home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 26 guests online
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Wednesday, 10 June 2015 09:51
அடுத்தநாள் மாலை, சிவா மாஸ்ரர் சொன்னபடியே நேரம் தவறாமல் எங்களை அழைத்துப் போக வாகனத்தை அனுப்பி இருந்தார்.

நவம் அறிவுக் கூடத்திற்கான பயணம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் நான் அந்தப் பாதையில் பயணித்ததால் எனக்கு கொஞ்ச அனுபவமும் கூடவே அவதானமும் இருந்தது. ஆகவே வாகனத்தில் இருந்த கம்பியை இறுகப் பிடித்திருந்தேன். எனது மனைவியும், கொல்கரும் பயணத்தில் சிரமப் பட்டார்கள்.

நாங்கள் நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்ற பொழுது அங்கே மாலை நேர விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. கைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் என மைதானமே களைகட்டி நின்றது.

சிறுவயதில் கெந்தி விளையாடும் பொழுது ஒரு காலில் தொடர்ந்து கெந்த முடியாமல் சமநிலை தவறி மறு காலையும் ஊன்றி விட்டு, அளப்பி விளையாடியது அப்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தது. இங்கே சிலர் ஒரு காலோடு கைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கொல்கர் ஆச்சரியப் பட்டுப் போனான். இது உண்மையில் அதிசயம் என்றான். இரண்டு கால்கள் கொண்டு இவர்களது வேகத்துக்கு தன்னாலேயே விளையாட முடியாது என்றான்.

ஒரு காலை இழந்து விட்டாலும் அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையையும், விளையாட்டுக்கான பயிற்சியையும் வழங்கிய சிவா மாஸ்ரர் அங்கே அமைதியாக நின்றார். விளையாட்டு முடிந்ததும் ஒரு காலோடு நடனமும் ஆடினார்கள். விளையாட்டில் வென்றவர்கள் மட்டுமல்லாது தோற்றவர்களும் சேர்ந்தே ஆடி மகிழ்ந்தார்கள்.

இளநீர் தந்தார்கள். கொஞ்சம் முன்னர் வந்திருந்தால் இன்னும் பல விளையாட்டுக்களைப் பார்த்திருக்கலாம் என்றார்கள்.

வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் அங்கே ஒரு தடவை போய் வந்தால் தன்னம்பிக்கை என்பது தானாக வந்து விடும்.

சிவா மாஸ்ரர் எங்களை பார்வை இழந்தவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போனார். நாங்கள் வந்து விட்டதை தெரிந்து கொண்டு அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடி வரிசையாக வந்து அமர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு பொறுப்பாளர் இருந்தார். அவர் பெயர் கலைக்கோன். தெளிவாகக் கதைத்தார். அவருடன் உரையாடும் பொழுதே புரிந்து விட்டது, அவர் ஒரு அறிவாளி என்று.

„நாங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம்' என்று கலைக்கோனிடம் சொன்னேன்.

„நல்லது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களே அவர்களிடம் கேளுங்கள்' என்றார்.

„உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கஸ்ரோ சொல்லி இருக்காவிட்டால் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமல் போயிருக்கும்' என்று அவர்களிடம் சொல்லி விட்டு, „உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் உதவலாம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். உங்களது தேவைகளைச் சொல்லுங்கள்' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

உடனேயே ஒருவர் பதில் தந்தார் „எங்களுக்கு கண்தான் தேவை'

சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஏன் அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது கொல்கருக்கு தெரியவில்லை. அவனுக்கு விளக்கம் சொன்னேன் இப்பொழுது கொல்கரும் சேர்ந்து சிரித்தான்.

ஒரு முறையான கண் நிபுணரால் அவர்களுக்கு உதவ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அது விடயமாக யாராவது விபரங்கள் தெரிந்தவர்கள் உதவலாம் என நினைத்தேன்.

இசைக்கருவிகள், தட்டச்சு இயந்திரம் மற்றும் பார்வை இழந்தவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் எனப் பலதை தேவை என்றார்கள். குறித்துக் கொண்டேன்.

„ரைப் றைட்டர் வாங்கங்கை அதுக்கான பேப்பரும் வேணும். அது இஞ்சை எடுக்கிறது கஸ்ரம்' என்று கலைக்கோன் தன் பங்குக்குச் சொன்னார்.

பெரிதாக அவர்களும் எதுவும் கேட்கவில்லை. தாங்கள் பார்வையை இழந்து விட்டாலும் ஏதோ ஒரு வகையில் உலகை அறிந்து கொள்ளும் தங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவித்திருந்தார்கள்.

அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஆனாலும் இது பரந்தளவில் செய்யப்பட வேண்டிய விடயம். ஆகவே இதை புலம் பெயர்ந்து வாழும் தமிழர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். „நீங்கள் ஒரு தடவை ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாமே. அங்குள்ள தமிழர்கள் உங்களை நேரடியாக காணும் பொழுது பலன் அதிகமாக இருக்கும்' என்று கலைக்கோனிடம் சொன்னேன்.

