`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இளங்கீரனது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும், உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.
- த.சிவசுப்பிரமணியம்