home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 24 guests online
கடந்து வந்த நமது சினிமா - 6 PDF Print E-mail
Arts - சினிமா
Written by மூனா   
Sunday, 12 October 2014 21:36
ஆங்கில விரிவுரையாளருக்கு திரைப்படம் எடுக்கும் ஆவல் வந்து கடமையின் எல்லை  திரைக்கு வந்தது. இப்பொழுது திரைப்படம் எடுக்கும் ஆசை ஒரு விஞ்ஞான ஆசிரியரைத் தொற்றிக் கொண்டது. யாழ் வட்டுக்கோட்டை கல்லூரி  விஞ்ஞான ஆசிரியர் திரு யோ. தேவானந் அவர்கள் திரைப்படத்தின் மேல் உள்ள ஆவலால் தனது ஆசிரியர் பதவியையே துறந்தவர். விரிவுரையாளர் வேதநாயகத்தினைப் போலல்லாமல் இவர் திரையுலகில் ஆழக்கால் பதித்தவர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த திரு யோ. தேவானந், அந்த நகரத்தில் இருந்த தெய்வேந்திரா திரைப்பட மாளிகையின் உரிமையாளரின் மகனாவார். ஆகவே அவருக்குத் திரைப்படத் துறையில் ஈடுபாடு வந்ததைப் பற்றி விரிவாகச் சொல்லத் தேவையில்லை.

தனது இணைஆசிரியர் திரு தேவகுலதுங்கா எழுதிய பாசநிலாவை 16 மில்லி மீற்றரில் ரெக்னிக் கலரில் உருவாக்கி 1965இல் வெளிக் கொணர்ந்தார். பாசநிலா திரைப்படத்தில் பங்கு பற்றியவர்கள் அநேகமாக பாடசாலை மாணவர்களாகவும் பாடசாலை அலுவலகர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள். இசையமைப்பைக் கூட பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயின்று கொண்டிருந்த எம்.எச்.ஹக் அவர்களே மேற்கொண்டிருந்தார். பாசநிலா வெளிவந்தும் எந்த ஒரு திரையரங்குகளிலும் காண்பிக்கப்படவில்லை. அது 16 மில்லி மீற்றரில் இருந்தது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது. திரையரங்குகளில் காண்பிக்கப்படாவிட்டாலும், யாழ்ப்பாண நகர மண்டம், கொழும்பு சரஸ்வதி மண்டபம், மற்றும் யாழ்ப்பாண பாடசாலைகள் என்று பாசநிலா மக்கள் காட்சிக்காக காட்டப்பட்டன. இத் திரைப்படத்துக்கு உள்ள சிறப்பு என்னவென்றால்  லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் மண்டபத்தில் காண்பிக்கப் பட்டதாகும். லண்டனில் திரையிடப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப்படம் என்ற பதிவை பாசநிலா பதித்து வைத்திருக்கின்றது.

பாசநிலா திரைப்படத்தின் பின் திரு யோ. தேவானந்தின் பார்வை சிங்களத் திரைப்பட உலகின் பக்கம் சென்று விட்டது. இவர் தயாரித்த கீதா என்ற சிங்களத் திரைப்படம் 15.07.1970 இல் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் தந்த வெற்றியால் இவர் தொடர்ந்து பல சிங்களத் திரைப்படங்களை நெறியாண்டார். இவர் நெறியாண்ட சுஜீவா (1970), சுனிதா(1973), ஒபே மமாய்(1975), மினிசுன் ஆதர மனிதெக்(1979) என்பன சிங்களத்திரையுலகில் இவருக்கு அசையாத புகழை ஈட்டித் தந்தன.

இலங்கை இந்தியா கூட்டுத் தயாரிப்பில் உருவான பைலற் பிரேம்நாத் படத்தின் இணை இயக்குனராகவும் இவர் இருந்திருக்கின்றார். 1980இல் முக்கிய பாத்திரங்களில் இந்தியக் கலைஞர்கள் நடித்து, இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்ட இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தை திரு யோ. தேவானந்தே இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர். தனது அரசியலுக்குப் பயன்படுத்திய வாசகமாகிய இரத்தின் இரத்தமே என்ற வாக்கியங்களை படத்தின் தலைப்பாகக் கொண்டிருந்ததால் இத்திரைப்படம் அதிக எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. அதிகளவு எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது.

ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், நாகேஸ், அசோகன், ராதிகா போன்ற பிரபல்யமான தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப் படத்தில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான கவர்ச்சி காட்டி இலங்கைச் சிங்களத் திரைப்பட நடிகைகளான கீதா குமாரசிங்காவும், அனோஜா வீரசிங்காவும் நடித்திருந்தனர். இந்திய மசாலா திரைப்படத்துக்கு மேலான அத்தனை விசயங்களையும் கலந்து ஒரு கூட்டு  மசாலாவை திரைக்குத் தந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டி தமிழிலும் வெற்றிப் படங்கள் தயாரிக்கும் உத்தியை திரு யோ. தேவானந் கையாண்டிருந்தார்.

இரத்தத்தின் இரத்தமே இலங்கையில் தொடர்ந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடியது மட்டுமல்லாமல் இந்தியாவில் திரையிடப்பட்ட முதல் இலங்கைத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.

ஆக மொத்தத்தில் லண்டனிலும், இந்தியாவிலும் திரையிடப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப் படங்களினைப் படைத்த பெருமை திரு யோ. தேவானந் அவர்களையே சேர்கிறது.

திரு யோ. தேவானந் தந்த பாசநிலா திரைப்படத்தில் அறிமுகமான ஏ.ஈ.மனோகரன் இன்றுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டார். இலங்கை வானொலியில் துள்ளிசைப் பாடல்கள் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் எனச் சொன்னால் இவரது பாடல்களைச் சொல்லலாம். கோட்டுப் போட்ட முதலாளிக்கு கொழும்பிலைதான் கல்யாணம்... என்ற பாடலை இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான பைலற் பிரேமநாத் படத்திற்காக இவர் பாடியிருக்கின்றார். அவர் எனக்கே சொந்தம் என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஏ.ஈ.மனோகரன், தனது பிரபல்யமான பாடலான சுராங்கனி... சுராங்கனி.. மாலு கெனவ.. என்ற பாடலையும், விரும்புகிறேன் திரைப்படத்தில் பத்தலை.. பத்தலை.. என்ற பாடலையும் பாடியிருக்கின்றார்.

இலங்கை சங்கானையைச் சேர்ந்த வி.சி.குகநாதன் மூலம் அவர் இயக்கித் தயாரித்த மாங்குடி மைனர் திரைப்படத்தினூடாக தென்னிந்தியத் திரையுலகில் நுளைந்த ஏ.ஈ. மனோகரனுக்கு அங்கு கிடைத்ததெல்லாம் எதிர்மறையான பாத்திரங்களே. வில்லனாக, வில்லனின் அடியாளாக வந்து பத்தோடு பதினொன்றாகி விட்டார். சென்ற வருடம் தீபாவளிக்கு வந்த ஜேஜே படத்தில் நடித்திருந்தார். அவரின் அடையாளமான சாயிபாபா வடிவில் இருந்த சிகை அலங்காரத்தை ஜேஜே இல் காணவில்லை. சமீபத்தில் வந்த தென்றல் படத்தில் சுப்புவின் அப்பாவாக ஓரிரு நிமிடம் வந்து போகின்றார்.

சென்ஜோன்ஸ் பாடசாலையின் பழைய மாணவர் குறிப்பொன்றில், எங்கள் பாடசாலையில் படித்த மாணவரான ஏ.ஈ.மனோகரன் ஒரு பிரபல்யமான பொப் பாடகர் என்ற குறிப்பு இருக்கின்றது. உண்மைதான் தனது துள்ளல் இசை மூலம் பிரபல்யமான அளவுக்கு ஏ.ஈ.மனோகரன் திரையுலகில் ஏனோ பரிணமிக்கவில்லை.

(இனியும் வரும்)

- மூனா
 7.11.2004 

கடந்து வந்த நமது சினிமா - 1
கடந்து வந்த நமது சினிமா - 2 
கடந்து வந்த நமது சினிமா - 3
கடந்து வந்த நமது சினிமா - 4
கடந்து வந்த நமது சினிமா - 5
கடந்து வந்த நமது சினிமா - 6
Last Updated on Sunday, 12 October 2014 22:00