home loans
Literatur


முடிவு என்பது அடக்கம் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 17 July 2017 06:50
அன்று புதன் கிழமை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம், என்னை எங்கேயாவது ஓடிப் போய்விடு என்று விரட்டியது. இரண்டு போலிஸ் வாகனங்களும் ஒரு அம்புலன்ஸ் வாகனமும் வாசலில் நின்றிருந்தன. என்ன நடந்திருக்கும் என்று நிதானிப்பதற்குள் மைக்கல் என்னை நெருங்கி வந்தான். மைக்கல் ஒரு பொலிஸ்காரன். எனக்குத் தெரிந்தவன். அவன் என்னை நெருங்கி வரும்போதே தனது நெஞ்சில் சிலுவை வரைந்து காட்டினான். பக்கத்து வீட்டு ஸ்ராபில் செத்துப் போய்விட்டார் என்று புரிந்தது.

„அவர் செத்து நாளாயிற்றுது. துர்நாற்றம் வருறதாக தகவல் கிடைச்சதாலே வந்தோம். மாடன்புழு (maggots) வந்திட்டுது. அதுதான் இந்த நாற்றம்“ மைக்கல் சொல்லும் போதே ஸ்ராபில் வீட்டு யன்னலைப் பார்த்தேன் இலையான்கள் தங்கள் பரம்பரைகளோடு வந்து கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன. வாழ்நாளில் தனிமையை விரும்பி வாழ்ந்த ஒருவன் வீட்டில் இன்று கூட்டமாக மாடன் புழுக்களும், இலையான்களும் குடியேறிவிட்டன.

எனது மூக்கைப் பிடித்து தாங்க முடியாத துர்நாற்றத்தை மைக்கலுக்கு சாடையால் காட்டிய பொழுது,“கன நேரமாக இங்கே நிற்கிறன். இசைவாக்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாய்தானே?” என்று அவன் பரிதாபமாகச் சொன்னான்.

“உங்கள் சம்பிராதயம் எல்லாம் முடிய நேரம் எடுக்கும் போலே?“

„எல்லாம் முடிஞ்சு வாகனம் வந்து உடலை எடுத்துக் கொண்டுபோக எப்பிடியும் இரவு பன்னிரண்டு மணியாயிடும். அதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு சீல் வைச்சிட்டு நாங்கள் போகலாம்“
Last Updated on Monday, 17 July 2017 06:58
Read more...
 
அவர்கள் நண்பர்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Sunday, 02 July 2017 21:18
உலகத்தின் ஓசைகள் எல்லாம் மழையின் சடசடப்புக்குள் அடங்கியிருந்தன. வைப்பரின் வேகம் போதாதிருந்ததது. காரின் முன் கண்ணாடியில் மழை ஊற்றி வழிந்து கொண்டிருந்தது. ஒரு மழைக்காலத்தில் அம்மா சுட்டுத்தந்த சம்பல் ஊறிய தோசையின் வாசம் நாசித் துவாரத்தை தீண்டிச் சென்றது.

கண்ணாடி மறைத்தது. வெளியில் நான்கு மணிக்கே இருளாக இருந்தது. சும்மாவே அந்த நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வோரின் கார்களால் நிறைந்து அமர்க்களப்படும் சுவெபிசுஹாலின் அந்த வீதி மழையால் இன்று இன்னும் அல்லோல கல்லோலப் பட்டது. எதிரும் புதிருமாய் கார்களின் விளக்குகள் நகர்ந்து கொண்டிருந்தன. மூன்றரை மணிக்கு வருவதாகச் சொன்ன பிறந்தநாள் விழா நினைவுகளைத் துருத்தியது. அசைய முடியவில்லை. நடப்பதை விட மெதுவாகவே கார்கள் ஊர்ந்தன. உலகின் வேறெந்தச் சத்தங்களும் காதுகளில் விழவில்லை.

இன்று மெலிசாவுக்கு 27வது பிறந்தநாள். அவளுக்கும் எனக்குமான நட்பு உடற்பயிற்சி நிலையத்தில்தான் ஆரம்பமானது. உடைமாற்றும் அறையில் உடையின்றி நின்றாள். உள்நுழைந்த எனக்கேற்பட்ட துளி சங்கடம் கூட அவளுக்கு ஏற்படவில்லை. கண்டதுமே சிநேகமாகச் சிரித்தாள். „ஹலோ“ சொன்னாள். உடற்பயிற்சி முடித்துக் குளித்திருந்தாள். எனக்கு வீட்டுக்குப் போய் குளிப்பதுவே வசதி போலிருக்கும். அடுக்கி விட்டது போல் வரிசையாக நிற்கும் ஷவர்களின் கீழ் குளிக்கும் போது பக்கத்தில் குளிப்பவளின் தண்ணீர் என்னில் தெறிக்கும். அது மட்டுமா? குளிப்பதற்கான செருப்பு, இன்னொரு துவாய், கிறீம்... என்று பலதைக் காவிக் கொண்டு வரவேண்டும். திருப்பிக் கொண்டு போக வேண்டும்.

