அக்கினிக் கரங்கள் (நாவண்ணன்)

சிறிய புத்தகம். 60 பக்கங்களை மட்டுமே கொண்ட புத்தகம். முன் அட்டையும் பின் அட்டையும் கிழிக்கப் பட்டுள்ளன. அப்படியேதான் நாவண்ணன் மூன்று அக்கினிக் கரங்களை என்னிடம் தந்தார். அப்போது நான் அது பற்றி யோசிக்கவில்லை. யோசித்திருந்தால் அட்டைப்படத்தில் என்ன இருந்தது என்று கேட்டிருப்பேன்.

இப்போதுதான் பார்க்கிறேன். யெர்மனிக்குக் கொண்டு வரும் போது பாதுகாப்புக் கருதி முன், பின் அட்டைகளைக் கிழித்திருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்தாய் வெளியீடாக 1995 ஐப்பசியில் வெளி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மாறன் பதிப்பகத்தில் அச்சிடப் பட்டிருக்கிறது.

சிறிய புத்தகம். ஒரே மூச்சில் வாசித்து விடக் கூடியது. முடிந்த பின் மனதின் கனம் தவிர்க்க முடியாதது. 1987, ஒக்ரோபர் 21 - 22ந் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிப் படை புரிந்த படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட குறுநாவல்.

இது ஒரு ஆவணப்பதிவும் கூட. தமிழீழத்தில் இந்திய அமைதிப்படை நடாத்தி விட்ட கொடிய படுகொலைகளின் சாட்சிகளில் ஒன்று. யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு மருத்துவத்தாதிதான் கதைசொல்லியாக இதில் வருகிறார்.

ஆபத்து வேளைகளில் எல்லாம் வாளோடும், சிலம்போடும் தோன்றி தீயவர்களைத் துரத்தியடிக்கும் கதாநாயகன் எம்.ஜி.ஆர், அகிம்சையைப் போதித்த காந்தி, அறிஞர் அண்ணா இவர்களை எல்லாம் மனதில் வரித்துக் கொண்டு இந்தியா மீது அபிமானமும், நம்பிக்கையும் கொண்டிருந்த மருத்துவத்தாதி எப்படி எல்லாமோ ஏமாந்து போகிறார்.

மருத்துவத்தாதி மட்டுமா..?

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் வந்த குதித்த போது எந்த அரசியல் சூட்சுமமும் புரியாமல் எப்படியெல்லாம் பல தமிழீழ மக்கள் குதூகலித்தார்கள். ஒப்பரேசன் பூமாலை என்று சொல்லி உணவுப் பொட்டலங்கள் மேலிருந்து இறங்கியபோது எப்படிப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.

எல்லாம் சிலகாலம்தான்.

இந்திய அமைதிப்படையின் வரவு தமிழ்ப்போராளிகளை அடக்கி, நிராயுதபாணிகளாக்கவே என்ற சந்தேகம் மெதுமெதுவாக ´´ எழத் தொடங்கினாலும், இந்திய அமைதிப்படையிடமிருந்த துப்பாக்கிகள் மெதுமெதுவாகத் தமிழர் பக்கம் திரும்பிய போதுதான் உண்மை நிலையைப் பலர் உணர்ந்து கொண்டார்கள். புரிந்து கொண்டார்கள். அந்தத் தாதியும் உணர்ந்து கொண்டார்.

ஐந்து அம்சக் கோரிக்கையை வைத்த திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமை, தீருவிலில் தீயான பதின்மூன்று போராளிகள்... இவைகளுடன் யாழ்ப்பாணம் மீண்டும் குருதி வெள்ளத்தில் தோய்ந்தது.

தொடர்ந்தது

1987, ஒக்ரோபர் 21,22 ந்திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து பாதுகாப்பான இடமெனக் கருதி வைத்தியசாலைக்குள் இருந்த கதிர்இயக்க அறைக்குள் ஒழிந்திருந்த வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர்கள், நோயாளிகள்... என்று பாகுபாடின்றி எல்லோரையும் சுட்டுத் தள்ளினார்கள். கிரனைட் வீசினார்கள். கடைசியில் அங்கே புலிகள் இருந்தார்கள் என்றார்கள்.

இறந்தவர்களோடு உடலங்கள் போல 18 மணித்தியாலங்களுக்கு மேல் அந்தக் கதிரியக்க அறைக்குள் இருந்து உயிர்தப்பிய சிலரின் வாக்குமூலங்களைக் கொண்டே கவிஞர் நாவண்ணன் இக்குறுநாவலை எழுதியுள்ளார். இதற்குள்ளே ஒளிந்திருந்தவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சீர்மாறன் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.

ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய படைப்பு.

சந்திரவதனா
27.04.2016

Related Articles