மனஓசை மின்னூல்

நான் எழுதியவைகளை மின்னூல்களாகத் தொகுத்து விட வேண்டுமென்று பலகாலமாகவே விரும்பியிருந்தேன். சில தடவைகள் முயற்சித்தும் பார்த்தேன். அவைகள் எதுவும் எனது மனதுக்கு அவ்வளவு திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு Free Tamil Ebooks இன் அறிமுகம் கிடைத்தது.

அதில் எனது எழுத்துக்களை மின்னூலாக்குவதை விட அதில் இருக்கும் புத்தகங்களைத் தரவிறக்கி வாசிப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அப்படியே ஒரு வருடத்துக்கு மேலாக எனது படைப்புகளை மின்னூலாக்கும் எண்ணத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டு அங்குள்ள மின்னூல்களை அநுபவித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் வேறு தேடல்களின் போது இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பலதைக் கண்டேன். அது சந்தோசம்தானே என நீங்கள் எண்ணலாம். எனக்கு சந்தோசம் தரவில்லை. வியப்பாக இருந்தது. அப்படியே முழுமையாக எனது கட்டுரைகள் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் இருந்தன. இன்னும் இருக்கின்றன.

அதன் பின்தான் கண்டிப்பாக எனது எழுத்துக்களை மின்னூலாக்கி விட வேண்டுமென்று நினைத்து செயற்பட்டேன். http://freetamilebooks.com/ எனக்கு வழிகாட்டியாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது.

அந்த வழிகாட்டலுடன் http://pressbooks.com/ இல் பரீட்சார்த்தமாக எனது மனஓசை நூலையே மின்னூலாக்கினேன். முதல் முயற்சி என்பதால் நிறைய நேரங்களைச் செலவழித்தேன். ஆனால் சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். சில மென்பொருட்கள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

Free Tamil Ebooks (http://freetamilebooks.com/ebooks/manaosai-short-stories/) நேற்று எனது மனஓசை மின்னூலை வெளியிட்டது.

Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் இந்நூல் உருவாகியுள்ளது. இது எனது பரீட்சார்த்த முயற்சியே.

எனது மற்றைய படைப்புகளையும் ஒவ்வொன்றாகத் தொகுத்து விரைவில் சில மின்னூல்களைத் தயாரித்து விடும் என் எண்ணத்தை செயற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நீங்களும் உங்கள் படைப்புகளை இப்படி மின்னூல் ஆக்கலாம்.

- சந்திரவதனா
10.02.2016Comments

வணக்கம்
உங்கள் கதைகளில் எனக்குப் பலகதைகள் பிடித்திருந்தாலும் நீங்கள் எழுதிய வேஷங்கள், பாதை எங்கே? என்ற இரண்டு கதைகளும் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதோடு உங்கள் மீது இருந்த மரியாதையையும் குறைத்திருக்கிறது.

இப்படியான கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எம்மத்தியில் தன்குடும்பத்திற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்த பல ஆண்பிள்ளைகள் இல்லையா? உங்கள் கதைகளில் வரும் நபர்கள் உண்மையாக இருந்தாலும் லட்சத்தில் ஒரு ஆளாக இருக்கலாம் (விதி விலக்குகள் ) இவர்களைப் பற்றி எழுதி உங்கள் தரத்தை ஏன் குறைக்கிறிர்கள்?

நன்றி
என்றும் உங்கள் அன்பு வாசகன்
பிலிப் ராஜ்குமார்
Mon, Oct 23, 2017 at 3:37 PM

Related Articles