home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 34 guests online
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 16 June 2015 21:15
மறுநாள் வெண்புறாவில் வெளியாட்களுக்கான கால் பொருத்தும் வேலைகளும், திருத்த வேலைகளும் இருந்தன.

பலர் செயற்கைக் கால் திருத்த வேலைகளுக்கு வந்திருந்தனர். ஒரு பெண் கால் பொருத்துவதற்காக வந்திருந்தார். அவர் பெயர் ராஜலட்சுமி. மூன்று பிள்ளைகளின் தாய். நிலத்தில் இருந்த கண்ணிவெடியில் காலை இழந்ததாகச் சொன்னார்.

கால் பொருத்திய அந்தப் பெண் தனது பயிற்சியை எடுக்கும் போது கொல்கர் கூடவே நின்று அவதானித்துக் கொண்டான்.

மாலையில் நாங்கள் தொழிற்கூடத்தில் இருக்கும் பொழுது அரசியல் துறைப் பெறுப்பாளர் வர இருப்பதாக அன்ரனி வந்து சொன்னர். நான் அங்கே இருந்த பொழுதுகளில் யாராவது வருவதாக இருந்தாலும் சரி அல்லது நாங்கள் போய் சந்திப்பதாக இருந்தாலும் சரி முன் கூட்டியே அறிவித்து விடும் ஒரு சிறப்பான வழக்கம் அங்கே காணப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனம் ஒன்று வந்தது. அரசியல்துறைப் பொறுப்பாளர் வந்து விட்டதாகச் சொன்னார்கள்.

அரசியல்துறையில் உள்ள சிலர் தொழிற் கூடத்துக்குள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவரிடம் இருந்து அவரை முந்திக் கொண்டு அவரது சிரிப்பு முன்னால் வந்தது.

அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனுக்கு இங்கே அறிமுகம் தேவை இல்லை.

உள்ளே வந்த உடன் கேட்டார் „எல்லாம் வசதியாக இருக்குத்தானே?' என்று

ஒருவரை ஒருவர்அறிந்து கொண்டோம். என்னை அண்ணர் என்றுதான் அழைத்தார். எல்லா விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

'நீங்கள் ஹொட்டேலில் தங்கலாம்தானே, அங்கே வசதிகள் எல்லாம் இருக்கு' என்றார்.

அவரது வேண்டுகோளுக்கு நன்றி சொன்ன கொல்கர் தனக்கு வெண்புறாவில் உள்ளவர்கள் நண்பர்கள் என்றும், ஹொட்டேலில் அது கிடையாது என்றும், வெண்புறா நிலையத்தில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் சொன்னான்.

கொல்கரின் பேச்சு தமிழ்செல்வனுக்கு பிடித்துப் போனது. 'உங்களுக்கு ஏதும் தேவை என்றால் எனக்கு தகவல் தாருங்கோ. மற்றது எப்ப வேணுமெண்டாலும் நீங்கள் ஹொட்டேலிலை வந்து தங்கலாம். அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்துதாறன்' என்றார்.

நன்றி சொன்னோம். மீண்டும் சந்திப்பதாகச் சொன்னர். எனது மனைவியுடனும் உரையாடி விட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அவர் சென்றதன் பின் மேலெல்லாம் செம்புழுதி படிந்திருக்க வெண்தாடி செந்தாடியாக சிரித்தபடி ஒருவர் வந்தார். அவரை இதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. ஆனாலும் என்னை நன்றாகத் தெரிந்தவர் போல் அவரது பாவனை இருந்தது. அவர் யார் என்று என்னை அவர் அதிகம் யோசிக்க விடவில்லை. 'நான் நாவண்ணன். கவிஞர் நாவண்ணன்' என்றார்.

அவரது கவிதைக் குரலை புலிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் கவிதையின் வண்ணனை உடலோடு பார்க்கிறேன்.

கவிஞர் நாவண்ணன் ஒரு கவிஞர் மட்டுமல்ல ஓவியர், சிற்பி என அவரிடம் பல கலைகள் நிறைந்திருந்தன. நாவண்ணன் எனது மனவியின் சகோதரன் தீட்சண்யனின் நண்பன். தீட்சண்யனுடன் இணைந்து புலிகளின் குரலில் கவிதைகள் தந்தவர். தீட்சண்யன் மரணித்த பொழுது 'நாற்பது என்ன நமன் கொண்டு போகும் வயதா? 'என தீட்சண்யனுக்காகக் கவிதைகளைக் கொட்டி அழுது தீர்த்தவர்.

நாவண்ணனின் மகன் விடுதலைக்காக இருபது வயதில் விதையாகிப் போனதால் உடலாலும், மனதாலும் அவர் தளர்ந்து போயிருந்தார். அவரது நரைத்து விட்ட தாடி அவரின் வயதை இன்னும் கூட்டிக் காட்டியது.

எனது மனைவியுடன் நீண்ட நேரம் தீட்சண்யன் பற்றிப் பேசினார். தன்னிடம் இருந்த தீட்சண்யனின் கவிதைகளை எனது மனைவியிடம் தந்தார். „தீட்சண்யனின் கவிதைகளை நான் உங்களுக்குத் தருவதற்குக் காரணம் இதை நீங்கள் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். ஒரு சகோதரியாக அவருக்கு நீங்கள் செய்யும் கடமையாக அது இருக்கும்' என்றார்.

அவரது வேண்டுகோள் ஏழு ஆண்டுகள் கழித்து 2009இல் சாத்தியமாயிற்று.

