home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 19 guests online
குட்டு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by முல்லை   
Friday, 21 August 2009 09:04
இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

அந்த சம்பவம் எனக்கு பதினைந்து வயது இருக்கும்போது நடந்தது. நாற்பது வருடங்களின் பின்னரும் இன்னமும் அந்தச் சம்பவம் பசுமையாக இருக்கிறது.

அன்று நானும் எனது அண்ணனும் ஒரு உறவினரது வீட்டிற்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். நேரம் இரவு பத்துமணியைத் தாண்டியிருக்கும். எனது அண்ணனுக்கு என்னை விட ஐந்து வயதுகள்தான் அதிகம். தோற்றத்தில் நல்ல உயரமாகவும், பருமனாகவும் இருப்பார். அன்று அவரது காலில் ஏதோ காயம் ஏற்பட்டதால் அவரால் சைக்கிள் ஓட முடியவில்லை. உறவினர் வீட்டில் இருந்து திரும்பும் போது நான்தான் சைக்கிளை ஓட்டி  வந்தேன். எனது கால்களுக்கு சைக்கிள் பெடல்கள் எட்டாததால் நான் இருபக்கமும் வளைந்து வளைந்து பெடல்களை மிதிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு சிரமமாக இருந்தாலும் எனது அண்ணனை முன்னால் வைத்து சைக்கிள் ஓடும் போது எனக்கு ஏகப்பட்ட குசியாக இருந்தது.

உறவினர் வீடும் எங்களது வீடும் ஒன்றரை கிலோமீற்றர் தூரமேயிருக்கும். பிரதான பாதையூடாகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம். வாகனங்கள் ஏதும் வந்தால் எனது அண்ணன் முன்னெச்சரிக்கை தந்து "பாதையின் ஓரமாகச் சைக்கிளை ஓட்டு" என்பார்.

ஒரு தடவை அவர் சொன்னார்,  “முன்னுக்கு வாறது ஜீப் போலை இருக்கு. லைற் மேலையிருக்கு.. „

எனக்கும் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது.  “பொலிசாயிருக்கும்... கையை எடு.. நான் இறங்குறன்.. „

அண்ணன் பொலீஸ் என்றதும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அதனால் கையையும் காண்டிலில் இருந்து எடுக்கும் எண்ணமும் வரவில்லை. ஆனால் எனது அண்ணன் எனது கையை காண்டிலில் இருந்து எடுத்துவிட்டு சைக்கிளில் இருந்து இறங்கி விட்டான். ஆனால் அது நேரம் கடந்து விட்டது. பொலிஸ் ஜீப் எங்களுக்கு முன்னால் நின்றது. நானும் சைக்கிளில் இருந்து உடனேயே இறங்கி விட்டேன்.

“ஏய் கிட்ட வா.. „
பொலிஸ் இன்ஸ்பெகடர் ஜீப்பில் இருந்தபடியே கூப்பிட்டான்.

அண்ணன்தான் கிட்டே போனார். நான் போகவில்லை. பொலீஸ் அடிக்கும் என்று பயம்.

“டேய்.. நீ..மல்லன்மாதிரியிருக்கிறது... அந்தப்பொடியனை சைக்கிள் ஓடச் சொல்லுறது..?„

டபிள் போனால், லைற் இல்லாமல் போனால் சைக்கிள் காற்றை எடுத்துவிட்டு நடந்து போகச் சொல்லுவார்கள். இது அன்றைய பொலீஸாரின் எழுதாத சட்டம். கொஞ்சம் ஏடாகூடமான பொலிஸாயிருந்தால் அடிகூட விழும்.

இப்பொழுது எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்ற பயத்துடன் நான் சற்று எட்டவே நின்று கொண்டேன். அண்ணன் தனது காலில் உள்ள காயத்தைக் காட்டி சம்பவத்துக்கான நிலையை விளங்கப்படுத்தினான். போலிஸ் இன்ஸ்பெக்டர் அண்ணனுடைய கதையைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ அல்லது காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரியோ தெரியவில்லை. என்னை நோக்கி வந்தான். அப்படியே சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடி விடலாமோ என்று ஒரு யோசனை. ஆனால் இன்ஸ்பெக்டihப் பாத்தவுடன் எனக்கு காலிருப்பதே மறந்து விட்டது.

