மழைக்கூடு நெய்தல் Print
Literatur - கவிதைகள்
Written by ரா. ராஜசேகர்   
Thursday, 10 May 2018 07:23
மழைக்கூடு நெய்து தரும் மனசு
மழலைக்கு மட்டும்தான்

நரைநுரைத்தப் பின்னும்
நம் நடைப்பயணத்தில்
கோத்திருந்த இருகைகளிலும்
குழந்தை விரல்கள்

நம்
சிறுமழைக்கூட்டைத் திறந்தால்
ஏக்கம் ததும்ப
நம்மைப் பார்க்கிறது
இப்பெருவுலகம்

மழைக்கூடு நெய்தலென்பது
கடவுளைப் படைப்பதினும் கடினம்

போனால் போகிறது
நிறைய நிரந்தர மழைக்கூடுகள் நெய்து
தருவோம் நிலமாந்தர்க்கெல்லாம்

புவியெங்கும் மழலை வழிய
மனக்கூடையெங்கும்
நிறமழியாப் பூக்கள் நிரம்பும்
நிலநாசியில் தேங்கும் நிஜவாசம்

- ரா.ராஜசேகர்
சென்னை