home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 24 guests online
போவோமா கடைசித் தரிப்பிடம் PDF Print E-mail
Arts - சினிமா
Written by மூனா   
Monday, 30 May 2016 07:41
சுஜீத்ஜி யின் "கடைசித் தரிப்பிடம்" திரைப்படம் 04.06.2016இல் லண்டனில் திரைக்கு வருகின்றது. இந்தத் திரைப்படத்தைப் பற்றி சென்ற வருடம்  ஒரு பத்தி எழுதியிருந்தேன்.

http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=678:2015-10-03-17-10-36&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148


`கடைசித் தரிப்பிடம்` திரைப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்களை நாங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அல்லது ஒரு வேளை அது நாங்களாகவே கூட இருக்கலாம். ஏனெனில் படத்திற்கான கதை, புலம் பெயர் மக்களிடம் இருந்தே எடுக்கப் பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்து லண்டன் வந்து வாழ எத்தனிக்கும் பெண் ஒருத்தியை மையப்படுத்தியே கதை சொல்லப் படுகிறது.

"ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்" என்று தென்னிந்தியத் திரைப்படப் பாணியில் பயணிக்காமல் 'கடைசித் தரிப்பிடம்' திரைப்படம் இயல்பு மொழியில் பயணிக்கிறது. படம் முழுவதும் நாயகி நடந்து கொண்டே இருக்கிறாள். அவளுடன் இணைந்து சோகமும் சேர்ந்து நடக்கிறது. ஆற்றாமை என்பது இயல்பாகவே அவளது முகத்தில் பதிந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தில் சொல்ல வந்ததை - பிரதிபலிக்கிறது.

பொதுவாகவே ஈழத் தமிழர்களது திரைப்படங்கள் குறைத்தே மதிப்பிடப் படுகின்றன. அதுவும் எங்களது மத்தியிலேயே இந்த நிலைமை அதிகமாக இருப்பதுதான் வேதனையானது. ஈழத்தின் முதல் திரைப்படமான வேலைக்காரி தொட்டு இன்று வரை பலர் திரைப்படங்கள் எடுத்து, "வேண்டாம் இந்த வேலை" என ஒதுங்கிப் போய் விட்டனர். ஆனாலும் முயற்சிகள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன கூடவே நம்மவர்கள் திரைப்படத் துறையில் வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான சினிமாவை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் மட்டும் தமிழகத்து சினிமாப் பாணிக்குள் சிக்குண்டு இருக்கின்றோம். ஈழத்தமிழரது போராட்டமும், அங்கிருந்த வீரமும், பின்னால் நடந்த துயரங்களும் தமிழக சினிமாவிலும் அரசியலிலும் ஒரு காலகட்டத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டன. இன்று, அரசியலிலும் அது தேவையில்லை என்பதை சமீபத்திய தேர்தல் சொல்லிச் சென்றிருக்கிறது.

சமீபத்தில் காரத்தி நடித்த `தோழா` படம் பார்த்தேன். `The intouchables` படத்தின் தழுவல்தான் தோழா என்று தமிழில் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சில காட்சிகள் பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் வீதிகளில் கதாநாயகன் கார்த்தி வீதி விதிகளைப் பற்றிய கவலை எதுவுமே இல்லாமல் கார் ஓட்டுகிறார். வழமையான தமிழ்ப் பட கதாநாயகனின் சாகசம்தான் இது என்றாலும் கார்த்தி கார் ஓட்டுவது பிரான்ஸ் வீதிகளில். தமிழ்நாட்டு பொலிஸ் போல் பிரான்ஸ் நாட்டு பொலிசும் எதையும் கண்டு கொள்ளவில்லை. இந்தக் காட்சியை தமிழ் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள். ஆனால் பிரான்சில் இப்படியான கார் ஓட்டத்திற்கு என்ன கிடைக்கும் என்பது ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கு நன்கு தெரியும். இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில், பிரான்ஸ், கொரிய, அமெரிக்கா என்று எந்த நாட்டுத் திரைப்படங்களாகட்டும். அதை தங்கள் பாணிக்கு ஏற்ப வடிவமைத்து தமிழில் திரைப்படம் எடுப்பதில் தமிழ்நாட்டுத் திரையுலகம் திறமை வாய்ந்ததாக இருக்கிறது. எங்களது கதைகள் கூட அவர்கள் பாணியில் திரையில் வரும் பொழுது வேறு விதமான அர்த்தங்களைக் கொடுத்து விட்டுப் போய் விடுகின்றன.

தமிழக சினிமா, திரைப்படத்துறையில் உச்சத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து தங்கள் சினிமாவை ஆழப் பதிந்திருக்கிறார்கள். தாங்கள் எடுக்கும் திரைப்படங்களை சந்தைப்படுத்தும் ஆற்றல் அவர்களிடத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. எங்களவர்கள் கூட 100, 150 கோடி இந்திய ரூபாக்களில் முதலீடு செய்து படத்தயாரிப்பில் ஈடுபட தமிழக சினிமா கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்கின்றது. தமிழக சினிமா எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சி கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி இந்திய ரூபாக்களை அன்பளிப்பு செய்வதற்கும் நாங்கள் தயங்குவது கிடையாது. ஆனால் புலம் பெயர் ஈழத்தமிழர் சினிமா இன்னமும் அநாதையாகத்தான் இருக்கிறது. ஒரு சிலரின் உதவியில் பலரது முயற்சியில், கூட்டு உழைப்பில் தங்கள் படைப்புகளை உருவாக்க சிரமப்படுகிறார்கள். ஒரு திரைப்படத்தை எடுத்ததன் பின்னர் அதைத் திரையிடல், மக்களைச் சென்றடைவதற்கான விளம்பரங்கள் என மேலும் பல விடயங்கள் குவிந்திருக்கின்றன.

வியாபார நோக்கத்தை முன் இருத்தி `கடைசித் தரிப்பிடம்` எடுக்கப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பலர் பார்வைக்கு இத்திரைப்படம் போக வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டால், இது போன்ற சிறந்த படங்கள் உருவாக அது வழி கிடைக்கும். எங்கள் கலைஞர்களை மேலும் ஊக்குவிக்கும்.

படத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் போய்விடாதீர்கள். உங்கள் தரமான விமர்சனங்களை வையுங்கள். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். நன்றாக இருப்பவைகளை குறிப்பிட்டுப் பாராட்டுங்கள்.

- மூனா
26.05.2016
Last Updated on Thursday, 31 August 2017 22:11