அவள் கிறீமை பிதுக்கிப் பிதுக்கி எடுத்து தனது தொடைகளிலும், பிட்டத்திலும், வயிற்றிலும்… என்று ஒரு வித நளினத்துடன் பூசிய படி என்னோடு பேசினாள். உடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்த படி கண்ணாடியில் முகத்தைச் சரிபார்த்தாள். தானும் என்னோடு வருகிறேன் என்று சொல்லி என்னைச் சில நிமிடங்கள் காக்க வைத்தாள். ஈரம் சொட்டிய பொன்னிறக் கூந்தலை ஹெயர்ரையரால் காய வைத்தாள். கார் தரிப்பிடம் வரை என்னோடு நடந்து வந்தாள். தொடர்ந்த நாட்களிலும், வாரங்களிலும், மாதங்களிலும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டோம். எனக்கும் அவளுக்குமான வயது வித்தியாசம் முப்பதாக இருந்தாலும் நிறையப் பேசினோம்.

அருண் என்ற ஈழத்தவனுடன் ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்கிறாளாம். அதனால்தான் வயசு வித்தியாசம் பாராது என்னோடு ஒட்டிக் கொண்டாள். தனது பிறந்தநாள் விழாவுக்கும் அன்போடு அழைத்திருந்தாள்.

அருணுக்கும், அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் ஐந்து வருடங்களாக ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். முதலில் சில வருடங்கள் காதலர்களாக அவரவர்களின் பெற்றோர்களுடன் வாழ்ந்த படியேதான் சந்தித்துக் கொண்டார்களாம். அருண் தனது பட்டப்படிப்பை முடித்து வேலையில் இணைந்து கொண்டதும் இருவருமாக ஒரு வீடு தேடி, வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் போய் விட்டார்கள்.

மெலிசாவையும் அவளது பெற்றோரையும் பொறுத்த மட்டில் அது மிகச் சாதாரணமான விடயமே. 22வயதில் மெலிசா தம்மிடமிருந்து வெளியில் போய் தனியாக, சுயமாக வாழ்வதே சிறந்தது என்பதில் அனேகமான எல்லா ஜெர்மனியப் பெற்றோர்கள் போலவும் அவளது பெற்றோருக்கும் ஆட்சேபனையோ, கருத்து வேறுபாடோ இருக்கவில்லை. அருணின் அம்மாவுக்கும், அப்பாவுக்குந்தான் அது பெரிய பிரச்சனை. அவர்கள் மிகவும் குழம்பினார்கள். திருமணத்துக்கு முன்னமே அருண் இன்னொரு பெண்ணுடன் ஒன்றாக வாழத் தொடங்குவதை அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து சாத்திர சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்து கொண்ட அவர்களால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் ஒரு ஜெர்மனியப் பெண்ணுடன்… வாழ்க்கை எப்படி அமையும் என்று தயங்கினார்கள்.

„ஒண்டுக்கும் பயப்படாதைங்கோ. நாங்கள் எங்களுக்குள்ளை சரிவருமோ எண்டு கொஞ்ச நாளைக்கு வாழ்ந்து பாக்கிறம். சரிவராட்டில் பிரிஞ்சிடுவம்.“ எந்தவிதத் தயக்கமுமின்றி அருண் சொல்லி விட்டான். அவனைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடொன்றில் வாழும் அவர்களால் முடியவில்லை.

சரிவராவிட்டால் பிரிந்து விடுவது என்பது அத்தனை சுலபமா? இது அருணின் அம்மாவிடம் அடிக்கடி எழும் கேள்வி. அதனால் எத்தனை பாதிப்புகள். அதுவும் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களும் அல்லவா அம்மா, அப்பாவின் பிரிவுக்குள் சிக்குண்டு அவதியுறுவார்கள்.

அதற்கும் அருணிடம் பதில் இருக்கும். „நாங்களொன்றும் அவசரப்பட்டு இப்போதைக்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள மாட்டம். சும்மா சேர்ந்து வாழ்ந்து பார்க்கிறம். அவ்வளவுதான்“ என்பான்.

சேர்ந்து வாழ்வதும் பிரிந்து போவதும், திருமணம் செய்வதும் விவாகரத்தில் விலகுவதும் அவ்வளவு சாதாரண விடயங்களா?

