home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 21 guests online
நந்திக்கடல் தாண்டி... 1 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 01 February 2010 07:51
நந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.

ஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு ´இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்´ என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன்.

நாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள்.
அடுத்தநாள் 23ந்திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் வெண்புறா நிலையத்தில், நாம் தங்கியிருப்பது தெரிந்து எம்மைத் தேடி வந்த உறவுகளோடு நின்று கதைக்க முடியாதிருந்தது. அத்தனை பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். யாருடன் கதைப்பது என்று தடுமாற்றமாக இருந்தது. நாள் நகர்ந்ததே தெரியவில்லை.

இரவு வெண்புறா உறவுகளுடன் ஆறுதலாகக் கதைக்க எண்ணி முற்றத்தில் கூடினோம். மெல்லிய குளிர்ந்த காற்று எம்மைத் தழுவ மரங்களின் கீழ் கதிரைகள் போட்டு அமர்ந்து அந்த அன்பு உறவுகளுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் இனிமையானது. அந்தப் பொழுதில்தான் செஞ்சோலை ஜனனி வந்தாள். எனது குழந்தைகளை எத்தனையோ வருடங்களின் பின் சந்தித்த அவளின் முகத்தில் சந்தோசம் தவழ்ந்தது. அவளோடு இரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். எதுவித முன்னறிவித்தலுமின்றி அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இனிய நட்புக் கலந்த சிரிப்புடன் வந்தார். முதல்நாள் வரமுடியாமற் போனதற்காக மன்னிப்புக் கேட்டார். தனியாக என்னை அழைத்து “அக்கா, நாளைக்கு உங்களுக்கு ஒரு இனிய சந்திப்பு இருக்கிறது“ என்றார். எனது பிள்ளைகள் அண்ணன் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதை நான் முதலே மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அதுதான் அண்ணன் முக்கியமாகப் பிள்ளைகளைச் சந்திக்கப் போகிறார் என்றார்.

இம்முறை அண்ணையுடனான சந்திப்பு அரசியல் துறை அலுவலகத்திலேயேதான். அன்றும் ஒரு முக்கிய சந்திப்புக்காக வேறொரு இடத்தில் நிற்க வேண்டி இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தை விட அரைமணி நேரம் தாமதமாகவே அண்ணன் எம்மிடம் வந்து சேர்ந்தார். வந்ததும் தனது தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த நேரம் பாலாண்ணையும் வன்னியில்தான் நின்றார். பாலாண்ணையுடன் கூடிய நேரத்தைச் செலவழிக்க முடியாதிருப்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார்.

அரசியற்துறை அலுவலகத்தின் முன் வெளிவிறாந்தையிலேயே நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கள் பல திசைகளிலும் விரிந்தன. எனது பிள்ளைகளுடனான அண்ணனின் நட்பான உரையாடல் என்னை வியக்க வைத்தது. வன்னியில் இருந்து கொண்டு உலகத்தையே அவர் புத்தகங்கள் வாயிலாகவும், படங்கள் மூலமாகவும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பதை பிள்ளைகளுடன் அவர் பரந்து பட்டு பல்வேறு விடயங்களையும் கதைக்கும் போது புரிந்து கொண்டேன். அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் துப்பாக்கி ஏந்திய எமது வீரர்கள் நின்றிருந்தாலும் இறுக்கமான சூழ்நிலையோ, மனநிலையோ இருக்கவில்லை. மதிப்புக்குரிய மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு நண்பன் போல எம்மோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலேரியா எம்மைத் தொற்றிக் கொள்ளாதிருக்க எம் எல்லோருக்கும் ஒரு குளிகை தந்து உட்கொள்ள வைத்தார். எனது கணவரைத் தனியாக அழைத்துச் சென்று சில தனிப்பட்ட விடயங்களைப் பேசினார்.

