தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி

புனைவல்ல - உண்மை

சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு கொடுத்த புத்தகம். தொப்புள்கொடி.

வாங்கிவிட்டேனேவொழிய பலவேறு காரணங்களால் புத்தகம் வாசித்ததோடு சரி. மனதில் ஆரபி, மாதவன், நிலா, வெற்றிவேலர், மீனா, அஞ்சலி, மயூரன் என பிம்பங்களின் நடமாட்டம்.ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் தொப்புள்கொடியுடனேயே சென்றேன். ஒவ்வொருமுறையும் எழுதத்தான் தருணம் வாய்க்கவில்லை. அன்று மழை உதவியது.

தொப்புள்கொடியுடன் எழுதுகோல் நிமிர்த்தி உட்கார்ந்தேன். எப்படித் தொடங்கலாம் என்கிற யோசனையுடன் கணினியின் இணையதளத்தில் மேய்ந்தேன். சந்திரவதனா பிலாக்கில் செய்தி. நித்தியகீர்த்தி மறைந்தார்.  அதிர்ந்தேன். திறந்த எழுதுகோல் மூடிக்கொண்டது. மனம் அடைத்துக்கொண்டது. வெளியே மழை அழுது கொண்டிருந்தது.

எதற்காக சித்தன் எனக்கு இந்த புத்தகத்தைக் கொடுத்தீர்கள்? எதற்காக நான் எழுதுவதைத் தள்ளிப் போட்டேன். நித்தியகீர்த்தி நம்முடன் நகமும் சதையுமாக மதிப்புரையைக் காணும்படி இருந்திருக்கலாகாதா? இப்போது ஏன் எழுதத் துவங்கினேன்? நான் எழுதும் வேளை பார்த்து இவ்வுலகத்துடனான தொப்புள்கொடி உறவை அறுத்துக் கொண்டு மறைந்து போக வேண்டிய அவசியம் தான் என்ன?

சித்தனை அழைத்து புலம்ப ஆரம்பிக்க... ஒன்றும் புரியாமல் அவர் என்னவாயிற்று என்கிறார். நித்தியகீர்த்தி இப்போது நம்மிடையே இல்லை என்றேன். தொலைபேசியும் தன் பங்குக்கு துண்டித்துக் கொண்டது. மதிப்புரை எழுதி பிரசுரிப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் நினைவாஞ்சலி என்றார் சித்தன்.

மனம் கனக்க எழுதுகின்றேன்.ஆஸ்கார் ஒயில்டுக்குதான் துன்பப்படுவது என்பது ஒரு நீண்ட தருணம். அதைப் பருவங்களாகப் பிரிக்க முடியாதென்கிறார். உண்மைதான். நானும் ஆஸ்கார் ஒயில்டைப் போலவே, காலம் நம்முடன் முன்னேறுவதில்லை. அது சுற்றிச் சுழல்கிறது. அது வலி என்னும் மையத்தைச் சுற்றுகிறது என்பதை நம்ப ஆரம்பித்தேன். அதோடு நின்றதா ஆஸ்கார் ஒயில்டின் சிந்தனை? 'எல்லாவகையான உயிர்த் தியாகங்களும் காண்பவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றுவதாக சொல்லப்படுகிறது. இந்த விதிக்கு 19 ஆம் நூற்றாண்டும் விலக்கல்ல.' என்றும் எழுதியிருப்பார்.

இதோ இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம். இன்னும் இந்த நிலைமை மாறவில்லை. இன்றும் உயிர்த் தியாகங்கள் அற்பமானதாகத் தோன்றுகின்றன. ஒரு இனத்தின் அழிவு 'போரில் இது சகஜம்' என்னும் மொழியில் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மௌன சாட்சிகளாக மனசாட்சியே இன்றி பார்த்துக் கொண்டு உண்டு, உறங்கிக் கொண்டிருக்கிறோம்.

