சில நிர்ப்பந்தங்கள்

காரை நிற்பாட்டி விட்டு மணியைப் பார்த்தேன். வேலை தொடங்க இன்னும் 5நிமிடங்கள் இருந்தன. எனக்கொரு வசதி. நான் வேலை செய்யும் வங்கியும், தபாற்கந்தோரும் பக்கத்துப் பக்கத்திலேயே இருப்பதால் வேலைக்கு வரும்போதே தபாற்கந்தோர் வேலைகளையும் முடித்து விடுவேன்.

அன்றும், முதல்நாள் இரவு தம்பிக்கு எழுதிய கடிதத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். அந்த 5நிமிடங்களுக்குள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்து விட எண்ணி வாசித்தேன்.

19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில்
அன்பு ####, எப்படி இருக்கிறாய்? பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்...! மனசை நெருடுகின்றன... என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம். என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம்.
 கடிதத்துடன் எனது பிள்ளைகளின் சில புகைப்படங்களையும் என்வலப்பினுள் வைத்து ஒட்டி விட்டு, நேரத்தைப் பார்த்த போது, நேரம் 5நிமிடங்களைத் தாண்டியிருந்தது. இடைவேளையின் போது அஞ்சல் செய்ய நினைத்துக் கொண்டு நான் வேலை செய்யும் வங்கியினுள் நுழைந்து விட்டேன்.

சிரிப்புகள், குறும்புகளுக்கு மத்தியில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். என் மனமோ தம்பிக்கு எழுதிய கடிதத்தை வரிவரியாக வாசித்து, அது கிடைத்ததும் அவன் மகிழப் போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

ஒருவாறு இடைவேளை வந்ததும் ஓடிப்போய் கடிதத்தை அனுப்பி விட்டு வந்து வேலைகளைத் தொடர்கையில் நிம்மதியாக இருந்தது.

அடுத்தநாள் சனிக்கிழமை(20.11.2003) நானும் எனது கணவரும் காரில் Pforzheim செல்லும் போது கணவர் ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எனது கவனம் அவரது கதைகளில் இருக்கவில்லை. நான் ஏனோ கவலையாக இருந்தேன். என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. "என்ன கொம்மா கொப்பரை நினைச்சு அழுறியோ?" என்றார். "இல்லை" என்றேன். "தம்பிமாரை நினைச்சு..." அதற்கும் " இல்லை" என்றேன். எனக்கே, ஏன் நான் அழுகிறேன் என்று தெரியாமல் இருந்தது.

தொடர்ந்த நாட்களில் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை. என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்து வந்த சனிக்கிழமை(27.11.2003) ஜேர்மனியில் மாவீரரை நினைவு கூரும் நாளாக அனுஸ்டிக்கப் பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு அன்று பாடசாலை இருந்தது. அதனால் கணவர் மட்டும் அதிகாலையிலேயே போய் விட்டார். நான் ஏதேதோ நினைவுகளோடு சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.

கொழும்பில் இருந்து சித்தி அழைத்திருந்தா. இரண்டு கதை கதைத்து விட்டு "மனதைத் திடப் படுத்திக் கொள்ளு மேனை" என்றா. ஏதோ ஒரு பாதகமான செய்தி என்ற உறுத்தலில் நெஞ்சில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

"சபா பூநகரித் தாக்குதலிலை போயிட்டான்" என்றா. "11ந் திகதி(11.11.1993) நடந்தது" என்றா

"என்ன..? எப்படி..?" என்ற எனது கேள்விகளுக்கு "ஒரு விபரமும் சரியாத் தெரியேல்லை. நான் பிறகு எடுக்கிறன். எல்லாருக்கும் சொல்லு மேனை" தோலைபேசியை வைத்து விட்டா. நான் அழவில்லை. மலைத்துப் போய் நின்றேன். எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை என்பதில் மனது மிகவும் ஏமாற்றத்தை உணர்ந்தது.

"எல்லாருக்கும் சொல்லு மேனை" என்ற சித்தியின் குரல் மீண்டும் ஒலிக்க, லண்டனில் இருக்கும் தங்கையைத் தொலைபேசியில் அழைத்தேன். மூச்சு வாங்கிய படி "ஹலோ" என்றவள் "இப்பத்தான் கடையிலை சாமான்கள் வேண்டிக் கொண்டு வந்தனான். படியிலை வரவே ரெலிபோன் அடிச்ச சத்தம் கேட்டது. அதுதான் ஓடி வந்தனான்" என்றாள். கர்ப்பமாயிருக்கும் அவளின் மூச்சு பலமாகவே எனக்குக் கேட்டது. எனது அழைப்பு என்ற சந்தோசத்தில் "அக்கா.. " என்றவளிடம் எப்படி அந்தச் செய்தியைச் சொல்வது! இதுவும் ஒரு கொடுமைதான். ஆனாலும் சொல்ல வேண்டுந்தானே!

"சித்தி போன் பண்ணினவ. "

"என்னவாம்?"

"சும்மாதான்.....
சபா பூநகரி அற்றாக்கிலை போயிட்டானாம்."

"சும்மா சொல்லாதைங்கோ." சிரிக்கிறாளா, அழுகிறாளா என்று யோசிக்கையில் அவளின் கேவல். தொலை பேசியை வைத்து விட்டேன். அந்தச் செய்தியை அவளிடம் சொல்லியதற்காக சிலமணி நேரங்கள் அப்படியே இருந்து அழுதேன். (அந்தக் கேவல் மாதங்கள், வருடங்களாக என்னை அழ வைத்தது.)

பின் எனது பெரிய தம்பியை அழைத்து... பிள்ளைகள் பாடசாலையால் வர அவர்களுக்கு.. இரவு கணவர் வர அவருக்கு..

அதன் பின் தம்பி இறந்ததற்காகவா அல்லது ஒவ்வொருவரிடமும் அந்தக் கொடிய செய்தியை நானே சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தத்திற்காகவா என்று தெரியாமலே நான் அழுது கொண்டிருந்தேன்.

சந்திரவதனா
28.8.2006

Comments

Hauptkategorie: blogs பத்தி/Column/Kolumn Zugriffe: 4505
Drucken

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை