அவன்விதி - மிகையில் ஷோலகவ்

போர் கொடியது. அது அன்பாலும், மென்உணர்வுகளாலும் பின்னப்பட்ட மனித உறவுகளைச் சின்னாபின்னமாக்கி, அவர்களையும், அவர்தம் மனங்களையும் சிதைத்து விடுகிறது. வாழ்க்கையை வாழ முடியாத வாழ்க்கையாக்கி, புயற்காற்றில் அடிபட்ட துரும்பாய் அலைக்கழித்து விடுகிறது. கூடிக் குலாவி வாழ வேண்டியவர்களைத் திக்குத் திக்காய் வீசி எறிந்து விடுகிறது.

அப்படியொரு, போர் என்னும் கொடிய புயற்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு, ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்து, மனதால் வீழ்ந்து போன ஒரு ஒரு உருசியப் போர்வீரனின் உருக்கமான கதை 'அவன் விதி'.

இக்கதை மிகையில் ஷோலகவ் (Michail Alexandrowitsch Scholochow) எழுதிய The Fate of a Man (1957) இன் தமிழ் மொழிபெயர்ப்பு. ´மீனவன்` மொழி பெயர்த்துள்ளார்.

அவன் அந்திரேய். உருசியப் போர்வீரன். அன்பான கணவனாக, குழந்தைகளை ஆதரிக்கும் தந்தையாக... குடும்பத்தோடு, தன் வீட்டில் வாழ வேண்டியவன். ஆனால் ஒரு போராளியாகிறான். விதி அவனைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.

மனைவி, குழந்தைகள் குடும்பம் என்று மெதுமெதுவாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதையே ஆராதித்து வாழ்ந்து கொண்டிருந்த சாதாரண குடிமகன் அவன். உருசிய வறுமையில் அடிபட்டு, உறவுகளை இழந்து, உள்நாட்டுப் போரில் பங்கு பற்றி... இளம்பராயத்தைக் கடந்தவன். மனைவி, குழந்தைகள் மேல் அன்பும், பாசமும் மிக்கவன். வாகனமோட்டி. போர் அவனைப் போர்க்ளத்துக்கு அழைக்கிறது. மறுக்க முடியாத நிலையில் குடும்பத்தை விட்டு ஜெர்மனியப் படையுடன் போராடச் செல்கிறான். அன்றைய நாள், புகையிரதநிலையத்தில் அவன் குடும்பத்தை விட்டுப் பிரியும் நாள் மனதைக் கலங்கடிக்கும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இதுபோல ஒரு போதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள் பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்து போய் விட்டன. காலையிலும் அதே கதைதான். இரயில் நிலையத்திற்குப் போ னோம். அவள் இருந்த இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள் உதடுகள் கூட வீங்கியிருந்தன. அவளுடைய தலைமயிர் கொண்டக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது. அவளது கண்கள் மங்கியிருந்தன. மருள் கொண்டவள் போல விழித்துக் கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவள் என்னை ஏற விட்டால்தானே? பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக் கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல... குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும், பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல. கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள். ஒரு சொல் கூட அவளால் பேச முடியவில்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா, என் கண்ணே! நான் புறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன் எனக்கு' என்றேன். ஒவ்வோரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது இதுதான்: அந்திரேய்... (அவன்விதி, பக்-15)

அந்திரேய் ஒரு விசுவாசமான போர்வீரன். வாகனமோட்டியாக உருசியப் படையில் பணி புரிகிறான். ஜெர்மனியப் படையுடனான போரில் போர்க்கைதியாகிறான். ஒரு போர்க்கைதியாக அவன் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாதவை.

´மிகையில் ஷோலகவ்` அதைச் சொல்லும் விதம் அபாரம். ஒரு போர்வீரனாக, கணவனாக, தந்தையாக என்று ஒவ்வொரு நிலையிலுமான ஒரு மனிதனின் உணர்வுகளை, அன்பை, காதலை, துயரை, ஏமாற்றத்தை, கடமையுணர்வை... என்று மிகமிக யதார்த்தமாகவும், உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிக் கொண்டு போகிறார். அவர் தான் அந்திரேயோ என்று எண்ணும் படியான அநுபவபூர்வமான, உயிரோட்டமான, நிதர்சனமான எழுத்து நடை.

மிகப்பெரிய எழுத்தாளன் ´மிகையில் ஷோலகவ்`. இப்படியொரு எழுத்தாளனின் ஒரு படைப்பையேனும், அதுவும் தமிழில் வாசிக்கக் கிடைத்தது பெரும் வரம் என்பேன்.

வெறும் 64 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவல் ஒரு போர்வீரனின் நாட்டுப்பற்றை, விசுவாசத்தை, நேர்மையை, திறமையை, இயலாமையை, சோகம் நிறைந்த மிகக் கடினமான வாழ்க்கையை… மிகவும் உருக்கமாகச் சொல்கிறது.

வாசித்துக் கொண்டு போகும் போது பல இடங்களில் மனம் கலங்கிக் கசிந்து விடுகிறது. சில இடங்களில் கடந்து போக முடியாமல் மீண்டும் மீண்டுமாய் வாசிக்க வைக்கிறது.

உதாரணமாக:
சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம் 'வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய்? என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி. சூரியன் பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி... இனி ஒரு போதும் விடை கிடைக்காது. (அவன்விதி, பக்-9)

இறுதியில் சிறுவன் வான்யா வைக் கண்டு பிடிக்கும் பகுதிகள் மிகுந்த நெகிழ்ச்சியானவை. இந்நாவலை ஒரு சிறுகதை என்று ஜெர்மனிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இது ஒரு பெருங்கதை. வாழ்வை வாழ முடியாமல் செய்யும் போர் என்ற கொடியபுயலில் உருக்குலையும் ஒரு மனிதனது வாழ்வின் கதை. இக்கதை உருசிய மொழியில் ஒரு பிரபல்யமான படமாகவும் எடுக்கப் பட்டுள்ளது. இப்படியான பிறமொழிப் படைப்புகளை மொழிபெயர்ப்பது அரும்பணி. மொழிபெயர்த்த மீனவன் போற்றப்பட வேண்டியவர்.

அவன் விதி நூலகத்தில்

சந்திரவதனா
2.10.2016

Related Articles