home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 14 guests online
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 29 June 2015 12:29
அன்று யேர்மனியத் தொழில்நுட்பத்தில் கால் செய்யும் விடயங்கள் பற்றிய செயற்பாடுகள் இருந்ததால் "மாலை வரை பார்ப்போம் மாறவில்லை என்றால் வைத்தியசாலைக்குப் போவோம்" என கொல்கர் சொன்னான்.

செயற்கைக்கால் செய்யும் முறைகளும், பொருத்தியதன் பின்னரான பயிற்சிகளும் அடங்கிய ஒரு வீடியோவை காண்பித்து, கொல்கர் அதற்கு விளக்கம் கொடுத்தான்.

பின்னர் தகரத்தினால் செய்யப் படும் கால்களில் தான் கண்ட குறைபாடுகளை அடுக்கினான்.

„தகரத்தில் செய்யப்படும் கால்களுக்கான அளவுகளை துல்லியமாக அளவிட வாய்ப்பில்லை. காலுடன் பொருத்தப்படும் இடத்தில் கடினமான இறப்பர் வைத்துத் தைக்கப் படுகிறது. இது காலுக்கு வீணான எரிச்சலைத் தருகிறது. மேலும் நடக்கும் பொழுது அந்த இடத்தில் ஏற்படும் உராய்வினால் புண்களும் ஏற்படும். சரியான அளவுகள் எடுக்காத பட்சத்தில் செயற்கைக் கால் பொருத்தப்படும் கால் பகுதி சோர்ந்து சுருங்கிப் போய்விடும். நடக்கும் பொழுது சமநிலை இல்லாததால் முதுகெலும்பில் வளைவுகள் ஏற்பட்டு வேறு பிரச்சினைகள் வரும். நான் வெண்புறா பதிவேட்டைப் பார்த்தேன். அதில் இதுவரை 1197 பேர்களுக்கு கால்கள் பொருத்தப் பட்டதாக இருக்கிறது. ஆனால் திருத்தவேலைகள் மட்டும் 9893 தடவைகள் நடந்திருக்கின்றன. சராசரியாகப் பார்த்தோம் என்றால், ஒரு காலைப் பொருத்தியவர் அதன் திருத்த வேலைகளுக்காக ஒன்பது தடவைகள் அதுவும் ஒரு குறுகிய காலத்துக்குள் வந்திருக்கின்றார்... "

யேர்மனியத் தொழில்நுட்பத்தின் அனுகூலங்களைச் சொன்னான்.

„அளவுகள் துல்லியமானது. பாதிக்கப் பட்ட காலை அச்செடுத்து அதனை வைத்து செயற்கை உறுப்பைச் செய்வதால், காலுடன் அது அப்படியே பொருந்தி விடும். அப்படிப் பொருந்துவதால் செயற்கை உறுப்பை இணைப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் தேவை இல்லை. இலகுவாகக் கழட்டிப் பூட்டக் கூடியது. பாரம் குறைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக திருத்த வேலைக்கு அவசியம் இல்லை..."

மதியம் ஒரு குறிப்பிட்ட நேர இடைவேளை எடுத்துக் கொண்டு, முல்லைத்தீவில் இருந்து கொண்டு வந்த இரசாயனக்கலவையினைப் பயன்படுத்தி அதன் பலாபலன் என்ன என்பதை பரிசோதித்துப் பார்த்தான். முடிவு அவன் எதிர்பார்த்தது போல் திருப்திகரமாக அமையவில்லை.

நாளை வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருவிழாவிற்குப் போவதாலும் மறுநாள் எல்லோரும் களைத்துப் போயிருப்பார்கள் என்பதாலும் செயற்கைக் கால் செய்யும் வேலையை இரண்டு நாட்களுக்குத் தள்ளி வைத்தோம்.

வைத்தியசாலை பக்கத்தில்தான் இருந்தது. பொன்னம்பலம் வைத்தியசாலை. அங்கே பிரதான வைத்தியராக இருந்தவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் ரெஜியின் மனைவிதான்.

என்ன கடித்தது என்று தெரியவில்லை. ஆனால் கால் மட்டும் பெரிதாக வீங்கி இருந்தது. வைத்தியசாலையில் கொல்கருக்கு மருந்து எடுத்துக் கொண்டோம்.

வெண்புறாவுக்கு அன்றும் மறுநாளும் விடுதலை. நிலையத்தில் வேலை செய்கின்ற அனைவருடனும் வற்றாப்பளைக்குப் பயணமானோம். ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசித்தபடி பயணம் இருந்தது.

கரிகரன் ஓ போடு.. என்று அப்பொழுது பிரபல்யமான ஜெமினி படப்பாடலைப் பாடி எங்களைப் பிரமிக்க வைத்தான். அவனது பாட்டைக் கேட்டு நான் சில வினாடிகள் யேர்மனிக்கு என் நினைவத் திருப்பினேன். யேர்மனியில் நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் சரி அது இயக்கப் பாடல்தான். பாடினாலும் சரி, அபிநயம் பிடித்தாலும் சரி, ஏன் பேசினாலும் கூட சினிமா வரக் கூடாது. அப்படி வந்தால் அது தேசத்துரோகம் என்ற நிலைப்பாடு யேர்மனியில் இருந்தது. இயக்கம் நிலை கொண்ட இடத்திலோ „ஓ போடு' கிறார்கள். யேர்மனியில் அதிதீவிர விசுவாசத்தைக் காட்ட நினைக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது. முல்லைத்தீவுக் கடற்கரையில் ஓய்வெடுத்தோம்.

