மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும்.

வாழ்த்துக்களும் வணக்கமும்.

ஆதவன்
1/11/2015 4:57:21


Quelle -  Ponguthamizh

Related Articles