home loans
கிஷன் சந்தர்! PDF Print E-mail
Blogs - Latest
Written by அ. யேசுராசா -   
Tuesday, 04 March 2014 23:24

 

   மிழ்ப் புனைகதைத்துறையில் மனத்தைப் பிணிக்கும் முற்போக்கிலக்கியக்காரர் யார்? என்று யோசிக்கையில், ‘ரொம்பச்’ சங்கடமாய்த்தான் இருக்கிறது. ஓரிருவரை ஏதோ சும்மா சொல்லலாம்; சிலரின் சில படைப்புகளையும் குறிப்பிடலாம். ஆனால், உருதிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழில் வெளியான ஏழெட்டுப் படைப்புகளுக்கூடாகவே கலை மேதைமையை வெளிக்காட்டுபவராக, இலக்கிய மனத்தை ஆகர்ஷிப்பவராக கிஷன் சந்தர் இருக்கிறார். இலக்கியக்கலையின் அடிப்படைகளான அனுபவப் பங்கேற்றல் – தொடர்ந்த அனுபவ உக்கிரஹிப்பு, வடிவப்பிரக்ஞை, எழுத்தை ஆளும் ஆற்றல் பற்றிய பலவீனங்கள் எமது எழுத்தாளர்களின் குறைபாடுகளென்றால், இக்குறைபாடுகளற்றவராக கிஷன் சந்தரை நாம் கொள்ளமுடியும். நண்பர் பெனடிக்ற்பாலன் முன்பொருமுறை கதைக்கையில் ‘அன்பு, காதல் போன்ற அகவய விஷயங்களென்றால் எழுதுவது சுலபம்; சமூகம், பொருளாதாரம் தொடர்பான விடயங்களை இலக்கியமாக்குவது கடினம்.அதனால்தான் முற்போக்கிலக் கியங்களில் கலைத்துவம் குறைகிறது’ என்ற பொருள்படச் சொன்னார்; வேறுசில ‘அழகியல்வாதிகளும்’ இவற்றை இலக்கியத்துக்குரிய ‘பொருள்களாக’க் கருதவில்லை. இக்கருத்துகளுக்கெதிரான ‘பதிலாக’ கிஷன் சந்தரின் படைப்புகள் இருக்கின்றன; உண்மைக் கலைஞன் இத்தகைய ‘வரையறுப்புகளை’ நிச்சயம் வெற்றி கொள்வான்தான்.

     ‘முதலாளித்துவ சக்திகள் மேலும் மேலும் பலமிழக்கின்றன; தொழிலாளர் இயக்கங்கள் மேன்மேலும் முன்னேறிவருகின்றன; இது, வரலாற்றின் தவிர்க்கவியலாப் போக்கு’ என இடதுசாரி அரசியற் பத்திரிகைகளில் நாம் காணும் சுலோகங்கள் தரும் பாரிய செய்தியையே, ‘அணைந்திடும் சுவாலை’யில் கிஷன் சந்தர் தருகிறார்; ஆனால், சுலோகமாக அல்லாமல், கலையாக – சிறுகதை வடிவத்தில். சம்பவங்களின் இயல்பான போக்கில் முதலாளியின் கையாளினது ஆற்றாமையூடாக, கதையின் சாரமாக இது வெளிப்படுத்தப்படுகிறது

 (இதே‘செய்தி’ வேறொரு கலை ஊடகத்தில் – ‘அந்திரேய் வாஜ்தா’வின் ‘வாக்களிக்கப்பட்ட நிலம்’ – Promised Land – என்ற போலந்துத் திரைப்படத்தில்,கலைத்துவமாக வெளிப்படுத்தப் படுவதனையும் இங்கு நினைவுகூரலாம்.).


மனிதனின் ‘சுயஇருப்புநிலை’ உன்னதமானதுதான். மதவாதிகள் சொல்வதுபோல் ‘உள்ளிருந்து வருபவை’ அல்ல மனிதனைக் கீழ்மையடையச் செய்வது; புறத்திலிருந்து வருபவைதான். அடிப்படைத் தேவைகளின் பூர்த்திக்குத் தடையான புறநிலைமைகள் காரணமாக, ‘மனிதநிலையிலிருந்து பிறழ்ந்துபோகிறான்; புறவயத் தேவைகளின் பூர்த்தியில் அவனது ‘சுய மனித இருப்பு’ தோற்றங்கொள்கிறது. கருத்துமுதல்வாதிகளுக்கெதிரான பொருள்முதல்வாதிகளின்  ‘புறவய நோக்கு’, சில பாத்திரங்களின் இயக்கத்தினூடாக, ‘நான் யாரையும் வெறுக்கவில்லை’ சிறுகதையில் கலாபூர்வமாக வெளிப்படுகிறது,

     அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கும் கலாசாரச் சீரழிவுகளுக்குமெதிரான கொரிய மக்களின் போராட்டத்தினை, ‘ஆசியா விழித்துவிட்டது’ சொல்கிறது. தலைப்பினூடாகப் பார்க்கையில், ‘கட்டறுக்க’ முனையும் முழு ஆசியாவினதும் குறியீடாகவே ‘கொரியா’வை அவர் காண்பதும் தெரிகிறது. பெரிதாய்ப் பேசப்படும் ‘புனிதக் காதலின்’ நீடித்திராத – எல்லைக்குட்பட்ட – தன்மையை, புறநிலை நிர்ப்பந்தங்களால் அது ‘உருவழிந்து’போவதை ரோமியோ – ஜூலியற், லைலா – மஜ்னு, இன்னுமொரு உருதுக் காவிய ஜோடி ஆகியோரின் இன்னொருபக்க வாழ்வைக் கற்பனையில் காட்டுவதன்மூலம், ‘காதலுக்கு அப்பால்’ என்ற நாடகத்தில் எள்ளலாக வெளிப்படுத்துகிறார். துயர் நிறைந்த 1942 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம், ‘நான் சாகமாட்டேன்’ குறுநாவலில் சித்திரிக்கப்படுகிறது. ஒருவேளை உணவின்றி மக்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிகின்றனர்; பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் நரிகளுக்கும் அவர்களை இரையாக்கிவிட்டு, உறவினர் செல்கின்றனர். சிலபிடித் தானியங் களுக்காக, ஒருசில காசுகளிற்கு, தாய் தன் குழந்தையை விற்கிறாள்; கணவன் மனைவியை விற்கிறான்; சகோதரன் சகோதரியையும், தாய் தன் மகளையும் விற்கிறாள். சமயம், ஒழுக்கம், ஆத்மிகம், தாய்மை என்றெல்லாம் கூறப்படும் வலுமிக்க இலட்சியங் கள் உரிந்தெறியப்பட்டுவிட்ட நிலை. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலம் உயிர்ப்புக்கொண்டு எம் நெஞ்சை உலுக்குகிறது; இந்த அவலத்திடையிலும் உல்லாசமாக வாழும் அதிகாரிகளின் போக்கு எமக்கு ஆத்திரத்தையும் எழுப்புகிறது. மக்கள் பட்டினியால் சாகின்றனர்; அதிக உணவைச் சாப்பிட்டதால் வயிறு வெடித்தே அவர்கள் இறப்பதாக, அதிகாரிகள் கருதுகின்றனர். தம் இருப்பிடத்திற்கு வெளியே மனிதப் பிணங்களின் துர்நாற்றம்; உள்ளே ‘சென்ற்’ வாசனை பரவும் இளம் பெண்களுடன் நடனமிடுவதுபற்றிய அவர்களின் ஏக்கம். எள்ளல் நிரம்பிய நடையில் இவற்றைச் சுட்டி, எமதுகோபத்தைக் கிளறுகிறார்.

 

தமது படைப்புகளில் பாரிய கருத்துகளைச் செய்திகளாகத் தருகையிலும் ஸ்தூலமான கருத்துகளாக, வெளியிலிருந்து தரப்படுவனவாக அல்லாமல் கதைப்போக்கில், ‘தன்னியக்க மாக’ – சூசனை உணர்த்தலாகக் கிஷன் சந்தர் தருவதாற்றான், எமக்குக் கலையனுபவம் சித்திக்கின்றது; வாசகநிலையில் எம்மை நிரம்பப் பாதிப்பவராகவும் அமைகிறார்.

 

    மனித இச்சையை மீறிய இறப்பு, அவரையும் கவ்வியது. 08.03.1977 இல் அவர் மரணமானார்; அப்பொழுது அவருக்கு 62 வயது. சமகால எழுத்தாளரும் நெருங்கிய நண்பருமான ‘முல்க்ராஜ் ஆனந்’. கிஷன் சந்தரை ஒரு Legend ஆகவே வர்ணிக்கிறார்.

 

     தாய்மொழியாகிய உருதுவில் 50க்கு மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்; அவற்றில் பல பிற உலக மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இலக்கிய சேவைக்காக பாரத அரசின் ‘பத்ம பூஷண்’ பட்டத்தையும், சோவியத் நாட்டின் ‘நேரு பரிசி’னையும் அவர் பெற்றிருந்தார்.


     கிஷன் சந்தரின் மிகக் குறைந்த படைப்புகளே தமிழில் வந்துள்ளன. வெறும் சுலோகங் களும், கருத்துகளும் நிறைந்த ‘வரட்டுப் படைப்புகளே’ முற்போக்குக் கலையாக நம்பப்படும் நமது  மந்தநிலையை மாற்றுவதற்கு, கிஷன் சந்தரின் படைப்புகள் அதிக அளவில் வெளிவருதல் உதவியாக இருக்கும்; அது ஆற்றல்வாய்ந்த அக்கலைஞனுக்கு நாம் செலுத்தும் பெரும் அஞ்சலியாகவும் அமையும்!

- அ. யேசுராசா

                                                                                             - அலை8

                                                                                               பங்குனி – சித்திரை 1977