எனது மூத்தமகனின் ஆர்வங்களையும், திறமைகளையும் கண்டு, உடனடியாக எங்கோ நின்ற தமிழேந்தி அவர்களை ஆட்களை அனுப்பி அழைத்து என் மகனுடன் கதைக்க வைத்தார். தமிழேந்தி அவர்களும் எனது மகனும் தனியாக அமர்ந்திருந்து அரசியலையும் தாண்டி இலக்கியம், சரித்திரம்.. என்று அளவளாவியது சுவாரஸ்யமானது.

அன்று அரசியல் துறை அலுவலகத்திலேயே எங்களுக்கு அருமையானதொரு பெரிய விருந்து. வெண்புறா உறவுகளில் சிலரும் எம்மோடு இணைந்திருந்தார்கள். மிகமிகச் சுவையான உணவுகள். நண்டு பிரமாதமாக இருந்தது. சமையற்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் சமைத்திருந்ததை உணர முடிந்தது. அதை அவர்கள் அன்போடு பரிமாறிய விதம் இன்னும் இனிமையாக இருந்தது. சாப்பாட்டுக்கு மேல் வட்டில் அப்பம், பலாப்பழம், மாம்பழம் என்று... பல. எனது இரண்டாவது மகன் பலாப்பழத்தை மிகவும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்ட போது தமிழ்செல்வன் அவர்கள் தனது பலாப்பழத்தையும் அவனிடமே கொடுத்து விட்டார். அவர் ஓரிரு தினங்களில் பாங்கொக் செல்லத் தயாராக இருந்தார்.

சாப்பாட்டு மேசையிலும் கதைகள் பல்வேறு திசைகளிலும் விரிந்திருந்தன. எனது பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் அண்ணை அலுக்காமல், சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இம்முறை அண்ணையுடனான சந்திப்பு கடந்த மே மாதம் (வைகாசி-2002) சந்தித்ததை விட நீண்டதாக இருந்தது

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் ரேகாவிடம் சொன்னார் “நாளைக்கு இவர்களை முடில்லைக்கடலடிக்குக் கூட்டிச் செல்“ என்று.

எங்களிடம் சொன்னார் “சூசை எல்லாம் காட்டுவார்“ என்று

அது மிகவும் இனிமையானதொரு சந்திப்பு. சூசை என் தம்பி மொறிசுக்குப் பரிச்சயமானவர் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.

அன்று அதி காலையே புறப்பட்டு, முதலில் இனிய வாழ்வு இல்லத்துக்குச் செல்வதாகத்தான் தீர்மானித்திருந்தோம். போகும் போது வழியில் கஸ்ரோ அவர்களின் முகாமுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒரு தனிப்பட்ட தேவை வந்தது. அங்குதான் கஸ்ரோ அவர்களின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனான முத்தழகனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பெயரைப் போலவே அழகானவன். துப்பாக்கி ஏந்திய அவன்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். மௌனத்தால் பேசினான். அவசியம் ஏற்பட்ட போது மட்டும் முத்தென சில வார்த்தைகளை உதிர்த்தான்.

புறப்படும் போது அன்றிரவு தன்னிடம் கண்டிப்பாக வந்து போக வேண்டும் என்று கஸ்ரோ எங்களுக்குப் பணித்தார். நாமும் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி விட்டே புறப்பட்டோம். கஸ்ரோவுக்கு எனது கணவரையும், அவரது நகைச்சுவைகளையும் நன்கு பிடிக்கும். நாம் வந்திருக்கிறோம் என்ற போது வெண்புறா வரை வந்து வாகனத்தில் இருந்து இறங்காமலே எம்மோடு கதைத்து விட்டுச் சென்றார்.