சிரித்து விட்டுச் சொன்னார். „அதெல்லாம் நடக்கிற காரியமே? உள்ளூருக்குள்ளேயே நடந்து திரியறதுக்கு ஒரு ஆள் எனக்குத் தேவைப்படுது„

அன்று அவரிடம் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும் அவர் அதை மனதில் பதிய வைத்திருந்தார் போலும். ஒரு தடவை அவர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களை வந்து சந்தித்தார். ஆனால் அவர் யேர்மனிக்கு வந்திருந்த பொழுது என்னால் அவரைப் போய் சந்திக்க முடியாமல் போயிற்று.

மீண்டும் குண்டும் குழியுமாக இருந்த பாதையினூடாக வெண்புறா நிலையத்துக்கு வந்தோம்.

அடுத்தநாள் காலை வெண்புறா பொறுப்பாளர் அன்ரனி எங்களது நவம் அறிவுக் கூட அனுபவங்களைக் கேட்டார். எங்கள் அனுபவங்களைச் சொன்னேன்.

„இங்கே இனியவாழ்வு இல்லம் எண்டு ஒண்டு இருக்கு. அங்கேயும் பார்வை இல்லாத பிள்ளையள் இருக்கினம். பார்வை இல்லாமலே அட்வான்ஸ் லெவல் படிக்கிற மாணவர்களும் இருக்கினம். அந்த இல்லத்துக்கு நான்தான் பொறுப்பு. நீங்கள் நவம் அறிவுக் கூடத்திற்கு பொருட்கள் கொண்டு வரக்கை ஏலுமெண்டால் இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளுக்கும் கண்தெரியாத ஆக்கள் படிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாங்கோ'

வரவர சுமைகள் அதிகமாவது புரிந்தது. இவ்வகையான இல்லங்களுக்கான வேலைத் திட்டங்களை தாயகத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாட்டில் இயங்கும் தனது கிளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறது. எங்களது யேர்மனிக் கிளைக்கு இனியவாழ்வு இல்லத்திற்கான வேலைத் திட்டங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அன்ரனி என்னிடம் கேட்கும் பொழுது எனக்கு „ஓம்' என்று தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

நான் ஏதாவது செய்யப் போய், அது ஏடாகூடமாக ஆகிவிடுமோ என்று பயம் இருந்தது. „இது எங்களுக்கான வேலைத் திட்டம் இல்லை. உங்களை ஆர் தன்னிச்சையா முடிவெடுக்கச் சொன்னது?' என்ற கேள்வி யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குள் வரலாம் என்ற கலக்கமும் இருந்தது. அவசரப் பட்டு தலையாட்டி விட்டேனோ என்ற ஒரு குற்ற உணர்வும் கூடவே வந்தது. எனது சங்கடமான நிலையை அன்ரனிக்கு நான் காட்டிக் கொள்ளவில்லை.

எதுக்கும் தகவலைப் பெற்று வைப்போம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அன்ரனியிடம் இனிய வாழ்வு இல்லம் பற்றிக் கேட்டேன்.

விரல் நுனியில் விபரங்களை வைத்திருந்தாரா தெரியவில்லை. கடகட வென இனியவாழ்வு இல்லம் பற்றிய தகவல்கள் அவரிடம் இருந்து வந்தன.

„ஐஞ்சு ஏக்கர் காணியிலை இனிய வாழ்வு இல்லம் இருக்கு. பிள்ளைகள் தங்கிற, படிக்கிற கட்டிடங்கள் எல்லாம் கிடுகாலைதான் மேயப்பட்டிருக்கு. மழை வந்தால் சிரமமாக இருக்கும். ரொயிலற் கூட கிடுகாலை கட்டினதுதான். எல்லாமா 64 பிள்ளையள் இருக்கினம். அதிலை 53 பேருக்கு பிறவியிலேயே குறைபாடு. இன்னும் தங்கடை பிள்ளையளையும் சேருங்கோ என்று கனக்க விண்ணப்பங்கள் வருது. இடவசதி காணாததாலை ஆக்களை எடுக்க முடியாமல் இருக்கு'

அவர் அப்படி சொல்லும் பொழுது, தகவல்களைக் காது கேட்டாலும் எனது யோசனை இதற்கு என்ன செய்யலாம் என்றுதான் இருந்தது.

சமாதானப் பேச்சு தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் வன்னிக்குப் போய் இருந்தோம். ஆகவேதான் வேண்டுதல்கள் எங்களிடம் அதிகமாகவே வந்து கொண்டிருந்தன. இன்னும் சில நாட்களிலோ வாரங்களிலோ பலர் வரப் போகிறார்கள். நிலைமைகளைப் பார்க்கும் பொழுது அவர்கள் உதவி தாராளமாக வந்து சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27
Last Updated on Sunday, 18 October 2015 07:45