நானும் எனது வேலைத்தோழிகளுடன் இது பற்றி நிறையக் கதைத்திருக்கிறேன். விவாதித்திருக்கிறேன். ஏன், சரிவராத போது பிரிந்து விடுவது நல்லதா, சேர்ந்து வாழ்வது நல்லதா என்பது பற்றிப் பல தடவைகள் நடுவர் இல்லாத பட்டிமன்றம் கூட நடாத்தியிருக்கிறோம்.

`சரிவராத போது சேர்ந்து வாழ்வது பிள்ளைகளின் வாழ்க்கையை இன்னும் அதிகமாகப் பாதிக்கும்´ என்பது ஒரு அணி. `சரிவரவில்லை என்று பிரிந்து போவதால் பிள்ளைகளின் வாழ்வு பாதிக்கப் படும்´ என்பது இன்னோரு அணி. இரண்டு அணிகளிலுமே பல நியாயமான கருத்துக்கள் இருக்கும்.

`திருமணத்தின் முன் சேர்ந்து வாழ்வது சரியா பிழையா´ என்பது பற்றி அவர்களிடம் அதிகம் பேசவே முடியாது. அது சரியானது என்பது போலத்தான் அவர்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். `ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் என்னென்று திருமணம் செய்ய முடியும்´ என்பது அவர்களது வாதம். வெறுமனே புகைப்படங்களைப் பார்த்து விட்டு எமது நாட்டிலிருந்து இங்கு வந்து பல பெண்களும், சில ஆண்களும் திருமணம் செய்கிறார்கள் என்பது பற்றி நான் மூச்சுக் கூட விடுவதில்லை.

யோசித்துப் பார்த்தால், சரிவராவிடில் பிரிந்து விடுவது சரி போலவும் சிலசமயங்களில் தோன்றும். „என்ன செய்வது கட்டிப்போட்டம். வாழத்தானே வேணும்“ என்று சொல்லி, தினமும் சண்டை பிடித்துக் கொண்டு வாழும் தம்பதியரின் குழந்தைகளின் அவலங்களையும் கண்டிருக்கிறேன். தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக, அல்லது குரோதம் மிக்கவர்களாக அல்லது ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளானவர்களாக அவர்கள் சமூகத்துடன் ஒட்ட முடியாமல் அவதியுற்றுக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளுக்ககாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்று சொல்வதும் ஒரு பொழுதில் சரி போல இருக்கும். இன்னொரு பொழுதில் மனம் குழம்பும்.

அருணின் அப்பா சொல்வாராம் „வீணாக ஜெர்மனிக்கு வந்தது. ஊரிலேயே இருந்திருக்கலாம்“ என்று.

நேரம் விரைந்து கொண்டே இருந்தது. கார் ஊர்ந்து கொண்டிருந்தது. மழை விட்ட பாடேயில்லை. சடசடத்துக் கொண்டே இருந்தது. எனது சிந்தனைகளும் தாவிக் கொண்டிருந்தன. மழை எனக்குப் பிடிக்கும். மழையென்றால் மயில் தோகை விரித்தாடுமாம். நான் பருத்தித்துறையில் இருக்கும் எனது ஆத்தியடி வீட்டுக்குப் போய் விடுவேன். மழை பொழிந்து ஊத்தும் நாட்களில் அண்ணா விளையாட என்று சொல்லி ஆத்தியடிக் கோயில் வெட்டைக்குப் போகமாட்டான். தம்பியோடு விளையாட அவனது நண்பர்கள் யாரும் வரமாட்டார்கள். அம்மா எங்களை வெளிவிறாந்தைகளுக்குப் போகாமல் உள்அறையில் இருக்கச் சொல்லுவா. முன்விறாந்தை, பின்விறாந்தை, பெரிய விறாந்தை எல்லாமே மழை தூவானம் அடித்து அரைவாசிக்கு ஈரமாக இருக்கும். எங்களுக்கும் கூதல் அடிக்கும். இருந்தாலும் அம்மா குசினிக்குள் போனதும் அண்ணன் பேப்பரில் கப்பல் செய்து தருவான். ஓடிப்போய் வீதியில் அடித்துப் போகும் வெள்ளத்துள் எறிந்து விட்டு வருவோம். உடைந்த தளபாடங்கள், தென்னம்பாளைகள், பனங்கங்குகள், பன்னாடைகள் இன்னும் பல குப்பை கூழங்களுடன் நாங்கள் விடும் கப்பல்கள் கொஞ்சத் தூரம் மிதந்து சென்று பின்னர் தாண்டு விடும். சில சமயங்களில் எங்கள் வீட்டு முற்றங்களும் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும். வீட்டுக்குள் தண்ணீர் வராதவாறு வீட்டுக்கு இத்தனை படிகள் வைத்து உயர்த்திக் கட்டியதின் அர்த்தம் அப்போதுதான் புரியும். மழையைப் பார்த்தால் அதெல்லாம் வரிசையாக ஓடும். குழந்தைப் பருவம் மனசுக்குள் துள்ளும். பிச்சிப்பூ மரம் ஈரம் சொட்டிக் கொண்டு நிற்கும். மல்லிகைப்பந்தல் மழைத்துளிகளோடு நறுமணம் சொட்டும். ஆனாலும் இன்று மனம் கொஞ்சம் சங்கடப்பட்டது. ஜெர்மனியர்கள் நேரத்தைக் கடைப்பிடிப்பவர்கள். மூன்றரை மணிக்கு பிறந்தநாள் விழா என்றால் மூன்று மணிக்கே வந்து வெளியில் காத்திருப்பார்கள். அவர்கள் மத்தியில் அவமானப்படப் போகிறேனோ என்றிருந்தது.