“நீ தனியவே ஓடுறதுக்கு இது பெரிய சைக்கிள். நீ இன்னுமொரு ஆளை வைச்சு ஓடுறது...? இந்தா இதிலையிருக்கிற கல்லிலை ஏறி நில். „

இன்ஸ்பெக்டரின் தோற்றம் மட்டுமல்ல குரலும் பயத்தைத் தந்தது. வேறுவழி..? பேசாமல் அவன் சொன்ன மாதிரியே பாதையின் ஓரத்தில் இருந்த அந்தப் பெரிய கல்லின் மேல் ஏறி நின்று கொண்டேன். அந்தக் காட்சியை கே.பி. சுந்தராம்பாள் பார்த்திருந்தால் ´பழநியப்பா ஞானப்பழநியப்பா` பாடலை இன்னுமொரு தடவை பாடியிருப்பார்.

இப்பொழுது எனது அண்ணன் எனதருகே அழைத்து வரப்பட்டு எனக்கு நேரேதிரே நிறுத்தப்பட்டார்.

“டபிள் போறது குத்தம்தானே... அதுக்கு... நீ செஞ்ச குத்தத்துக்கு இவன் உனக்கு பத்துக் குட்டு குட்டுவான். உன்னை... சின்னப் பொடியன் உன்னை... சைக்கிள் ஓடச்சொல்லிட்டு இந்த எருமை முன்னாலை இருந்ததுக்கு நீ இவனுக்கு பத்துக் குட்டு குட்டுறாய். சரி குட்டு. „

என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் இப்படிச் சொன்னவுடன் எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. எனக்கு எதிரில் நிற்பது எனது அண்ணன். அவர் எனக்குக் குட்டுவது சரி. நான் இளையவன் எப்படி அவருக்குக் குட்டுவது?

முதல்தடவையாக நான் எனது வாயைத் திறந்தேன்.
“சேர் அவர் என்ரை அண்ணன். „

“சட்டத்துக்கு முன்னாலை அண்ணன் தம்பி எல்லாம் பாக்கிறதில்லை. நீ அவனுக்கு இப்ப பத்துக் குட்டு குட்டுறது. „
இன்ஸ்பெக்டர் குரலால் பயமுறுத்தினான்.

குட்டாமல் விட்டால் இன்ஸ்பெக்டரிட்டை உதை வாங்கணும். குட்டினால் வீட்டை போய் அண்ணனிட்டை உதை வாங்கணும்.

அண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டு தனக்குக் குட்டும்படி ஜாடை காட்டினான்.

வீட்டிலை பிரச்சினை வந்தால் அம்மா நீதான் காப்பாத்தோணும் அம்மாவை மனதில் நினைத்துக் கொண்டு எனது முதல் குட்டை மெதுவாக மிகமிக மெதுவாக வைத்தேன்.

“அடேங் என்ன செய்யிறது? தலையைத் தடவுறது? குட்டோணும்.. குட்டத் தெரியாது...? குட்டுறது எப்பிடிண்ணு காட்டட்டா„
இன்ஸ்பெக்டர் நெருங்கி வந்தான்.

அண்ணனின் முகத்தைப் பார்த்தேன் அமைதியாக இருந்தார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. எனது இரண்டாவது குட்டு வேகமாக.. பலமாக இறங்கியது. இப்பொழுது அண்ணன் முகம் இறுகியிருந்தது. இன்ஸ்பெக்டர் கிறுக்கன் நெருங்கி நிற்கிறான். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நான். கண்ணை மூடிக்கொண்டேன். எனது மற்றைய குட்டுக்கள் தொடர்ந்து இறங்கி முடிந்தன.

இனி அண்ணன் எனக்குக் குட்டவேண்டிய நேரம். எல்லாக் கோபத்தையும் சேர்த்து அண்ணனின் குட்டு இறுக்கமாக இருக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

“சரி... நீ சின்னப் பெடியன்... உனக்கு அவன் குட்டத் தேவையில்லை. நீ இனி டபிள் ஓடக்கூடாது விளங்கிச்சோ..? இப்பிடியே சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பிப் பாக்காமல் வீட்டுக்கு ஓடோணும். ஓடு.. „

என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சொன்னவுடன் நான் விட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததால் உடனேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து விட்டேன். பாவம் அண்ணன் நடந்து வீட்டுக்குப் போகும்படியான தண்டனை அவருக்கு. வீட்டுக்கு வந்தவுடன் எனது அம்மாவுக்கு விசயத்தைச் சொல்லிவிட்டு நான் அண்ணன் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்துக் கொண்டேன். பின்னர் வீடு வந்து அண்ணன் அம்மாவின் சமாதானத்தைக்கூடக் கேட்காமல் என்னை எல்லா இடமும் தேடியும் நான் கிடைக்கவில்லை. அடுத்தநாள் சமாதானமாகிய அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார்

“அவன் இறுக்கிக் குட்டச் கொன்னால் இப்பிடியே குட்டுறது? எனக்கு இன்னும் தலை விண்விண் என்று வலிக்குது. „

இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

- முல்லை

Last Updated on Thursday, 19 December 2013 08:24