'இலக்கியப் படைப்பினை சம்பாவனை செய்பவனுக்கும் ஆக்கினையே. அவன் படைப்பிலே சத்தியம் - தர்மம் ஆகிய இரண்டு முகங்களும் செப்பமாக அமைதல் வேண்டும் என்று அடம் பிடிப்பான். இந்த முரண்டு. விடுதலை வெறியின் மூர்க்கத்தினை உட்கொள்ளும். அத்தகைய வெறியனுக்கு சர்வபரித்தியாகஞ் செய்யும் அருள் வந்து பொருந்தி விடும். அருளும் வெறியும் பிணைந்த ஆக்கினை!' எழுத்தாளர் எஸ்.பொ தன்னுடைய 'நனைவிடை தோய்தல்' நூலில் முன்னீடாக எழுதியது இது.

இந்த வெறி, மூர்க்கம் நித்தியகீர்த்தியின் எழுத்தில் சத்தியத்துக்கு குறைவில்லாது மென்மையாக வெளிப்பட்டிருக்கிறது. மனித இனம் வாழும் காலத்திலேயே காண நேரும் மனதை உருக்கும் வெவ்வேறு விதமான நிகழ்வுகளை உயிர்த்துடிப்புடன் கூடிய நாவலாக அளித்திருக்கிறார் மறைந்த எழுத்தாளர் நித்தியகீர்த்தி.

எழுத்தாளர் நித்தியகீர்த்தி என்று வந்திருக்க வேண்டிய இடத்தில் மறைந்த எழுத்தாளர் என நேர்ந்ததும் விதிவசமே. அவ்வகையில் இருக்கும் போதே கீர்த்தி பெற்றிருக்க வேண்டியவர் இரத்தமும் சதையுமாக சொந்த நாட்டையும் இலட்சியத்திற்கென உயிருடன் உலவும் மக்களைக் காண இந்நாவலைப் படைத்ததன் மூலமாக மறைந்த பிறகும் நித்தியகீர்த்தி பெற்றுள்ளார்.

அவ்வகையில் இந்நாவலின் ஓர் பாத்திரப்படைப்பான வெற்றிவேலரின் வாழ்க்கையைப் போன்றே இவரின் வாழ்வும் ஒரு இதயவலியெனும் சிறுகாரணம் காட்டி முடிந்திருக்கிறது. அவ்விதமே அர்ப்பணிப்புணர்வுடன் வாழ்ந்தவர் உயிரையும் ஆகுதியாய் அளித்து விட்டார்.

ஆரபி, மாதவன், நிலா, வெற்றிவேலர், மீனா, அஞ்சலி, மயூரன் என அவர்களின் பாத்திரப்படைப்பு கண் முன்னே நாம் காணும் இக்காலத்தைய சக மனிதர்களின் நாடு கடந்து வந்து வாழும் அவலத்தைச் சுட்டுகிறது. அவர்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வந்தவர்கள், ஆஸ்திரேலியாவில் அவர்களின் வாழ்க்கை என ஒரு இனத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் கண் முன்னே நிகழும் நிகழ்வுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாத்திரங்களின் இடையே காலம் அதன் காட்சிகளை இட்டுச் செல்கிறது. கதாபாத்திரங்கள் உள்ளத்தின் உட்புகுந்து பேச ஆரம்பிக்கின்றனர். அவர்களின் மௌனமொழிகள் மன ஓடையில் சலனங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பெருங்கடலின் அலைகளென பொங்கிப் பிரவகித்துச் சீறிப்பாய்கின்றன.

ஒரு கணவன், மனைவி. அவர்கள் பிறக்கப் போகும் குழந்தைக்கென கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். ஆரபி விரும்பும் இயல்பான வாழ்க்கை அவளுக்கு மறுக்கப்படுகிறது. அவளைத் தொடரும் காரின் அசைவை அவள் கண்டுகொண்டு தப்பிக்க விரும்புகிறாள். தப்பித்து தோழி மீனாவின் வீட்டில் வந்து அதைச் சொல்கையில் மீனாவும் தான் கண்காணிக்கப் படுவதைக் கூறுகிறாள். ஒரு குடும்பக்கதை போல ஆரம்பித்து, ஒரு துப்பறியும் நாவலின் விறுவிறுப்பைக் கொண்டு ஒரு இனத்தின் கதையைக் காட்சியாய் சித்திரப்படுத்தும் நாவலாக உருவெடுக்கையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆரபியின் பெற்றோர் இளங்கோவன், திலகாவின் பாத்திரப்படைப்பு, மகளின் வாழ்க்கை நலம் குறித்த அக்கறை, அவர்களின் பூர்வீகக் கதையோடு வருகிறது. இந்தியாவுக்கு வந்து கடவுளை வணங்குகின்றனர் ஆரபியின் சுகப்பிரசவத்திற்காக.