நேரம் நான்கு மணியையும் தாண்டிய பின்னரே தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தேன். வெளியில் காற்றின் வேகத்தில் மழை சுழன்றடித்துக் கொண்டிருந்தது. கூந்தல் ஒருக்களித்துப் பறந்ததில் காது மடல்கள் சில்லிட்டன. கழுத்தைச் சுற்றியிருந்த சால்வையை இழுத்து காது மடல்களையும் சேர்த்துச் சுற்றினேன். தோள் பட்டையில் தொங்கிய கைப்பை நழுவிக் கீழே வீழ்ந்து மழையில் ஜொலித்தது. குனிந்து எடுத்துக் கொழுவினேன். குடையை விரித்தேன். காற்று இழுத்தது. மீண்டும் குடையை காருக்குள் போட்டு விட்டு நடக்கத் தொடங்கினேன். மழைக்கும், காற்றுக்கும் ஈடு கொடுத்து வேகமாக நடக்க முடியாதிருந்தது.

இப்படியொரு மழை இங்கு எப்போதாவதுதான் வரும். அப்பொழுதெல்லாம் சுவெபிசுஹாலை ஊடறுத்துச் செல்லும் கிளைநதியான `கொகர்´ பெருக்கெடுத்து நகருக்குள் ஓடத் தொடங்கும். உடனேயே அதை மறித்துக் கட்டி நதியோடு அண்டிய வீதிக்கும் தடை போட்டு விடுவார்கள். இன்றும் தண்ணீரை நகருக்குள் போகவிடாமல் தடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவ்வீதி ஏகுவோரையும் மஞ்சள் வர்ண உடை தரித்த வீதிக்காவலர்கள் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கிளைநதியின் மறுபக்கத்தில் இருக்கும் மலையுச்சியில்தான் மெலிசாவும், அருணும் வாழும் வீடு. நிமிர்ந்து பார்த்தேன். கண்களுக்குள் விழுந்த மழைத்துளிகளினூடு அந்த வீடு கலங்கலாகத் தெரிந்தது. மலையுச்சியில் வீடு பார்ப்பதற்கு அழகுதான். „அதைவிட அந்த உச்சியில் இருந்து பழமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் இந்த சுவெபிசுஹால் நகரைப் பார்ப்பது இன்னும் அழகு“ என்பாள் மெலிசா.

நிலக்கீழ்ப்பாதையினூடு வீதியைக் கடந்தேன். இன்றுதான் முதல் முதலாக மெலிசாவின் பெற்றோரைச் சந்திக்கப் போகிறேன். மனசுக்குள் ஒரு வித ஆவல் உந்தியது. அந்த மலையடிவாரத்தில் நின்று, மலையுச்சியில் அமைந்திருக்கும் அந்த வீட்டை நோக்கிய போது வளைந்து நெளிந்து செல்லும் பாதைக்கான படிகள் வழமையை விட அதிகமாக இருப்பது போலத் தோன்றியது. பனியாவதற்கு இன்னும் அந்தக் குளிர் போதாவிட்டாலும் வீசி எறிந்த காற்றில் அடிபட்ட மழைத்துளிகள் முகத்தைச் சில்லிட வைத்தன. ஒவ்வொரு படியாக ஏறும்போது கால்கள் தடுமாறின. ஐம்பது படிகள் வரை எண்ணிக் கொண்டு ஏறினேன். அதற்கு மேல் எண்ணும் எண்ணம் மறைந்து போனது.

அழைப்புமணியை அழுத்தி உள்நுழைந்த போது கதவைத்திறந்து விட்ட மெலிசா கை தந்து முகஸ்துதியுடன் என்னை வரவேற்றாள். எனது ஜக்கற்றை பின்பக்கமாகக் கழற்றி எடுத்து பெக்கில் கொழுவி விட்டு, தலையைத் துவட்டுவதற்கு ஒரு துவாய் தந்தாள். மெதுவாகக் கட்டியணைத்தாள். அவளது பஞ்சுபோன்ற சூடான தேகம் குளிருக்கு இதமாக இருந்தது.

