முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான்

செங்கை ஆழியானின் கதைகளை பாடசாலைக் காலங்களில் வாசித்திருக்கிறேன். அவைகளை இப்போது வாசிக்கும் போது அவைகள் மீதான பார்வைகளிலும், வாசிக்கும் போதான உணர்வுகளிலும் பலத்த வித்தியாசங்கள்.

முற்றத்து ஒற்றைப் பனையை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

மிக இயல்பான எழுத்து நடை. சரளமான பேச்சுத் தமிழ். கூடவே இழைந்தோடும் நகைச்சுவை. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டவில்லை.

ஒற்றைப்பனை யாழ்ப்பாணத்தில் பல வீடுகளின் முற்றங்களில் வீற்றிருந்திருக்கும். வண்ணார்பண்ணையைத் தளமாகக் கொண்ட ஒரு வீடு கதையில் இடம் பெற்றிருந்தாலும், என் மனக்கண்ணில் எனது பாட்டாவும், பெத்தம்மாவும்(அம்மம்மா) தமது வீடு, வாசல், காணிகளை பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சீதனமாகவும், அன்பளிப்பாகவும் கொடுத்து விட்டு கடைசிக் காலங்களில் ஒரு சிறுதுண்டுக் காணிக்குள் ஒரு சின்ன வீடு கட்டி வாழ்ந்த வாழ்க்கையும், அந்த வீட்டில் ஆடி அசைந்து கொண்டிருந்த ஒற்றைப் பனைமரமுமே காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.

கதை நெடுகிலும் நான் அந்த வீட்டுடனும், அந்தப் பனையுடனும், அதிலிருந்து கூவும் பட்டத்துடனுமே நடந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது வாய் விட்டும் சிரித்தேன்.

ஒவ்வொரு வருடமும் ஒரு பிலாந்துக் கொடியுடன் அல்லது கொக்குக் கொடியுடன் அல்லது சீனட்டானுடன் பயணத்தால் வந்து எங்களோடு குழந்தையாகி விடும் அப்பா, விண் ஙொய் ஙொய் என்று கூவ வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்துடன் பட்டம் கட்டி ஏற்றி விட்டு, இந்தா இதின்ரை இழுவையைப் பிடித்துப் பார் என்று என்னிடம் தந்து மகிழும் அண்ணா, உதவிக்கு வரும் சித்தப்பாமார், வாலாக்கொடியுடன் தம்பி, வீட்டின் மேல் ஓட்டுக் கூரையில் ஏறி நின்று வழுக்கி வழுக்கி பட்டம் விடும் காட்சியில் பதகளிக்கும் அம்மா... இவர்கள் எல்லோருடனும் ஊடாடியது போன்றதொரு உணர்வு.

கொக்கர் மாரிமுத்து அம்மான் வண்ணார்பண்ணையில் வசிக்கும் ஒரு சாதாரணமனிதர். 60வயதுகளைத் தாண்டியவர். மூன்று ஆண் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுத்து விட்டு மனைவி பொன்னியுடன் மகன்மார் அனுப்பும் பணத்தில் கஷ்டங்கள் தெரியாமல் வாழ்பவர். அவர் வீட்டில் ஒரு ஒற்றைப் பனைமரம். அதை வெட்டி வீழ்த்தி விட வேண்டுமென்பதில் மனைவி பொன்னியிலிருந்து அக்கம் பக்கத்தில் வாழ்பவர்களும், பக்கத்து வீட்டு சம்பந்தி காசிநாதரும் குறியாகவே இருக்கிறார்கள். அந்தப்பனை தமது வீடுகளுக்கு மேல் வீழ்ந்து விடும் என்ற பயம்தான் எல்லோருக்கும். ஆனால் கொக்கர் மாரிமுத்துஅம்மானுக்கோ அந்தப் பனை என்றால் உயிர். வருடாவருடம் அந்தப் பனையில்தான் விட்டம் கட்டி அவர் பட்டம் விடுவார். எழுபது வயதிலும் விட்டம் கட்டிப் பட்டம் விட்டு ஆனந்திக்கும் அவர் பனையைத் தறிக்க விடமாட்டேன் என்று அடம்பிடிப்பவர்.

இவர்களுக்கிடையான போராட்டமே கதை. அதை எளிய நடையில், எளிய பேச்சுத் தமிழில் நகைச்சுவை இளையோட சொல்லியிருக்கிறார் செங்கை ஆழியான்.

வெட்டினார்களா? வீழ்த்தினார்களா? என்பதை கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். கூடவே ஊரோடு உறவாடி, உறவுகளோடு ஊடாடியது போலவும் உணருவீர்கள்.

சந்திரவதனா
09.05.2016

Related Articles