தீட்சண்யன் கைப்பட எழுதிய அவரது கவிதைகளைத் தரும் பொழுது, 'சந்தியிலை பெடியள் நிக்கிறார்கள் என்ற தீட்சண்யன்ரை கவிதை இதிலை இருக்கு. புலிகளின் குரலில் ஒலிபரப்பான கவிதை அது. பின்னாளில் இந்தக் கவிதையை தன்ரை கவிதை என்று புதுமை செய்த கவிஞரும் இங்கை இருக்கினம்' என்றார்.

பாண்டிய மன்னனும், குலோத்துங்க சோழனும் வெவ்வேறு அரசுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அரச புலவர்களான புகழேந்திப்புலவரும், ஒட்டகக்கூத்தரும் தங்கள் தங்கள் அரசுகளின் பெருமைகளைப் பாடிக் கொண்டார்கள். அதனால் அந்த இரு புலவர்களுக்கும் மோதல்கள் வந்திருந்தது இயல்பானது. ஆனால் இங்கே ஒரு அரசில் இருக்கும் இரு புலவர்கள் ஏன் வேறுபட்டு நின்றார்கள். அதுவும் வன்னியில் என்று எனக்குள் வந்த எண்ணத்தை அவரிடம் நான் கேட்கவில்லை.

„தாடி ஏன் சிவந்து போயிற்று?' என்று அவரிடம் கேட்டேன்.

'தாடி சிவந்ததுக்கு செம்பாட்டு மண்தான் காரணம். வண்டியும் மண்ணெண்ணையில் ஓடுவதால் ஆடியாடித்தான் பயணமும் இருக்குது' கேள்விக்கான பதிலோடு தனது ஏழ்மையை அவர் மெதுவாகச் சொன்னது புரிந்தது.

அவருடன் நீண்ட நேரம் உரையாட மனம் விரும்பியது. பல கதைகளையும் கவிதைகளையும் அவர் சொல்லும் விதமே ரசிக்கத் தக்கதாக இருந்தது. நன்கு இருட்டிய பின்னரே எங்களிடம் இருந்து விடை பெற்றார்.

மீண்டும் ஒரு நாள் கடந்து விட்டிருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் கே.பி.றெஜி குணமாகி விட்டதாகவும் எங்களை வந்து சந்திப்பார் எனவும் தகவல் வந்தது. அவர் வரவுக்காகக் காத்திருந்தேன். நாங்கள் சந்திக்க வேண்டிய முக்கியமானவராக ரெஜியே இருந்தார். ரெஜியின் பொறுப்பின் கீழேயே எங்களது செயற்பாடுகள் இருந்தன. அவரைச் சந்திக்கும் பொழுது எங்களுக்குத் தேவையானதை இலகுவாகப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. குறிப்பாக அப்பொழுது இருந்த சூழ்நிலையில் வன்னியில் எங்களது தொலைபேசி இயங்கவில்லை. முற்று முழுதாக வெளி இடங்களுக்கும், எங்களுக்குமான தொடர்பாடல் இல்லாமலும் இருந்தது.

யேர்மனியில் நாங்கள் விட்டு வந்த பொருட்கள் என்னவாயிற்று என்று அறிய ஆனந்தண்ணையை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. ஒரு வேளை அந்தப் பொருட்கள் வராமலே போய் விட்டால் மாற்று வழி என்ன? இவற்றிற்கெல்லாம் ரெஜியைச் சந்தித்தால் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். எதிர்பார்த்தபடி ரெஜி என்னை வந்து சந்தித்தார். அவரைப் பார்த்த பொழுது இவரை எப்படி நோய் தாக்கும் என்ற எண்ணமே வந்தது. உருண்டு திரண்டு திடகாத்திரமாக இருந்தார். அவரிடம் மலேரியா கிருமிகள் முயன்று பார்த்து தோற்றுப் போய் இருக்க வேண்டும். நோயில் விழுந்திருந்தவர் போல் இல்லாமல் மிகமிக உற்சாகமாகக் காணப்பட்டார்.

ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். கொல்கரை ரெஜிக்கு அறிமுகம் செய்தேன். சில நிமிடங்களில் பலநாள் நண்பர்கள் போல் தெரிந்தார்கள்.

எங்கள் செயற்பாடுகள் பற்றிக் கேட்டார். சொன்னேன் முக்கியமாக ஆனந்தண்ணையோடு தொடர்பு கொள்ள வேண்டிய அவசியத்தைச் சொன்னேன்.

தனது அலுவகத்துக்குக் கூட்டிப் போனார். தொலைத்தொடர்பு ஏற்படுத்தி ஆனந்தண்ணை என்னோடு உரையாட ஏற்பாடு செய்து தந்தார்.

„அந்தப் பொருட்களை ஏற்கெனவே குடுத்து விட்டிட்டம்' ஆனந்தண்ணை பதில் தந்தார்.

„இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை'

„நாட்டுக்கு வெளிக்கிட்டவை உடனை வன்னிக்கு வருவினம் எண்டு எதிர்பார்க்கக் கூடாது. கொழும்பிலை எங்கையாவது சுத்தலாம். ஆனாலும் பொருள் அங்கை வரும்' ஆனந்தண்ணையின் பதில் இப்படியாக இருந்தது.

வரும் ஆனால் எப்பொழுது வரும்? தெரியாமல் தவிப்பாக இருந்தது. ஒருவேளை இன்னும் சில நாட்களில் வராமலே போய் விட்டால் வந்த வேலை முற்றுப் பெறாமலே நாங்கள் யேர்மனி திரும்புவதைத் தவர வேறு வழி இல்லை.

மனது மெதுவாக சோர்வடைய ஆரம்பித்தது உற்சாகம் என்னிடம் சொல்லாமல் என்னை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27
Last Updated on Sunday, 18 October 2015 07:45