„இண்டைக்கும் நீ குடை பிடிக்காமல்தான் வந்தனியோ?“ மெலிதான சிரிப்புடன் கேட்டாள்.

„மழை பிடிக்கும் என்பதால் குடை பிடிப்பதில்லை“ என்று வழமை போலச் சொல்லாமல் „இல்லை, பலத்த காற்று, முறிந்தும் விடும்“ என்றேன்.

„என்ன, தேநீர் குடிக்கப் போகிறாய்?“ எனக் கேட்டாள்.

நான் அவளுக்கான பரிசுப் பொருளை அவளிடம் கொடுத்த படியே „ஏதாவது ஒரு குறொய்ரர் ரீ (மூலிகைத்தேநீர்)„ என்றேன்.

அவள் குசினுக்குள் நுழைய நான் வரவேற்பறையுள் நுழைந்தேன். நீளமேசை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேசையின் நடுவில் விரித்திருந்த நீளச்சேலை இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தது. நடுவில் கோபுரவடிவிலான மூன்றடுக்குத் தட்டு இருந்தது. அதில் பழங்களும், சீஸ் துண்டுகளும், சொக்கிளேற்சும் அடுக்கப் பட்டிருந்தன. அதைச் சுற்றி சின்னச் சின்னக் கண்ணாடிக் குப்பிகளில் மெழுகுகள் எரிந்து கொண்டிருந்தன. அவைகளின் இருபுறங்களிலும் தட்டுக்களில் கேக், பலகாரங்கள், கோப்பி நிறைந்த பிளாஸ்க், தோடம்பழச் சாறு நிறைந்த போத்தல், கூடவே அழகிய கண்ணாடிக் குவளைகள் இரண்டில் குளிர்ந்த தண்ணீர்... என்று மேசை அலங்காரமும், சாப்பாடுமாக வரவேற்றது.

சற்றுத் தள்ளியிருந்த கதிரைகளில் மெலிசாவின் அக்காவும், அவளது இரட்டைக் குழந்தைகளும் இருந்தார்கள். என்னைக் கண்டதும் மெலிசாவின் அக்கா எழுந்து வந்து கை குலுக்கி வரவேற்றாள். இரட்டைக் குழந்தைகள் கைகளைப் பட்டும் படாமல் தந்து விட்டு, தாயோடு ஒட்டிக் கொண்டு நின்றார்கள். அவர்களின் வெட்கம் கலந்த சிரிப்பு அழகாக இருந்தது.

மெலிசாவின் அம்மா இன்னும் தாமதமாகவே வந்தாள். தூரமில்லைத்தானே என்று நடந்துதான் வந்தாளாம். அவளது குடை தெப்பமாக நனைந்திருந்தது. அதிலிருந்து ஓடும் தண்ணீர் வாசலில் இருந்து படிகளில் வழிந்தது. குடையையும் மீறி அடித்த மழைச்சாரலால் அவளிடம் ஒரு சிறு நடுக்கம் தென்பட்டது. ஒல்லியான தேகவாகு கொண்ட அவள் நாலைந்து முறை தொடர்ந்து தும்மினாள். மெலிசா அவளிடம் „என்ன குடிக்கப் போகிறாய்?“ என்று கேட்ட போது „கோப்பி“ என்றாள். அவள் குரல் சன்னமாகவே ஒலித்தது. மெலிசாவின் அப்பா வேலை முடிந்து வர கொஞ்சம் தாமதமாகும் என்றாள். மெலிசா கொடுத்த கோப்பிக் கோப்பையை இரு கைகளாலும் இறுகப் பிடித்த படி ஒரு குழந்தையைப் போல ஊதி ஊதிக் குடித்தாள். என்னைப் பார்த்து மிகுந்த சிநேகத்தோடு சிரித்தாள். பற்கள் மெல்லிய பழுப்பு நிறமாய்த் தெரிந்தன. சிகரெட் புகைப்பாள் போலும்.

மெலிசாவின் அக்காவின் கணவன் அழைப்புமணியை அழுத்தி வாட்டசாட்டமாக உள்ளே நுளைந்தான். நேரே மனைவியிடம் சென்று உதட்டோடு உதடு ஒற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தான். மெலிசாவைக் கட்டியணைத்து வாழ்த்தினான். அருணின் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கினான். குழந்தைகளோடு கொஞ்சிக் குலாவினான். வேலையின் களைப்பைப் பொருட்படுத்தாது எல்லோருடனும் கலகலப்பாய் பேசினான்.

