கடிதம் படித்த வாசனை Print
Literatur - கவிதைகள்
Written by ரா. ராஜசேகர்   
Tuesday, 15 May 2018 21:09
கடிதமொன்று வந்தது

எங்கிருந்து
யாரெழுதியது
எதுவும் அதிலில்லை

உறையும் ஒட்டப்படாமலே

யாரும் பிரித்துப் படித்த
சுவடும் இல்லை அதில்

தபால்காரரும் கவனிக்கவில்லைபோல அதை
கையளித்துவிட்டு
மிதிவண்டியேறிவிட்டார்
பூடகப் புன்னகையுடன்

யாருக்கும் தெரியாமல் பிரித்து
ஒளித்து ஒளித்துப் படிக்கப் படிக்க
ஒவ்வோர் சொல்லும்
என்னைப் பற்றியதாக
சிரித்தும் அழுதும் கோபமாகவும்
வெட்கமாகவும் விளக்கமாகவும்
கலவையாக அவித்துக்கொட்டியதென்னை அக்கடிதம்

அடிக்கடி படிக்கிறேன் இப்போதும்
ரகசியமாக

மடித்து மூடி வைத்துவிட்டு
தெருவில் இறங்கி நடக்கிறேன்
தபால்காரரின் புன்னகையே
எதிர்ப்படும் யாவரிடமும்

ஒவ்வொருவரிடமிருந்தும்
கடிதம் படித்த வாசனை
காற்றில் கரைந்து வழிந்தபடியே

ஒட்டப்படா முகவரியற்ற கடிதமொன்று
ஒவ்வொருவர் முகவரிக்கும்
சரியாகத்தான் வந்து சேரும்போல
ஒளித்து மறைத்து
உதடுகள் பிரியாமல்
உள்ளுக்குள் படிக்க

- ரா. ராஜசேகர்
சென்னை
Last Updated on Tuesday, 15 May 2018 21:14