கடலைப் பார்த்த கொல்கருக்கு கொள்ளை சந்தோசம். ஒரு கதிரையைப் போட்டு அதில் அமர்ந்து கடற்காற்றை சுவாசித்து கடல் அலைகளை மிகவும் ரசித்தான். அவனது கால்வீக்கம் குறையவில்லை. எனவே கடலில் நீச்சலடிக்க அவன் விரும்பவில்லை. சிறிது ஓய்வுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம். அன்ரனியின் வீடு முல்லைத்தீவில் இருந்தது. வற்றாப்பளை அம்மனிடம் போகு முன் அன்ரனி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தைக் கண்டு வரலாம் என்ற எண்ணம் தோன்ற எங்கள் அடுத்த தரிப்பிடம் அன்ரனி வீடு என்றாயிற்று.

கடற்கரையை அண்டியே அன்ரனியின் வீடு இருந்தது. பிளாஸ்ரிக் போத்தல்களை வெட்டி அதில் இருந்து பூக்களைச் செய்து வீட்டை அலங்கரித்திருந்தார்கள்.

பிளாஸ்ரிக் போத்தல்கள் பாவனைக்கு வருமுன் எக்ஸ்ரே எடுக்கும் பிலிம்மில் ஊரில் அக்காமார்கள் பூக்கள் செய்தது நினைவில் வந்தது.

அன்ரனிக்கு அழகான பிள்ளை. அன்பான மனைவி என அவர் மனம் போல அமைந்திருந்தன. ஆனால் பின்னாளில் சுனாமி பேரலைகளில் இருவரையும் பறிகொடுத்ததும், அன்ரனி தனித்து நின்றதும் தாளமுடியாத சோகங்கள்.

இரவு வற்றாப்பளையில் நின்றோம். வயல்வெளி. ஆங்காங்கே வயல் தரையில் பாய்களை விரித்து வசதி போல் மக்கள் மகழ்ச்சியாக அமர்ந்து இருந்தார்கள்.

கொல்கரால் தரையில் அமர முடியவில்லை. கதிரையில்தான் அவனால் இருக்க முடிந்தது. பாதுகாப்புக்காக இன்னொரு கதிரை போட்டு அதில் வீங்கியிருந்த காலை வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் காட்சிப் பொருளாக அவன் இருந்தான். பலர் அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

ஒரு கொட்டகையில் சினிமாப்பாடலை ஒருவர் பாடுவது கேட்டது. அந்தப் பக்கமாக எட்டிப் பார்த்தேனன். அங்கே ஒருவர் அல்ல பலர் இருந்தனர். இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளே அங்கே இருந்தவர்கள். அவர்களது இல்லத்திற்கு கட்டிடம் தேவைப்படுகிறது. அதற்கு பொதுமக்களிடம் உதவி கேட்டு அங்கே அமர்ந்திருந்தார்கள். அந்தக் கொட்டைகையில் சில செங்கற்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஒரு செங்கல்லின் விலை பத்து ரூபாக்கள். அதை வாங்கி இனியவாழ்வு இல்லத்தின் கட்டிடத்திற்கு நன்கொடையாகத் தரவேண்டும். இதற்காகத்தான் கண் தெரியாத ஒரு சிறுவன் காசி திரைப்படத்தில் இடம் பெற்ற 'நான் காணும் உலகம் யார் காணக் கூடும்..' என்ற பாடலை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். பிறவியில் குறைபாடுகள் உள்ள இவர்களது தேவைகளை நாங்கள் பார்த்துச் செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால் இங்கே அவர்கள் உதவி வேண்டி பாடிக் கொண்டிருடிருந்தார்கள். அவர்களிடம் நூறு செங்கற்களை வாங்கி கட்டிட உதவியாகக் கொடுத்தேன். அவர்கள் கேட்ட அந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் பதிந்து வைத்தேன்.

நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு கோயில் திருவிழாவில் நின்ற பொழுது எனக்கு யேர்மனிய வாழ்க்கையே மறந்து போயிற்று. பழைய வாழ்க்கைக்கே திரும்பி விட்ட மனோநிலைதான் அப்பொழுது இருந்தது. பழைய நண்பர்கள் மட்டும் அங்கே என்னுடன் கூட இருந்திருந்தால் பொங்கல் முடிய அப்படியே பஸ் ஏறி ஊருக்குப் போயிருப்பேன்.

காலையில், வெண்புறா நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழி எல்லாம் காவடிகளுடன் பக்தர் கூட்டங்கள். எங்கள் வாகனம் பயணித்த பாதையில் காவடி, தூக்குக் காவடி என்று அமர்க்களமாக இருந்தது. கொல்கருக்கு அவை எல்லாம் புதிது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு அவற்றை எல்லாம் தனது கமராவில் உள்வாங்கிக் கொண்டான்.

முதல்நாள் பயணத்திலும், இரவு அதிகநேரம் விழித்திருந்ததாலும் எல்லோரும் களைத்திருந்தோம். அன்றும் வெண்புறா நிறுவனத்திற்கு விடுமுறை. கால்கள் திருத்த வேலைகளுக்கோ, பயற்சிகளுக்கோ வெளியார் எவரும் அங்கே வரவில்லை.

நானும் கொல்கரும் வெண்புறா நிறுவனத்தின் முற்றத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். வெண்புறா நிறுவனத்தின் வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. அப்படியான வாகனங்களில் பயணிப்பது அநேகமாக முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்தான். கணிப்பு சரியாக இருந்தது. அந்த வாகனத்தில் வந்தது ஜவாகர்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27
Last Updated on Sunday, 18 October 2015 07:35