சிறையிலிருந்து விசாரணைக்கைதிகளாக ஆரபியும், மாதவனும் திரும்பி வரும்போது அமைதியும், மகிழ்ச்சியும் சிறையில் விட்டு வந்ததாகச் சொல்லப்படும் விதம், மாரடைப்பினால் வெற்றிவேலரை மீனா இழக்கும் காட்சி, அஞ்சலியை விட்டுச் செல்லும் மயூரன் கடைசியில் அவளிடம் தொலைபேசினால் மனம் மாறிவிடும் என்று ஆரபியிடம் மட்டும் பேசிவிட்டு விமானநிலையத்திலிருந்து கிளம்புவது என உருக்கம் நிறைந்த காட்சிகள் நூல் முழுக்க ஆங்காங்கே சிறுபொறிபோல் மின்னியபடி வருகின்றன.

ஆங்காங்கே வருட, மாத, தேதி சொல்லப்பட்டு நிகழும் நிகழ்வுகள் உண்மையான நிகழ்வின் வரலாற்றுப் பதிவைச் சுட்டுகின்றன. சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தவர்களின் படங்களை அவர்கள் பார்க்கும் காட்சி வரும் அத்தியாயம் உயிரை உலுக்கியெடுக்கிறது.ஊடகங்களின் எந்த செய்தியின் முக்கியத்துவம் அதிகம், எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என அக்கறை அற்ற போக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தர்களின் பாத்திரங்களை மண்மணம் ததும்பத் ததும்ப படைத்திருக்கிறார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் கட்டளைக்கிணங்கி உப்பு சத்தியாகிரக நிகழ்வுக்குச் செல்ல விடுதலைப் போராட்ட வீரர்கள் புறப்படுகின்றனர். 1930 ஆம் ஆண்டு. ஏப்ரல் 14 ஆம் நாள் ராஜாஜி தலைமையில் 99 போராட்ட வீரர்கள் திருச்சியிலிருந்து கால்நடையாக ஊர்வலமாக வேதாரண்யத்திற்குப் புறப்பட்டனர். வழியில் உள்ள ஊர்களில் உப்புச் சத்தியாகிரக வீரர்களுக்கு யாரும் வரவேற்பளிக்கக் கூடாது, தங்க இடம் அளிக்கக்கூடாது, உணவு வழங்கக்கூடாது என்று அரசு தடை விதித்திருந்தது. இதைக் கண்காணிக்க வழியெங்கிலும் போலீசார் நிறுத்தப் பட்டிருக்கின்றனர்.

வீரர்கள் போகும் பாதையெங்கும் போலீசார் மக்கள் அவர்களைக் காண இயலாதவாறு கண்காணிக்கின்றனர். மக்களோ, போராட்ட வீரர்களோ நேரடியாகச் சந்தித்துக் கொள்ளவில்லை. இலக்கினைப் போய்ச் சேரும் வரையில் வீரர்கள் களைப்படையாமல் சென்றது பொலீசுக்கு வியப்பாகவே இருந்தது. சிறிதும் களைப்பின்றி வீரர்கள் சென்றனர். எப்படி இது சாத்தியமானது என்பதுதே சுவாரஸ்யமானது.