இனிய வாழ்வு இல்லத்தில் எங்களுக்கு இனிய வரவேற்புக் கிடைத்தது. நாம் அவர்களுக்கெனக் கொண்டு சென்ற பொருட்களை அவர்கள் ஆசையுடனும், நன்றியுடனும் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடன் உறவாடி அவர்களின் மதிய உபசரிப்பில் உளம் நிறைத்து நாம் விடைபெற்றோம். நாம் விடை பெறும் போது ஒரு சின்னப்பையன் ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், ஓடி வந்து என்னைப் பார்த்து, தனது முகத்தை வட்டமாகச் சுற்றி... ஏதோ சைகை செய்தான். அவன் முகம் சந்தோசமாக இருந்தது. நான் புரியாது விழித்து போது அவனது ரீச்சர், “அக்கா, நீங்கள் நல்ல வடிவா இருக்கிறிங்கள்“ என்று சொல்கிறான் என்றா. வாய் பேசமுடியாத அந்தக் குழந்தையை அப்படியே என்னுடன் அள்ளி அணைத்த போது மனசு கரைந்தது.

இனியவாழ்வு இல்லத்தின் இன்னொரு பகுதியில் எட்டுச் சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தார்கள். பெற்றோரை ஏதோ ஒரு வழியால் இழந்த அந்தக் குழந்தைகளைக் கொஞ்சி விட்டு, விடைபெற மனம் வரவில்லை. அவர்களுடனேயே இருந்து விடலாம் போல இருந்தது. ஒரு குழந்தை என்னோடு நன்கு ஒட்டிக் கொண்டது. நான் விடைபெறும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது. மனதும், கண்களும் கலங்க அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது.

அங்கிருந்து செஞ்சோலைக்குச் சென்றோம். செஞ்சோலை மிகவும் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் இருப்பது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் படியாக சரியான தூரத்தில் இருந்தது. அங்கு அம்மா, அம்மா என்ற படி மழலைகள் ஜனனியோடு இணைந்திருக்க நாம் நீண்ட நேரம் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தோம். குழந்தை குயில் ஐனனியையே சுற்றிச் சுற்றி வந்தாள். அது ஒரு இன்பமான பொழுது.

ஜனனியிடம் விடைபெற்று முகிலன் பேஸ் நோக்கிப் பயணிக்கையில் வழியிலே 3பெண் போராளிகள் போய்க் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தை ஓட்டி வந்தவர் நின்று அவர்கள் எந்த பேஸ் நோக்கிப் போகிறார்கள் என்பதை விசாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். வழிநெடுக என்னோடு கதைத்துக் கொண்டு வந்தவர்கள் தமக்குச் சாப்பிட என்று வைத்திருந்த திராட்சைப்பழக் குலைகளோடு, அவர்கள் பற்றிய இனிய நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு இடையிடையே இறங்கிக் கொண்டார்கள்.

முகிலன் பேஸ் அருகில் மருத்துவத்துறை ரேகா எமக்காகக் காத்திருந்தார். ரேகாவுடன் என்னால் பேசமுடியவில்லை. முதல்நாள் அண்ணையுடன் நிறையப் பேசி விட்டேனோ, என்னவோ தெரியவில்லை. சாப்பாட்டின் பின் அரசியல் துறை அலுவலகத்தில் மாங்காய் பறித்துச் சாப்பிட்டு விட்டு, வெண்புறா சென்று இளநீர் அருந்திச் சிறிது நேரத்தில் எனது குரல் மெதுமெதுவாக ஒலி இழந்து போகத் தொடங்கி விட்டது. ரேகாவைச் சந்தித்த போது முற்றிலுமாக நான் பேசுந்திறனை இழந்தவள் போல் ஆகியிருந்தேன்.

நந்திக்கடல் கடந்து கடற்படைத்தளபதி சூசை அவர்களைச் சந்திக்க என்று முல்லைக் கடல் நோக்கிப் பயணிக்கையில் பேச வரா விட்டாலும் ஆனந்தமாக இருந்தது

(தொடரும்)

சந்திரவதனா
28.1.2010


நந்திக்கடல் தாண்டி... 2
நந்திக்கடல் தாண்டி... 3
Last Updated on Friday, 07 November 2014 21:00