மெலிசாவின் அக்காவுக்கு முன்னர் வேறொரு காதலன் இருந்தான். சில வருடங்கள் காதலித்து பின்னர் சில வருடங்கள் ஒரு வீட்டில் ஒன்றாக வாழ்ந்தார்கள். சட்டப்படியோ, சம்பிரதாயப் படியோ திருமணம் செய்து கொள்ளா விட்டாலும் ஒரு கணவன், மனைவி போலத்தான் வாழ்ந்தார்கள். நல்ல வேளையாக அவர்கள் பிரியும் போது அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கவில்லை.

மெலிசாவின் அப்பா வந்ததும் கொண்டாட்டம் தொடங்கியது. அருண் கேக்கின் மேல் ஒரு சிறிய மெழுகைக் குற்றி விட்டான். சிவப்பு நிறத்தில் மெல்லிய கோடுகள் அம்மெழுகில் அழகாக வளைந்திருந்தன. மெலிசா நெருப்புப் பெட்டியில் குச்சைத் தேய்த்து மெழுகின் திரியைப் பற்ற வைத்தாள். இரட்டைக் குழந்தைகள் இருவரும் அதன் ஒளியைப் பார்த்து ஆனந்தித்தார்கள்.

மெலிசாவின் அம்மா „எல்லோரும் பாடுங்கள்“ என்று சொன்னதும் குழந்தைகள் பெரியவிர்களை விட உற்சாகமாக பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள்.

பாடி முடிந்ததும் மெலிசா மெழுகுதிரியை ஊதி அணைத்தாள். ஒரு தர ஊதலிலேயே அணைந்து விட்டதால் அது நல்ல சகுனம் என்று சொல்லி மெலிசாவின் அம்மாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் அணைத்துக் குதூகலித்தார்கள்.

இப்போது மெலிசா ஒவ்வொரு பரிசுப் பொருளாக எடுத்து, சுற்றிக் கட்டியிருந்த அழகிய நாடாக்களை அவிழ்த்து, அழகிய வர்ணத்தாள்களை, அவை கசங்கி, பரிசு தந்தவர்களின் மனங்கள் நொந்து விடாத படி மெது மெதுவாகக் கழற்றத் தொடங்கினாள். இரட்டைக் குழந்தைகள் உள்ளே என்ன இருக்கிறது என அறிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தார்கள். அந்தச் சிறிய பிறந்தநாள் விழாவில் அவர்கள்தான் கதாநாயகர்களாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் மழலை பொழிந்து கொண்டும், தத்தித் தளர்நடை போட்டுக் கொண்டும் திரிந்தார்கள்.

அருணின் அம்மாவும், அப்பாவும் இன்று வரவில்லை. நாளைதான் வருவார்களாம். மெலிசாவின் அம்மாவும், அப்பாவும் சிரிப்பும், கதையுமாகச் சந்தோசமாக இருந்தார்கள். பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடினார்கள். மகள்களை அன்போடு விசாரித்தார்கள். இப்படியல்லவோ தம்பதிகள் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் மிகவும் அந்நியோன்யமாகப் பழகினார்கள். பார்க்கும் எங்களையும் சந்தோசம் தொற்றிக் கொள்ளும் படியாக மனம் விட்டுச் சிரித்தார்கள்.

பொழுது போவதே தெரியாமல் விரைந்து கொண்டிருந்தது. மழை பற்றி, காலநிலை பற்றி, எமது அழகிய நகரம் பற்றி, நாம் வாழும் ஜெர்மனி பற்றி.. என்று பேச்சுகள் விரிந்து கொண்டே இருந்தன. வயிறும் நிறைந்து கொண்டிருந்தது. அருணை ஏற்கெனவே சந்தித்திருந்தாலும் இன்று அவனோடு அதிகம் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ´அம்மா வந்திருக்கலாம்` என்ற ஆதங்கம் அவன் பேச்சில் தெரிந்தது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு சந்தோசமாகவே திரிந்தான்.

எட்டு மணிக்கு விழா முடிவதாக ஏற்பாடு. ஏழு ஐம்பத்தைந்துக்கே மெலிசாவின் அப்பா எழுந்து கொண்டார். தொடர்ந்து அம்மா. நானும் எழுந்து கொண்டேன். எல்லோரும் அருணையும், மெலிசாவையும் கட்டி அணைத்து மீண்டும் ஒரு முறை வாழ்த்தி, நன்றி சொல்லி விடைபெற்றோம். அவர்களும் எங்கள் வரவையிட்டு தாங்கள் மிகவும் மகிழ்ந்தோம் என்று நன்றி சொல்லி எங்களை வழி அனுப்பினார்கள்.

