ஈழத்துக் கலையுலகின் மையப்புள்ளி
சிலோன் சின்னையா

குடி போதையில் வருகின்ற ஏழைத் தொழிலாளி சின்னையா மனைவி என்று நினைத்து மகள் பரீனாலையைத் தொடுவதும், பின் அதற்காக வருந்துவதும் நமக்குக் கிடைத்த அற்புதக் கலைஞன் என்றே அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டது ஞாபத்திற்கு வருகிறது. அனைத்துப் பத்திரிகைகளும் பாராட்டிய படம். அந்தப் படத்தில் நம் கவனத்தை திருப்பியவர்கள் இருவர். ஒருவர் எம்.எஸ்.தனரத்தினம். மற்றவர் சின்னையாவாகும்.
செல்லக்கண்ணு, காவேரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவரின் கலை ஆர்வம் அபரிமிதமானது. சிவாஜி கணேசனை தன் மானசீகக் குருவாகக் கொண்டு தன் கலை உலகில் பயணித்தார். நிர்மலா(1968) மஞ்சள் குங்குமம்(1970) மீனவப்பெண்(1975) நான் உங்கள் தோழன்(1978) போன்றன இவர் நடித்த ஈழத்துத் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. அனைத்துப் பாத்திரங்களும் இவருக்கு அத்துப்படி. சின்னையாவின் நடிப்பை ஒருமுறை 'அமரர்' ஈழத்து ரத்தினம் என்னுடன் பெருமையாகப் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அவர் தயாரிக்க முனைந்த ´பாட்டாளியின் கூட்டாளி’ வராமலேயே போயிற்று. அது போலத்தான் டீன்குமார் தயாரிக்க நினைத்த 'நான் உங்களில் ஒருவன்' திரைப்படமும் நின்று போனது. இது நமது ஈழத்துத் திரைப் பட வரலாற்றின் சோக நிகழ்வாகும். ஏனெனில், அதிலும் சிலோன்.சின்னையா நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
கலைஞர்களிடையே போட்டி, பொறாமை, பிறரின் வளர்ச்சியைத் தடுத்தல் என பல நிகழ்ந்தாலும் இவர் அவற்றையெல்லாம் சமாளித்து முன்னேறினார்.
சின்னையாவின் நடிப்பை வியந்து பாராட்டியதையும், தனது பிறந்தநாளில் தன்னையும் கௌரவித்ததையும் எம்மைக் காணும் போதெல்லாம் சொல்லுவார். அவரின் கண்களில் தீட்சண்யம் தெரியும்.
மற்றுமொரு ஈழத்துக் கலைஞர். திரு.இரகுநாதனுடன் எனது இல்லம் வந்து பகல் பொழுதை எம்முடன் இருந்து திரைப்படம், நாடகம், கலைஞர்கள் பற்றி யெல்லாம் கதைத்து மகிழ்ந்தோம்.
83இல் நடை பெற்ற இனக்கவரத்தின் பின் சென்னையில் வசித்து வருகையில் தான் முன்னர் சிவாஜியுடன் 'பைலட் பிரேம்நாத்' (1978) திரைப்படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவம் கை கொடுக்கிறது.
பொண்ணு ஊருக்குப் புதுசு தொடங்கி கரை கடந்த ஒருத்தி, அகல் விளக்கு, ஆணிவேர், காவலன் அவன் கோவலன், புதிய அடிமைகள், என் தமிழ் என் மக்கள் என திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றி நடித்தார்.
என்ன தான் சினிமா ஆர்வம், அனுபவம் இருந்தாலும் முழுமையான பாத்திரம் கிடைப்பது அபூர்வம். அனைத்து போராட்டங்களையும், சவால்களையும், சமாளித்து நிற்பவர்களில் வி.சி.குகநாதன், பாலு.மகேந்திரா இருவரையும் இப்போதைக்குச் சொல்லலாம். சிலோன்.விஜயேந்திரன் கூட எழுத்தில் ஜொலித்தளவிற்கு திரைபடத்தில் பிரகாசிக்கவில்லை. ஏ.ஈ.மனோகரன் கூட முழுமையான பாத்திரங்கள் அவரைத் தேடி வரவில்லை என்றே சொல்லலாம்.இந்த நிலையில் அனுபவம், சிவாஜி போன்றோரின் ஆசீர்வாதம் இருந்தாலும் சின்னையாவினாலும் பெயர் சொல்லும் பாத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை தான். பண, அரசியல் பலம் பெற்றவர்களால் தான் நின்று நிலைக்க முடியும் என்பது கண் கூடு.
