அப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன்

வீரனும், மணியும் என் மனவெளியில் அலைகிறார்கள். நடந்தும், படுத்தும், ஓடியும் திரிகிறார்கள். வாசித்து முடித்துச் சில வாரங்களாயிற்று. மாதங்களாயிற்று என்று சொல்லலாம். இன்னும் அவர்களை மறக்க முடியவில்லை.

எத்தனையோ போர்க்காலப் படங்கள் பார்த்திருக்கிறேன். கதைகள் வாசித்திருக்கிறேன். அவைகளெல்லாம் பெரும்பாலும் வேற்று நாட்டுப் போர்கள் பற்றியவையே. குணா கவியழகனின் அப்பால் ஒரு நிலம் எங்கள் நாட்டுப் போரின் கதை.

அதனால் அந்த வியூகங்களை ஓரளவுக்கு மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிகிறது. இன்னுமின்னும் அது ஒரு படமாக மனதுக்குள் விரிந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும் போது முடிவைத் தேடி மனம் பரபரக்கும். அதே பரபரப்பு இப்புத்தகத்தை வாசிக்கும் போதும் இருந்தது. அதே நேரம் கதை முடிந்து விடக் கூடாதே என்றொரு தவிப்பும் இருந்தது. கூடவே மணியினதும், வீரனினதும் கதைகளும் முடிந்து விடக்கூடாதே என்ற சொல்லொணாப் பரிதவிப்பும், கவலையும், ஏக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தன.

நூலின் அனேகமான ஒவ்வொரு பக்கத்தையும் பல தடவைகள் வாசித்தேன். நூலை முழுமையாக இரு தடவைகள் வாசித்தேன். 200ம் பக்கத்திலிருந்து 269ம் பக்கம் வரை 4 தடவைகள் வாசித்தேன். வாசிக்கும் போது, என் தம்பிமாரின் நினைவுகள் என்னுள் நிரம்பியிருப்பதாலோ என்னவோ சில தடவைகள் அழுதும் தீர்த்தேன்.

போராளிகளின் மனநிலைகள், வாழ்வு நிலைகள், அன்பு, பாசம், காதல், நட்புணர்வு, தவிப்பு, வீரம், வேட்கை... என்று என் மனதில் கேள்வியாகத் தொக்கி நின்ற எத்தனையோ விடயங்களுக்கு குணா கவியழகனின் அப்பால் ஒரு நிலம் கொஞ்சமேனும் பதில் தந்திருக்கிறது.

வீரனும், மணியும் வேவுப்போராளிகள். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளிலிருந்து அவர்கள் வேவுப்போராளிகளாக எதிரிப்படைத்தளத்துள் புகுந்து சில நாட்கள் அங்கு தாகம், பசி... என்ற பல்வித கொடுமைகளைத் தாங்கி, மறைந்து மறைந்து வாழ்ந்து ஒரு போரையே திசை மாற்றி விடக் கூடிய மிகமுக்கியமான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு திரும்புவதைப் பற்றியதே கதை. அதைக் குணா கவியழகன் சொன்ன விதம் மிகவும் இயல்பும், உணர்வும் கலந்தது. அவைகளெதையும் எழுத்திலோ, சொல்லிலோ இன்னொருவரால் புரிய வைக்க முடியாது. வாசித்துப் பார்க்க வேண்டும். புதுப்புதுச் சொற்கள். அதாவது எனது தமிழில் கலக்காத புதிய சொற்கள். சமையற் குறிப்புகள். வாழ்க்கை முறைகள்... அருமை என்ற சொல் போதாது.

வழமையான நாவல்கள் போல் இது அத்தியாயம் அத்தியாயமாகப் பிரிக்கப் படவில்லை. தரித்து நிற்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. கதை தன் பாட்டில் வளைந்து நெளிந்து சந்துகள் பொந்துகள் எல்லாம் எம்மை அழைத்துச் செல்கிறது. வேவுப்போராளிகளின் அம்மாமாரையும் மனம் நெகிழும் படியாக எங்கள் முன் கொண்டு வருகிறது.

269 பக்கங்களைக் கொண்டு, தமிழினி வெளியீடாக ஜனவரி, 2016 இல் வெளிவந்த இப்புத்தகம் குணா கவியழகனின் மற்றைய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்ற அவாவை மட்டுமல்ல, இன்னதென்று சொல்லமுடியாத ஒரு நெகிழ்வையும், நினைக்கும் தோறும் அழுது விடவேண்டும் என்று உணர்வையும் தோற்றுவிக்கிறது.

உன்னவள் உனக்குச் சொல்லவில்லையா?
இன்னும் மனதுக்குள் ஒலிக்கிறது.

சந்திரவதனா
29.03.2017

Related Articles