மக்கள் வீரர்கள் எந்தப் பாதை வழியாக வருகிறார்களோ அங்கே அவர்கள் வருவதற்கு முன்பே உணவுகளை மறைத்து வைத்துவிட்டுச் சென்று விடுவர். சாலையில் வரும்போது 'நம்பர் 16' என்று சொல்லிவிட்டுச் செல்வான் ஒருவன். வீரர்கள் சிலர் தண்ணீர் சாப்பிட்டு வருகிறோம் என்று போவார்கள். தூரத்தில் 16 ஆம் எண் மரத்தில் உணவுப் பொட்டலம் கட்டப்பட்டிருக்கும். அதை அவிழ்த்து சாப்பிட்டு விட்டு வருவார்கள். 'மொட்டை ஆலமரம்' என்று ஒருவன் சொல்லி விட்டுப் போவான். இன்னும் சிலர் மொட்டை ஆலமரத்தில் பொந்திலிருக்கும் உணவுப் பொட்டலத்தில் இருக்கும் உணவை சாப்பிட்டு வருவார்கள். கனி கொடுக்கும் மரங்கள் அன்றைய நாள் உணவையும் அளித்தன. தேன்கூடுகளைப் போல கிளைகளில் தொங்கிய உணவுப் பொட்டலங்களை, அந்த இடத்தில் சரியாக உணவை எடுத்து உண்டு விட்டுச் சென்றதால் வீரர்கள் களைப்படையவில்லை.

இவர்கள் சாப்பிடவும் இல்லை. சாப்பிடாதது போல சோர்ந்து போகவும் இல்லை, என்னதான் செய்கிறார்கள் என்பது பொலீசாரின் குழப்பம்.

இந்த நாவலில், திட்டமிடப்பட்ட ஒரு கூட்டத்திற்கு மக்கள் பகிரங்கமாகப் பொறுப்பேற்கின்றனர். ஸ்ரீலங்கா அரசின் வெறியாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கன்பராவில் பாராளுமன்றத்துக்கு முன்னால் பகிரங்கக் குரல் எழுப்ப முடிவு செய்கின்றனர். அங்கு செல்ல ஒவ்வொருவரும் பயணத்திற்கென எடுத்துக் கொள்ளும் முயற்சி. 2006 மே 29 திங்கட்கிழமை காலையில் பாராளுமன்றத்தின் முன்னே' கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே' என கோஷம் எழுப்ப குழந்தைகள், முதியோர், ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள எடுத்துக் கொண்ட சிரத்தை காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறந்த சித்தரிப்பு. விடுதலைப் போராட்ட வீரர்களின் பயணத்தை, மனநிலையை நினைவுபடுத்துகிறது.

மயூரன், ஆரபி, மாதவன் காதலுக்கு திருமண பந்தம் வரை உதவியவனாதலால், கன்பாராவிலிருந்து திரும்பும்போது அஞ்சலியுடன் அவன் மட்டும் ஒரே காரில் செல்லும் வகையில் ஆரபியும், மாதவனும் உதவுகின்றனர். அப்போது அஞ்சலி மயூரனிடம் காதல் என்றால் என்னவெனத் தெரியுமா, ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு வெட்டிவிட்டு விளையாட்டாகச் செல்கிறாயே என்கிறாள். மயூரன் இலட்சியம் கருதி அஞ்சலியின் காதலை மறுக்க, 'அதை காதலிக்கும் முன்பு சொல்லியிருக்க வேண்டும்' என்கிறாள். அதற்கு மயூரன் சொல்கிறான். 'சொன்னனான். நீ அதைக் கேட்கயில்லை. என்ரை மனமும் என்னையும் மீறி உன்னிலை ஆசைப்பட்டது உண்மைதான். ஆசைகள் யோசிச்சு வாறதில்லை. அதிலேயும் ஆண் பெண்களுக்கு இடையிலே வருகிற உறவு, முகிலைக் கிழிச்சு வருகிற மின்னல் மாதிரி. தடுத்து நிறுத்த ஏலாது. காதலுக்காக வேணுமென்றால், இப்பக் கொஞ்சக் காலம் இரண்டு பேரும் அழுவம். என்னைக் காதலிச்சிட்டு வாழ்நாள் முழுக்க அழப்போறியே?' என்று மயூரன் கேட்கும்போது மனம் அதிர்கிறது.