உழைப்பு, பிரயாசை இன்னோரன்ன பிற வாழ்வியல் சவால்களை முறியடிக்க இதய நோயாளியான சின்னையா இங்கிலாந்திற்கு புலம் பெயர நேரிட்டது. ஆனாலும் அவரின் திரைப்படம் சார்ந்த வேட்கை சிறிதும் தணியவில்லை. கடுமையான சுகவீனத்துக்கு மத்தியிலும் காணும் போதெல்லாம் தன் எதிர்காலக் கனவு பற்றியே சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கோவில்களில், நூல் வெளியீட்டு விழாக்களில் காணும் போதெல்லாம் ஒரு புகைப்படக்கருவியுடன் தான் வலம் வருவார். விஜயகாந்துடன் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்திருப்பத்தாவும் சொன்னார். அவரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் படியாகவே அவருக்கு இறைவன் நல்ல குடும்பத்தையும் கொடுத்திருக்கிறார். அமரர்களான சுப்பையா, பார்வதியின் மகளான சறோஜினியை கரம் பிடித்தார். அவரின் அன்பும் பாசமும் இவருக்கு துணை நின்றன. நேசதர்சினி, யோகதர்சினி, ரோஜாரமணன், யோகசெல்வம் ஆகியோரை பிள்ளைச் செல்வங்களாகவும், அக்சயா, அக்சிதா, தக்சாந்த், சச்சின், பிரமேஷ் ஆகியோரை பேரப் பிள்ளைகளாகவும் பெற்றவர் பாக்கியசாலிதான். மீண்டும் நோய்வாய்ப்பட முன்பு கூட 'எனக்குள் சிவாஜி' எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்திருந்தார்.
பண்பும், ஆளுமையும், நண்பர்களை நேசிக்கின்ற பக்குவமும் நேரில் பார்த்து வியந்தவன். ஈழத்து தமிழ்த் திரைப்பட வரலாறு எழுதப் படும் போது சின்னையாவிற்கும் தனி இடம் ஒதுக்கப்படும். அவரை நினைக்கையில் சிவாஜியின் நினைவுகளையும் கூடவே கொண்டு வரும். அன்னம் உணவகத்தின் விளம்பரம் தொலைக்காட்சியில் வருகையில் இவர்தான் கண்முன் எனித் தோன்றுவார்.
இங்கிலாந்து 'ஈழவர் திரைக்கலை மன்றம்' எனும் கலை வட்டத்தின் அங்கத்தவராகவும், தனியே கலைச்சங்கச் செயல் பாடுகளிலும் திறமையாக செயல் ஆற்றினார். இவரின் மறைவு (07/01/2010) குறித்து ஊடகங்களின் மூலம் அறிந்த போது துக்கித்துப் போனேன். அவர் நடித்த அனைத்துப் படங்களும் கண்முன் வந்து போயின. கலைஞனுக்குரிய அத்தனை வலிகளையும், கனவுகளையும் சுமந்து நின்ற மனிதன் நம்மிடம் விட்டுச் சென்ற பணிகள் அனேகம். அவனின் வரலாறும் எழுதப்பட வேண்டும். தமிழ் திரைப்படத்துக்கென இலங்கை அரச மட்டத்தில் உச்சவாசல் திறக்கப்பட்டிருந்தால், 83 கலவரம் போன்று நடைபெறாமல் இருந்தால் ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் அதிக பட்ச வளர்ச்சி சிங்களத் திரைப்படங்கள் போல் இருந்திருக்கும். அப்போது சின்னையா போன்ற கலைஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும், ஈழத்துத் திரையுலகம் தானே வளர்ந்து கொள்ளவும் முடிந்திருக்கும். தமிழுக்குக் கிடைத்த துர்ப்பாக்கிய நிலையாகும்.
அவரின் துயரில் குடுப்பத்தாருடன், கலை உலகமும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது. அவரின் ஆத்மா சாந்தி பெறுவதாக..!
முல்லைஅமுதன்
15.01.2011