நான் சவாரி கொடுத்த "செவீல்ட்" இளைஞன் Print
Literatur - பத்திகள்
Written by நடராஜா முரளீதரன்   
Friday, 26 October 2018 06:10
நான் சவாரி கொடுத்த "செவீல்ட்" இளைஞன் "மொன்றியலில்" கடந்த மூன்று நாட்களைச் செலவிட்டிருந்தேன். ஒருவாறாக வந்த வேலையை முடித்தாயிற்று! மோகனோடுதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வருத்தத்தின்(புற்று நோய்) மத்தியிலும் எனக்கான எத்தனையோ தேவைகளை நிறைவேற்றியிருந்தான் மோகன்! தையிட்டி சிறியிடமும் மூன்று நாட்களும் போயிருந்தேன்.

இரவு நேரங்களில் நித்திரையின்றித் தவித்தாலும் அதிகாலையில் எழும்பக் கூடியதாக இருந்தது. பின் சுடு நீரில் குளிப்புப் போட்டு உடல் ஆயாசத்தைத் தீர்த்து வந்த வேலையை முடித்து விட வேண்டுமென்ற உந்துதலில் துடித்தபடி இருந்தது மனம்! இடையிலே ஒரு நாள் இரவு "சீட்டாட்டம்" வேறு. கையிலை அடுக்காதே, "காட்ஸை இறுக்கி அடிக்காதே" என்று என் மீது எகிறி விழுந்தார்கள். வழமை போல எப்படியாவது "ஜெயித்து விடு" என்ற வெறி மனதுக்குள் மதம் பிடித்தபடி! ஆனாலும் சாவகாசமாக குரலை அமத்திப் பிடித்து, பொறுமையாக வாய் வீச்சுக் காட்டாது அடக்கமாக எப்படித்தான் இருந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதாலா? இருக்கலாம். மனிதன் என்பவன் அடிப்படையில் சுயநலப்பிராணிதான் என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டேன்.

"மொன்றியலை" விட்டுப் புறப்பட்ட போது நகரம் மஞ்சள் வெய்யிலில் மினுங்கிக் கொண்டிருந்தது. இடைவழியில் ஓய்வுக்காகக் "கிங்ஸ்ரனில்" காரை நிறுத்திப் புறப்பட்ட வேளையில் கூட்டி அள்ளிக் கூந்தலை முடிந்திருந்த "பொப் மாலி" சிகையுடைத்த வெள்ளையின இளைஞர் மட்டையைத் தூக்கி ரொறொன்ரோ வரை போவதற்கு சவாரி கிடைக்குமா? என்கிறார். மனது "எற்றிக் கொள் அவனும் உன் போன்ற ஜென்மம்தான்" என்றது. ஏற்றிக் கொண்டேன்.

பெயர் "ஆடம்". ஊர் இங்கிலாந்தில் உள்ள "செவீல்ட்". "நோவா ஸ்கோர்ஷியாவிலிருந்து" "ஒட்டாவா" ஊடாக 15 பேருக்கு மேல் இலவச சவாரி அளித்து "கிங்ஸரன்" வரை வந்து சேர்ந்திருந்தார் "ஆடம்". கையில் பெரிய பயணப் பொதி. கூடவே உறையால் மூடப்பட்ட "கிற்றார்". எல்லாவற்றையும் காரின் பின் "ட்ரங்கில்" போட்டுக் கொண்டோம்.

"செவீல்ட்" பல்கலைக்கழகத்தில் "தத்துவம்", "உளவியல்" பாடங்களைக் கற்று இளமானிப் பட்டப்படிப்பை முடித்த இளைஞர் இவர். நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றார். "நோவா ஸ்கோஷியாவில்" கடந்த மூன்று மாதங்களாகக் கடுமையான "கட்டட வேலை" செய்து காசை மிச்சம் பிடிக்கப் பார்த்த இவருக்கு வேலை கொடுத்தவர் 800 டொலர்கள் வரை கொடுக்காது விட்டிருக்கிறார். அவரது போதைப் பழக்கத்தால் தனக்கு அவரால் காசு கொடுக்க முடியவில்லை என்று கோபப்படாமல் சொன்ன 'ஆடம்" விடாமல் என்னோடு பேசியபடி!

சில நேரங்களில் "ஆடம்" மக்கள் கூடுமிடங்களில் "கிற்றார்" வாசித்துத் தனது அடிப்படைத் தேவைகளுக்காகக் காசு சேர்
ப்பதும் உண்டு. அவர் "கிற்றாரை" தானாகவே கற்றுக் கொண்டதாகச் சொன்னார். "ஜாஸ்" இசைதான் அவருக்குப் பிடித்தமானது. "ரொறொன்ரோவில்" சில நாட்கள் தங்கி விட்டு "வான்கூவரை" நோக்கித் தனது பயணத்தை மீண்டும் தொடங்க உள்ள "ஆடத்திடம்' கணனியோ, கைத்தொலைபேசியோ கிடையாது. "வான் கூவரில்" மரம் நடும் வேலையில் மூன்று மாதங்களாவது ஈடுபட வேண்டும் என்பது அவரது திட்டம்.

பட்டப்படிப்பை முடித்த பின் ஆசிரியராகப் பணியாற்றிய "ஆடம்" ரூமேனியாவில் உள்ள "ஜிப்சி" மக்களுக்காக நிறையப் பணிபுரிந்துள்ளார். பிரான்சில் இருந்த வேளையில் 'பிரெஞ்சு" மொழியை கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது அவரால். தான் எழுதிய கவிதையொன்றைச் சொல்லி அதனை விளங்க வைத்தார். நான் அவரை "ஸ்காபுரோ ரவுண் சென்ரரில்" கொண்டு போய் ஒரு தேத்தண்ணியும் வாங்கிக் கொடுத்து "மெட்ரோ' ரயிலில் ஏற்றி விட்டேன். நாளை அவர் "டண்டாஸ்" சதுக்கத்தில் "கிற்றார்" வாசித்துக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. "வான்கூவர்" போவதற்கு முன் என்னை அழைக்குமாறு கூறியிருந்தேன் அவரிடம். என்ன செய்யிறாரோ தெரியவில்லை. பார்ப்போம்! ஏதாவது அவரிடமிருந்து சேதி வந்தால் மீண்டும் அவர் பற்றி எழுதுவேன்!

- நடராஜா முரளீதரன்
2013
Last Updated on Friday, 23 November 2018 16:06