home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 45 guests online
முகங்கள் (குறும்படம்) PDF Print E-mail
Arts - சினிமா
Written by அ. யேசுராசா   
Wednesday, 13 November 2013 22:50
(80 நிமிடங்கள்)

மது மக்களின் இடப்பெயர்வு வாழ்வின் துயரநிலைகளைப் பற்றியதாகப் படக்கதை அமைந்துள்ளது. 1992இல், ஓர் இராணுவ நடவடிக்கையால் தெல்லிப்பழையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து, மல்லாகத்திலுள்ள தெரிந்த ஒருவரின் வீட்டில், மனைவி அகிலாவுடனும் கைக்குழந்தையுடனும் சந்திரன் தங்குகிறான். வீட்டுத்தலைவியின் சுமுகமற்ற இயல்பு – நாள் செல்லச்செல்ல இயலாமையில் அதனுடன் இழுபடும் வீட்டுத் தலைவரின் போக்குகள், ஆதரவுகாட்டும் அவரது மகள், சந்திரனின் பணக் கஷ்டத்தில் உதவும் தெரிந்த ஒருவரின் ஆதரவு, தொழிலற்ற நிலையில் கிளாலியைக் கடந்து செய்யும் வியாபாரத்தில் தன்னுடன் அவனை இணைத்துக்கொள்ளும் இன்னொரு நண்பன், வன்னிக்கு வரும்படியும் வந்தால் தோட்டம்செய்யத் தனது காணித் துண்டொன்றைத் தந்துதவுவதாகச் சொல்லும் நண்பனது உறவினர் என, வெவ்வேறு மனிதர்களின் குணவியல்புகளை – முகங்களை -  நாம் தரிசிக்கச் செய்கிறது படம்.

வீட்டுக்காரரின் மகளின் கணவன் வெளிநாட்டில் ; இங்கு மனைவியும் சிறு குழந்தையும். செல்வ வளம் இருக்கிறது; ஆனால். உறவுத் தொடர்பு – வாழ்க்கை என்பது – வெறுமனே கடிதங்களிலும், ‘நிழற்பட அல்பங்’களிலும், கொழும்பு சென்று தொலைபேசியில் கதைப்பதிலும்தான். சந்திரனின் குடும்பம் வறுமையில் உள்ளபோதிலும் இயல்பான, கணவன் – மனைவி – குழந்தை இணைந்த உயிர்ப்பான வாழ்வைக் கொண்டுள்ளது. இதனை அடிக்கடி பார்க்கநேர்கையில், ‘வெளிநாட்டுக் கணவனால்’ தான் யதார்த்தத்தில் இழந்துவிட்ட ‘வாழ்க்கை’பற்றிய அந்த இளம்பெண்ணின் ஏக்கம், நமது சமூகத்திலுள்ள வெளிநாட்டு மோகத்திற்கு மறைமுகமாய்ச் ‘சூடு’ கொடுப்பதாகவும் உள்ளது. கிளாலிப் பயணத்தின் அபாயம், அவலம், கடற்புலிகள் வழங்கும் பயணப் பாதுகாப்பு என்பன -  கலாரீதியான ஆவணத் தன்மையைக் கொண்டிருப்பதான முக்கியத்தையும் இன்று உணர முடிகிறது.

இடம்பெயர்ந்து மல்லாகத்திலுள்ள வீட்டிற்குச் சந்திரன் குடும்பம் வந்தபின்,கொண்டுவந்த சாமான்களை வெளியிலெடுத்து அடுக்கும்போது, உடைந்திருக்கும் பீங்கானொன்று காட்டப் படுவது அவர்களது வாழ்வின் குறியீடாக உள்ளது. சாப்பாட்டிற்கு வழியில்லை என்றபோது, இருந்த ஒரேயொரு சிறிய சங்கிலியைக் கழற்றிக் கணவனிடம் அகிலா தருகிறாள் ;அடுத்த காட்சியில் வீட்டுக்காரரின் மகளது கை ஏராளமான தங்கக் காப்புகளைக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. ஒரே சூழலில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடனுள்ள மனித வாழ்நிலையை இந்தச் ‘சட்டங்கள்’ (frames) அழகாக வெளிப்படுத்துகின்றன. கஷ்ட நிலைமை யிலும் மற்றவருக்கு உதவியாக நடந்துகொள்ளுதல் – பொருளாதாரக் கஷ்டத்தில் சீதனப் பணத்தைக் குறிப்பிட்டுக் கோபத்துடன் மனைவியைப் பேசிவிட்டுச் சென்று, இடையில் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு வந்து மனைவியிடம் மன்னிப்புக் கேட்டல் என்ற சந்திரனின் நல்லகுணம் இயல்பாய் மனதில் பதிகிறது. உதவிக்கு மா இடித்துக் கொடுக்க வீட்டுக்காரி ‘கூலியாக’ப்  பணம் தரும்போது அதனை வாங்க அகிலா மறுத்துவிடுவது, ஏழ்மைநிலையிலும் அவள் கொண்டுள்ள தன்மான உணர்வை வெளிக்காட்டுகிறது. கிளாலி வியாபாரத்தின் போது பற்றரிகள் தரலாமென ஒரு வியாபாரி சொன்னபோது, “அண்ணே அவர் ஆற்ற ஆள் தெரியுமா?” எனச் சொல்லி வாங்கவேண்டாமென( அவன் படையினருடன் தொடர்புள்ளவன் என்பதால்) நண்பனிடம் கூறும்போது, அரசியல்சார்ந்து ‘தன்மான உணர்வு’ வேறுவிதமாக வெளிப் படுவதையும்காணலாம்.

யுத்தம் நடைபெற்ற காலத்தின் ஒரு வாழ்க்கைக்கோலத்தை, இயல்பான சாதாரண பாத்திரங்களின் மூலமாக இப்படம் மனதில் பதிக்கிறது. காட்சிரூபப் பண்பு அழகிய ‘சட்டங்களாக’ப் படமெங்கும் விரவியிருக்கிறது; திரைப்பட ஆர்வலரைச் சந்தோஷப் படுத்துவது அது. பின்னிசை சில இடங்களில் மேலோங்கியிருப்பது தொழில்நுட்பக் குறையாயினும், உள்ளடக்கம் சார்ந்தும் காட்சி வெளிப்பாடு சார்ந்தும் தாக்கமான திரைப்பட அனுபவத்தைத் தருவதில், இது முக்கியமான கலைப்படைப்பாகிறது; இதன் நெறியாளர் ஞானரதன் மதிப்பிற்குரியவராகிறார்!      

 - அ. யேசுராசா (Athanas Jesurasa)
- 2002

Last Updated on Monday, 13 October 2014 07:26