`களவும் கற்று மற´ என்பது சங்க காலத்து வழக்கம். காதலர்கள் களவாகச் சந்திப்பதும், கதைப்பதும், கலவி கொள்வதும் சங்காலத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன என்கிறார்கள். ஆனால் திருமணம் என்ற ஒரு நிகழ்வு இல்லாமலே சேர்ந்து வாழ்வது ஏதாவது ஒரு காலத்தில் இருந்திருக்குமோ?

வெளியில் மழை ஓய்ந்திருந்தது. நிலவு காய்ந்து கொண்டிருந்தது. குத்தெனவும், வளைந்து நெளிந்தும் இறங்கும் மலைப்படிகளில் இறங்கும் போது படிகளை அண்டி விரிந்திருந்த அப்பிள், பெரி, செர்ரி... பழ மரங்களிலிருந்து மழைத்தண்ணீர் தலையில் சொட்டின. சுவெபிசுஹால் நகர் இரவுக்குரிய இன்னொரு அழகுடன் மிளிர்ந்தது. அப்படியே நின்று ரசித்துக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது.

ஏறுவது போல இறங்குவது கடினமாக இருக்கவில்லை. விரைவாக மலையின் அடிவாரத்துக்கு வந்து விட்டோம். எனது கார் இருக்கும் இடத்துக்குச் செல்ல நான் வீதியை மீண்டும் கடக்க வேண்டியிருந்தது. மெலிசாவின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அந்தத் தேவை இருக்கவில்லை. கீழே இரு கார்கள் காத்து நின்றன. மெலிசாவின் அப்பா தனது மனைவியின் காரிலும், மெலிசாவின் அம்மா தனது கணவனின் காரிலும் ஏறி, தத்தமது துணைகளின் உதடுகளோடு தமது உதடுகளை ஒற்றி விட்டு, என் பக்கம் திரும்பி கையசைத்துக் கொண்டிருக்கும் போதே கார்களின் விளக்குகள் ஒளிர்ந்து, மெதுவாக நகர்ந்து வீதியில் வெவ்வேறு வளைவுகளில் திரும்பி விரைந்தன.

- சந்திரவதனா
12.01.2017
Last Updated on Friday, 07 July 2017 06:45
 
மார்க்கிரேற் அன்ரி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 19 June 2017 20:58
சைவர்களையும் கிறிஸ்தவர்களையும் எது பிரித்து வைக்கிறது என்று என்னைக் கேட்டால் ஒரு வீதிதான் என்று சொல்வேன். எனது கிராமத்தில் அப்படித்தான் இருந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து ஆனைவிழுந்தான்வரை செல்லும் வீதியொன்று, ஒரு பக்கம் புலோலி கிழக்கு என்றும் மறுபக்கம் புலோலி தெற்கு என்றும் பிரித்து வைத்திருந்தது. புலோலி கிழக்கில் சைவர்களும் புலோலி தெற்கில் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். (ஒரு குறிப்பிட்ட தூரம்வரைதான் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்) கிராமக்கோட்டில் இருந்து ஆனைவிழுந்தானுக்குச் செல்லும் வீதி தொடங்கும் இடத்தில் இருந்து சிறிது தள்ளி சூசையப்பர் தேவாலயம் இருந்தது. அதையொட்டியே அனேக கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. விதிவிலக்காக வீதியின் இந்தப் பக்கம் அதாவது புலோலி கிழக்குப் பக்கம் சைவர்களுடன் இணைந்து நாலு கிறிஸ்தவக் குடும்பங்களும் இருந்தன.

வீதியோ,மதங்களோ இடையில் குறுக்கிட்டாலும் இரண்டு பக்க பழக்க வழக்கங்களும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருந்தன. அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவார்கள். இவர்கள் வல்லிபுரக்கோவிலுக்குப் போவார்கள். அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள். இவர்களிலும் சிலர் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் (வெளியே தெரியாத வண்ணம் கொஞ்சம் ஒளிவு மறைவாக) சைவக்கார வீட்டுப் பெண்களை கிறிஸ்தவர்கள் ‘சைற்’ அடிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் வீட்டுப் பெண்களை சைவக்காரர் தாராளமாக ‘சைற்’ அடிக்கலாம். இப்படியான ஒற்றுமைகளும், சின்னஞ் சிறு வேறுபாடுகளும் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்கள் நெருக்கத்தை தடுத்து நின்றது. நேரில் கண்டால் மரியாதையாக சிரித்துக் கொள்வார்கள். மற்றும்படி ஒட்டுதல், உறவாடுதல்கள் எல்லாம் கிடையாது.
Last Updated on Monday, 19 June 2017 21:06
Read more...
 