ஆரபியின் கணவன் மாதவனின் பிள்ளைப்பிராயம் குறித்த சஸ்பென்ஸ் முதல் அத்தியாயத்தில் 'தந்தையைக் குறித்து எதுவும் சொல்லாதே' என்று சொல்லும் போது ஆரம்பித்து கடைசி வரை தொடர்கிறது. கடைசிக்கு முந்திய 19 ஆவது அத்தியாயத்தில் சிறையில் வைத்தே அதை வெளிப்படையாக ஆரபியிடம் சொல்லும்போது தெரிகிறது. தனது தந்தையின் மீதான அன்பை, மதிப்பை, அவரின் சிறப்பை எடுத்துச் சொல்கிறான் ஆரபிக்கு.

மாதவனின் சிறைவாழ்க்கை, சிறையில் உடனிருக்கும் கைதிகளுடனான உரையாடலில், வெளி உலகுக்கு சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தாலும் நெருங்கிய நண்பனாய் ஒருவன் இருந்தாலும், அவன் பார்க்கும் பார்வையின் வேறுபாடு மாறும் என்னும் சொல்லும்போது தொடரும் பகுதி, மூளையில் அடைக்கப்பட்டு அழுந்த மூடிக்கிடக்கும் பலபகுதிகளை சடார் சடாரெனத் திறக்கிறது.

ஆரம்ப அத்தியாயத்தில் தொப்புள்கொடியின் உறவாக ஆரபி கர்ப்பிணிப் பெண்ணாக அறிமுகமாகிறாள். முடிவில் மீண்டும் கர்ப்பிணி. கடைசி அத்தியாயம் தொப்புள்கொடி உறவு தொடர்கின்றது, ஆனால் அந்த உறவுகளின் கதைக்குத்தான் இன்னும்.... என முடிகிறது.

தொப்புள்கொடி என்பது குழந்தை பிறக்கும் வரையில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை உணவினைப் பெறுவதற்கென தாயையும் குழந்தையையும் இணைக்கும் உயிர்க்கொடி. அது இல்லையெனில் குழந்தை உயிருடன் உலகுக்கு வரவியலாது. குழந்தை பிறந்த பின்போ உடன் தொப்புள்கொடி அறுத்தெறியப் படவேண்டும். குழந்தை உலகில் உயிருடன் இருக்கும்வரை தாயுடனான அறுத்தெறியப்பட்ட அந்த தொப்புள்கொடி உறவு தொடரும். அதுபோல பிறந்த நாட்டினை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்த பின்பும், உயிருடன் இருக்கும் வரையில் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாய்த் தொடர்ந்து வருகிறது என்பதை இங்கே பதிவு செய்துள்ளார்.

மொத்தம் இருபது அத்தியாயங்கள். இது கற்பனை கலந்த நாவல் என்று அவர் தன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் கற்பனையாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. எந்தெந்த தேசங்களிலிருந்தோ, எங்கெங்கோ இருந்து வந்து ஆஸ்திரேலியாவில் சந்தித்து ஒருங்கே இருந்து அவர்கள் தமிழருக்காக இணைந்து நடத்தும் போராட்ட வாழ்க்கையின் நிகழ்கால சித்தரிப்பு மனதைப் பிசைகிறது. உண்மையில் நடைபெறும் காட்சிகளை, நிஜமாக உலவும் மனிதர்களைச் சற்றே புனைவு கலந்து பாத்திரங்களாக உலவவிட்டிருக்கிறார் நித்தியகீர்த்தி.

எது புனைவு? எது நிஜம்?

மழை பெய்து ஓய்ந்தது. ஒரு தேர்ந்த தைல வண்ண ஓவியமென வெளியே நீர் சொட்டிக் கொண்டிருக்க அனைத்தும், நிர்மலமாகத் தென்பட்டது.

அன்புடன்
மதுமிதா
16.11.09

உங்கள் கருத்துக்களுக்கு

Related Articles