சட்டத்தின் முன்னால் Print
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 25 September 2017 08:47
கடந்த வருடம் ஒக்ரோபரில் யேர்மனியில் எசன் என்ற நகரத்தில் உள்ள டொச்ச வங்கியில் பணம் எடுக்கப் போனபொழுது கார்ல் (83 வயது) என்பவர் மயக்கமாகி தரையில் விழுந்து விட்டார். அவர் விழும் போது தரையில் தலை மோதியதால் மூளையில் பாரிய அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. பணம் எடுக்கும் அந்த இயந்திரத்துக்கு முன்னால் தரையில் நீண்ட நேரமாக கார்ல் மயக்க நிலையிலேயே இருந்திருக்கிறார். பின்னர் தகவல் அறிந்து அம்புலன்ஸ் வந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது. வைத்தியசாலையில் எவ்வளவோ முயன்றும் ஒரு வாரத்துக்கு மேல் மருத்துவர்களால் கார்லின் உயிரை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. தலையில் ஏற்பட்ட பலமான தாக்குதலால் மூளையில் பாரிய அதிர்வு ஏற்பட்டு அதனால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கார்லின் மரணத்துக்கான அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.

கார்லின் மரணம் இயற்கையானது என்றாலும் அவரது மரணம் தொடர்பான விடயம் தொடர்ந்தது.

பணம் எடுக்கும் இயந்திரத்திற்கு முன்னால் இருந்த கமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவை பார்த்ததில், கார்ல் மயக்கமாக நிலத்தில் இருந்த நேரத்தில் அவரைக் கடந்து போய் நான்கு பேர் இயந்திரத்தில் பணம் எடுத்தது பதிவாகி இருந்தது. ஐந்தாவதாக வந்தவர் மட்டும்தான் கார்ல் தரையில் இருப்பதை பார்த்து அம்புலன்ஸ்ஸிற்கு அழைப்பைக் கொடுத்துவிட்டு தன்னாலான முதலுதவியை கார்லுக்குச் செய்திருந்தார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாக, ‘இதுதானா மனிதம்? பணம்தானா பிரதானம்? யேர்மனியில் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் மனிதாபிமானம் இருக்கிறதா? ’என விவாதங்கள் தொடங்க, வழக்கு ஒன்று பதிவானது. கார்ல் நினைவிழந்து தரையில் படுத்திருந்த போது அவரைக் கடந்து போன நான்கு பேரையும் இனம் கண்டு நீதிமன்றம் அவர்களை விசாரணைக்கு அழைத்தது.

அந்த நால்வரில் ஒருவர் மட்டும் பெண்.

“தரையில் படுத்திருந்த ஆண் வீடில்லாத ஒரு அநாதை. குடித்துவிட்டு வங்கிக்குள் வந்து படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன்”

“இப்படியானவர்களை தொடுவதால் நோய் ஏதாவது தொற்றிக் கொள்ளலாம் என்ற அச்சமும் இருக்கிறது”

“எனது தாயார் படுக்கையில் இருக்கிறார். அவரை நான்தான் பராமரிக்கிறேன். வீட்டுக்கு உடனேயே போக வேண்டி இருந்தது”

“பல இடங்களில் வீடில்லாதவர்கள் இப்படி படுத்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே அன்றும் அதை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை” என்று நால்வரும் தங்களுடைய தரப்பு வாதங்களை தங்கள் தங்கள் சட்டத்தரணி மூலம் முன் வைத்தார்கள்.

“உடனடியாக கார்ல்லை வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தாலும் கூட அவரை எங்களால் காப்பாற்றியிருக்க முடியாது. அவ்வளவு மோசமான நிலையிலேயே அவரது உடல் நிலை இருந்தது” என்று மருத்துவரும் தனது சாட்சியத்தை அங்கே பதிவு செய்தார்.

வழக்கின் முடிவு 19.09.2017இல் வந்திருக்கிறது. மாலை ஐந்து மணிக்குப் பிறகே இந்த சம்பவம் நடந்ததாகப் பதிவாகி இருக்கிறது. அப்பொழுது வங்கியின் செயற்பாடு வெளியாருக்கு இல்லை என்பதால் கடனட்டை இல்லாமல் வங்கிக்கதவை திறக்க இயலாது. வீடில்லாத ஒரு அநாதையிடம் வங்கிக் கடனட்டை இருப்பது சாத்தியமில்லை. கதவுக்கும், பணம் எடுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் கார்ல் சுயநினைவு இல்லாமல் விழுந்திருக்கிறார். அவரை கடந்துதான் உள்ளே போக முடியும். வெளியே வரமுடியும். நான்கு பேரும் அவரைக் கடந்து போய்த்தான் தங்கள் தேவைகளை செய்திருக்கிறார்கள்.

விபத்து ஒன்று நடக்கும் இடத்தில் சமூக ஒற்றுமையான செயற்பாடு அவசியம். ஒரு விபத்து நடக்கும் பட்சத்தில் முதலுதவி செய்யாதிருப்பதும், விபத்தில் பாதிப்புக்கு உள்ளானவருக்கு உதவிகள் கிடைக்கும் வழியை இடைமறித்து நிற்பதும் குற்றமான செயல்கள். மேலும் சூழ்நிலை, பிரதான முக்கிய கடமைகள், உயிராபத்து இவை ஏதும் இல்லாத பட்சத்தில் பாதிப்புக்குள்ளானவருக்கான முதலுதவி தராமல் போவது, வழிப்பறியை தடுக்கும் நடவடிக்கை எடுக்காது இருப்பது, கற்பழிப்பு போன்ற வன்முறைகள் நடக்கும் பட்சத்தில் அவற்றை நிறுத்த செயற்படாமல் இருப்பது என்பன யேர்மனியின் சட்டப்பந்தி 323c யின் படி பிழையான குற்றமாக கருதப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனையளவில் வழங்கப்படலாம் என நீதிபதி விற்றன்பேர்க் எச்சரித்து 2400 யூரோவிலிருந்து 3600 யூரோவரை நான்கு பேருக்கும் அபராதம் அளித்து தீர்ப்பு தந்திருக்கிறார்.

தினசரி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதைத்தான் நோக்கமாக கொண்டவர்கள் மட்டுமல்லாமல் ஒரு விபத்து நடக்கும் இடத்தில் அதை அவசர அவசரமாக கைத்தொலைபேசியில் பதிந்து சமூக வலைத்தளங்களில் தரவேற்றுவோரும், விபத்து நடக்கும் இடத்தில் முதலில் சமூக ஒற்றுமையான செயற்பாடும் முதலுதவியுமே அவசியம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

- ஆழ்வாப்பிள்ளை
24.09.2017
Last Updated on Monday, 25 September 2017 08:53