சந்தி வாடகைக்கார் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Friday, 02 June 2017 22:52
இராமநாதனும் நடேசனும் நல்ல நண்பர்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது வல்லிபுர ஆழ்வாரை தரிசிக்கப் போன இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியிருந்தது.

எங்கள் ஊரின் சங்கக்கடை முகாமையாளராக இருந்தவர்தான் இராமநாதன். சங்கக்கடை முகாமையாளராக இருந்த பொழுதிலும் மேலதிக வருமானத்திற்காக கிராமக்கோட்டுச் சந்தியில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அவரது கடையில் நான்கு சைக்கிள்கள் வாடகைக்கும் இருந்தன. இலவசம் என்ற சொல்லை அவர் அறவே மறந்து விட்டிருந்தார் என்றே சொல்லலாம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற பேதமும் அவரிடம் கிடையாது. அவரது கடைக்குப்போய் சைக்கிளுக்கு காற்று அடித்தால் அது யாரானாலும் ஐந்து சதம் அறவிட்டு விடுவார். "காசு கொண்டு வர மறந்து போனேன் பிறகுதாறன்" என்று சொன்னால், "சைக்கிளை வைச்சிட்டு வீட்டை போய் காசை எடுத்திட்டு வா" என்று அவரிடமிருந்து பதில் வரும். அவரது கடைக்குப் பக்கத்தில் இருந்த தாமோதரத்தாரின் தேத்தண்ணிக்கடையில் அவர் தேனீர் வாங்கிக் குடித்ததைக் கூட கண்டவர்கள் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

நடேசன் சொந்தமாக ஒரு ஹில்மன் கார் (Hillman car) வைத்திருந்தார். காலையில் மாணவிகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் வீட்டில் திரும்ப கொண்டு வந்து சேர்ப்பதும் அவரது வேலை. ஒரு மாணவிக்கு மாதாந்தம் பத்து ரூபா முதல் பதினைந்து ரூபாவரை அவரவர்கள் வசதிக்கேற்ப கட்டணம் வாங்கிக் கொள்வார். அந்தச் சிறிய ஹில்மன் காரில் ஒருதடவைக்கு குறைந்த பட்சம் பன்னிரண்டு மாணவிகளை உள்ளே அடைத்து காரை ஓட்டிச் செல்வார். வெளியில் இருந்து பார்த்தால் சிலவேளைகளில் கார் ஓட்டும் நடேசனைத் தெரியாது அந்தளவுக்கு உள்ளே நெருக்கமாக இருக்கும். கோணல்மாணலாக உள்ளே அடைந்திருக்கும் மாணவிகளின் தலைகள், அவர்களது வெள்ளை ஆடைகள், கறுத்த றிபனால் மடித்துக் கட்டிய பின்னல்கள்… தான் தெரியும். அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது மாணவிகளை இப்படி பனங்கிழங்குகள் போல அடுக்கி கசங்க விடுகிறாரே என்று இளசுகளான எங்கள் மனங்கள் கசங்கிப்போகும்.
Last Updated on Monday, 17 July 2017 06:57
Read more...
 
கிராமக்கோட்டுச் சந்தி மதவு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Saturday, 20 May 2017 07:34
மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும்.

வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவது கட்டுக்குள்ளே அடங்காத காளைகள் ஒரு காலை மடித்து வைத்து மதிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டும் மறு காலை நிலத்தில் ஊன்றியும் ஆட்சி செய்யும் பீடம் அது. காலையில் எட்டில் இருந்து ஒன்பது மணிக்கும், பின்னர் மாலை நான்கு மணியில் இருந்தும் அந்த மதவில் காளைகளின்அரச தர்பார் அமர்க்களமாக இருக்கும். ஊரில் இருந்த இரண்டு பிரதான பெண்கள் பாடசாலைகளே அவர்களது அரச தர்பாருக்கான காரணிகள்.

காலையில் பாடசாலை கடைசி பஸ் போனதன் பின்னர் காளையர் கூட்டம் மெதுவாக கிழக்கு நோக்கி சந்தாதோட்டத்திற்கோ, அல்லது மேற்கு நோக்கி கூவிலுக்கோ நகரும் . சந்தாதோட்டமும், கூவிலும் கள்ளுக்குப் பேர்போன எங்கள் ஊர் கிராமங்கள்.
Last Updated on Monday, 19 June 2017 21:07
Read more...
 
ஆறுமுகம் இது யாரு முகம்? PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 12 April 2017 09:59
விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.

வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன.

யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறுபட்டு இருந்தது. அன்று, நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க்குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்று
ம் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது.

புது இடம்,
புதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன்.
Last Updated on Saturday, 20 May 2017 07:34
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 63