தீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்

எழுத முனையும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் முந்திக் கொண்டு பொலபொலவென்று கொட்டி விடுவது கண்ணீர்த்துளிகள்தான். அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லை என்ற சோகம் நிறைந்திருக்கிறது. மரணத்தின் வலி ஒட்டியிருக்கிறது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும் விட்டுப் போகாது மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது.
அண்ணன்..
கூடப் பிறந்தவன். என்னோடு மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தூக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.


இப்போதும் அப்படித்தான்.
அவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொய்ந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ 2002இல் பதிவாக்க நினைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சென்று விட்டது.

அப்போது 2002 இலேயே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டு சென்றேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இது புத்கமாக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

 
அங்கு கிடைத்த மேலதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கூறி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முனைப்போடு செயற்பட்டார். இலக்கியச் செல்வர் முல்லைமணி (வே.சுப்பிரமணியம் S.l.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜெயவீரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவுரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.

 2002இல் நினைத்தது இப்போது 2009இல் நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டில் புத்தகக் கடைகளிலும்
Manaosai Online Shop இலும் நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு : Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!

Related Articles

`மே´ மாதம்

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்