தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை) Print
Literatur - சிறுகதைகள்
Written by கவி அருணாசலம்   
Saturday, 20 October 2018 19:20
ஹம்’ தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை.

“நாளைக்கு ‘ஹம்’முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லை” என்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு என்ன நடந்திருக்கும். வீட்டில் பிரச்சினையா? நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா? ஏதாவது சுகயீனமா? என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்.

அன்று வேலை இடத்தில் அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.

மதிய இடைவேளையில் அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால் மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது?”

“ஏதோ கடவுள் குற்றம் போலை”

“ஏன்? அப்பிடி என்ன?”

“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற நகைகளை விட்டிட்டு அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்”

“ஹம்மிலை நடந்ததோ?”

“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்”

“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.

“தேருக்குப் போனால் சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து”

“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்” கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்

- கவி அருணாசலம்
05.07.2018

Quelle - yarl.com
Last Updated on Saturday, 20 October 2018 19:24