அன்னா அக்மதோவா Print
Blogs - Latest
Written by அ. யேசுராசா   
Tuesday, 10 December 2013 09:07

  ஆங்கிலத்தில் : றெஜி சிறிவர்த்தன

                                                         தமிழில்: அ. யேசுராசா

                           சென்ற ஆண்டில் செய்திப் பத்திரிகைப் பேட்டியொன்றில் பெல்லா அக்மதுலினா (சோவியத் யூனியனில் இன்று எழுதும் பிரபல்யமான பெண் கவிஞர்) கூறினார் : “எனக்குத் தெரிந்தவரை, 20 ஆம்நூற்றாண்டின் மிகச்சிறந்த எமது கவிஞர்களிருவரும் பெண்கள் – அன்னா அக்மதோவாவும்,மரினா ஸ்வெத்தயேவாவும்.” நீண்டகாலமாக எனது அபிப்பிராயமும் அதுவாகவே இருந்ததில் நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். இரண்டு கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்திருந்தபோதிலும், மிகவும் நெருக்கமுற வெளிப்படுத்திய கவிஞர் அக்மதோவாதான்.

 

அவருடைய கவிதைகள் இலகுவாக மொழிபெயர்க்கப்படக்கூடியனவல்ல. மேலோட்டமாகப் பார்க்கையில்  அவருடைய கவிதைகள் எளிமையானவை; நவீன கவிதைகளில் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிற சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட – சிக்கலான சொற்றொடர்கள் இல்லாமலும், எந்தவித இருண்மை இல்லாமலும், பளிங்குபோல் மிகத்தெளிவாக அவை இருக்கின்றன. ஆனால், அந்த எளிமை ஏமாற்றிவிடும் தன்மையது. பார்வைக்கு அமைதி யானதாகத் தோன்றும் அவரது கவிதைகள், தம்முள்ளே ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளன. அவரது கவிதைகள் செட்டானதும் ஒருமுகப்படுத்தப்பட்டவையுமாகும்; உணர்ச்சிகள் சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டு  தடைப்படுத்தப்பட்டனவுமாகும். தனது சொந்தத் துயரங்களைப் பற்றி அவர் எழுதுகையில்கூட  கழிவிரக்கமோ, எந்தவித மிகைப்படுத்தல்களோ அவற்றிலிருப்பதில்லை. அவரது படைப்புக்களிற் காணப்படும் வடிவத்தின் உயர் முழுமை என்பது, அவரது ஆன்மிக ஒழுக்கத்தின் ஒரு பகுதியேயாகும். பூங்காவில் வீழ்ந்து கிடக்கும் சிலையொன்றை  நோக்கிச்சொல்லுவதான, அவரது ஆரம்பகாலக் கவிதையொன்றில் அவர் சொல்கிறார்:

                   “குளிர்ந்தஒன்றே, வெண்ணிறமான ஒன்றே, காத்தி

                     நானுங்கூடபளிங்காய் மாறுவேன்.”


 

     அந்த ஆசை நிறைவேறியது.

    அக்மதோவா தனிப்பட்ட  உறவுகளையும், குறிப்பாகக் காதலையும் பற்றி எழுதும் கவிஞரானார். இத்தோடு புரட்சிக்கு முந்திய தாராளவாத புத்திஜீவிகள் அணியை அவர் சேர்ந்திருந்த உண்மையும் இணைந்தே, புரட்சிக்குப் பிந்தியநாள்களில் அவரது கவிதைகள் மதிப்புக்குறைவாகப் பேசப்படக் காரணமாயின. அந்தக்காலத்தின் உத்தியோகபூர்வ பொல்ஷெவிக் விமர்சகர்களான ட்ரொட்ஸ்கியும் லூனசார்ஸ்கியும், சமூக முக்கியத்துவம் அற்றிருப்பவையெனக் கூறி, அக்மதோவாவின் கவிதைகளைப் புறக்கணித்தனர். ஸ்டாலினின் ‘சுத்திகரிப்பு’க் காலகட்டத்தில் வரிசையாக அக்மதோவா எழுதிய ‘இரங்கற்பா’ என்ற தலைப்பிலான மிகச் சிறந்த கவிதைகளை வாசிப்பதற்கு ட்ரொட்ஸ்கி உயிரோடு இருந்திருந்தால், அவரைப்பற்றிய தனது கணிப்பீடு பிழையென்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.


இலக்கிய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்ததான சூழ்நிலைகளில் ‘இரங்கற்பா’ படைக்கப்பட்டது. அவ்வேளை அக்மதோவாவின் மகன் சிறையில் இருந்தான் (எதிர்ப்புரட்சிச் சதியில் சம்பந்தப்பட்டிருந்ததான குற்றச்சாட்டின் மீது 1921 இல் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மகனாக இருந்ததே, அவனது ஒரேகுற்றமாகும்.) ; அவர் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த காதலனும் கைதுசெய்யப்பட்டான்; தானும் பெரும் அபாயத்திற்குள் இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஐந்தாண்டுகளாக அந்தத் தொடர்கவிதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கையில், அதை எழுதிவைக்க ஒருபோதுமே அவர் துணியவில்லை. ஏனென்றால், அவரது இருப்பிடம்  சோதனையிடப்பட்டு அக்கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட்டிருப்பார். கவிதைகளை மனதில் உருவாக்கி ஞாபகத்தில் பதித்துவைக்கவும், ஞாபகத்தில் வைத்திருக்கும்படி நண்பர்களுக்குச் சொல்லிவைக்கவுமே – தான் இறக்க நேரிட்டாலும் தனது கவிதைகள் உயிர்பிழைத்திருக்கும் என்பதால் – அவரால் முடிந்தது.

     அவரது நெருங்கிய தோழியான லிடியா சுக்கோவ்ஸ்கயா, கவிஞரைப் பற்றிய தனது நினைவுக் குறிப்பில் வருமாறு குறிப்பிடுகிறார்:


     “அன்னா அந்திரீவ்னா எனது இருப்பிடத்திற்கு வருகைதரும்போது, இரங்கற்பா கவிதை வரிகளை முணுமுணுக்கும் குரலில் என்னிடம் சொல்வாள். ஆனால் ‘ ஃபொன்ரனிடொம்’மி லுள்ள தனது அறையில் முணுமுணுக்கக்கூட அவளுக்குத் துணிவில்லை. உரையாடலின் போது  திடீரென அவள் மௌனமாகிவிடுவாள். கண்களினால் சைகைசெய்து, கூரையையும் சுவர்களையும் எனக்குக் காட்டிவிட்டு, துண்டுக் கடதாசியையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு, சாதாரணமாய்க் கதைக்கிறதுபோல் ‘தேநீர் குடிக்கிறாயா?’ என்றோ, ‘வெயிலி ல் நல்லாய்க் கறுத்துப்போயிருக்கிறாய்’ என்றோ, உரத்த குரலில் சொல்லியபடி அவசரமாய்க் கடதாசியில் கிறுக்கிவிட்டு என்னிடம் தருவாள். நான் அதிலுள்ள வரிகளை வாசித்து மனதில் பதித்தபின், மௌனமாக அதை அவளிடம் திருப்பிக் கொடுப்பேன். ‘இந்த வருஷம், இலையுதிர் காலம் கெதியாக வந்துவிட்டது’ என்று அன்னா அந்திரீவ்னா பலமாகச் சொல்லியபடியே, தீக்குச்சியை உரசி, ஆஷ்ட்ரேயில் அக்கடதாசித் துண்டை எரித்துவிடுவாள்.”

     உள்நாட்டுப் போர் நடந்த கொடுமையான ஆண்டுகளின்போதோ, ஸ்டாலினிஸப் பயங்கரத்தின்போதோ, தான் மிகவும்  நேசித்த தாய்நாட்டைவிட்டு ஓடிச்செல்லாததைப் பற்றி, அன்னா அக்மதோவா பெருமிதம் கொண்டிருந்தார்.வெளிநாட்டில், 1961இல், ‘இரங்கற்பா’ முதன்முறையாக வெளியிடப்பட்டபோது (சோவியத் யூனியனில் இரண்டு ஆண்டுகளின் முன்னரே அதுவெளியிடப்பட்டது), அக்கவிதையின் தொடக்கத்தில் நான்கு வரிகளை அவர் அமைத்தார். தனதுநாட்டு  மக்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட பெருமையை அவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

 

                ‘.... இல்லை, இன்னொரு வானக்  கூரையின் கீழல்ல,

                அந்நியச் சிறகுகளின் அணைப்பின் கீழல்ல,

                எனது மக்களோடு அப்போது இருந்தேன் –

                அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, அதே இடத்தில்.”


     அன்னா அக்மதோவா இன்று  சோவியத்யூனியனில் உயர்வாக மதிக்கப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். அடிமைத்தனமும், முகஸ்துதியும், பொய்ம்மையும் இலக்கியத்தை ஆதிக்கம் செய்த ஒரு காலகட்டத்தில், உயர்வான கவித்துவ நேர்மைக்கு ஓர் உதாரணமாக அவர் இருந்தார் என்ற உண்மையும், இன்னொருகாரணமாகும்.

    மற்றவையெல்லாம் அழிய சொல் நீடித்து நிலைக்குமென்ற ஆழமான நம்பிக்கையுடன், தனது கவித்துவப்பணிக்கு உண்மையானவராக அவர் இருந்தார். அவரது முழுநிறைவான தூய்மையை முனைப்பாகக் காட்டுவதான நான்குவரிக் கவிதையொன்றில், இதை அவர் சொல்லியுள்ளார். அதை இவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன்.

 

             “தங்கத்தில் களிம்பு பிடிக்கிறது, உருக்கு அழிகிறது, பளிங்கு தூளாகிறது.

             சாவின் நுகர்வுக்காய் எல்லாமே  காத்திருக்கின்றன.

             துக்கந்தான், பூமியில் மிகத்  திண்மையான பொருள்.

             மாட்சிமை உடைய சொல்லே, நீடித்து  நிலைத்திருக்கும்.”

 

                                                                                                        -    தி ஐலன்ட்

                                                                                                             திசை (18.08.1989)

Last Updated on Tuesday, 04 March 2014 23:06