விமல் குழந்தைவேலின் வெள்ளாவி

ஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்...

இவையெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா?

இவையெல்லாம் விமல் குழந்தைவேல் எழுதிய ´வெள்ளாவி` நாவலில் இறைந்து கிடக்கும் சொற்கள்.

பார்த்தவுடனோ, படித்தவுடனோ எல்லோருக்கும் இவைகளின் பொருட்கள் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டத்தில் எல்லாவற்றிற்கும் பொருள் புரிந்து விடும். அதுவும் இந்திய வட்டார வழக்குகளையே வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஈழத்து வாசகர்களுக்கு இதுவொன்றும் பெரும் பிரச்சனையே அல்ல.

முழுக்க முழுக்க பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வெள்ளாவி. இது மட்டக்களப்பு வட்டார வழக்குத்தமிழா அல்லது தீவுக்காலை, கோளாவில், பனங்காடு போன்ற கிராமங்களில் பேசப்படும் வட்டாரவழக்கா என்பது தெரியவில்லை.

சாதாரணமாக நாவல்களிலோ அன்றில் சிறுகதைகளிலோ ஒருவர் கதைப்பது மட்டுமே அந்தந்த வட்டாரவழக்குகளில் வரும். இங்கு கதை நெடுகிலும் வட்டாரத்தமிழே. அது கதைக்குப் பலமா, பலவீனமா என்பது கூடக் கேள்விக்குறியே. ஒரு வேளை நல்லதமிழில் கதையை எழுதி, பேசும் விடயங்களை மட்டும் பேச்சுத்தமிழில் எழுதியிருந்தால் நாவலின் தரம் பன்மடங்கு அதிகரித்து, ஒரு நல்ல இலக்கியமாகப் பரிணமித்திருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதே நேரம் முழுக்கமுழுக்க பேச்சுத்தமிழில் ஒரு நாவலைப் படிப்பது வும் சுவாரஷ்யமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நேர்த்தியாக எழுதப்பட்ட நாவலென்று அடித்து வைத்துச் சொல்ல முடியவில்லை. கூடவே ஏராளம் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், வசனப்பிழைகள்.

 **********

கதையின் நாயகி பரஞ்சோதி, எட்டுப் பத்து வயதுப் பெண்களோடு எட்டுக் கோடு விளையாடும் பதினெட்டு வயதுப் பெண்ணாக அறிமுகமாகிறாள்.

பரஞ்சோதியின் அம்மா மாதவி. பேய்வண்ணானின் மகள். சின்ன வயதிலேயே தாயை இழந்தவள். 22வயதில் மச்சான் முறையான செம்பவனோடு பழகியதில் திருமணமாகாமலே கர்ப்பமாகி விட்டாள். இந்த விடயம் பேய்வண்ணானுக்குத் தெரிந்த அடுத்த காலையிலேயே மச்சான் முறையான செம்பவனை முதலை விழுங்கி விட்டது. இந்தக் கவலையில் பேய்வண்ணான் இறந்து போக கர்ப்பம் தரித்திருந்த பரஞ்சோதியின் அம்மா மாதவி தனித்துப் போனாள்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களில் ஒருவரான சலவைத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த மாதவிக்கு வறுமைதான் பெரும் சொத்தாகியது. சலவைத்தொழில் மட்டும் செய்து அவளால் வாழ முடியவில்லை. அல்லது வாழ விடவில்லை. அவள் வறுமையில் வாடி தனிமையில் நின்ற போது கொழுகொம்பாக அவளைத் தாங்க எந்த ஆண்களும் முன்வரவில்லை. ஆனால் புறக்கணிக்கப் பட்ட சாதியில் பிறந்த அவளின் உடலை மட்டும் புறக்கணிக்க மறுத்தார்கள் அந்த (உயர்சாதி) ஆண்கள். வறுமை, தனிமை இரண்டுமே அவளைக் கையாலாகாதவளாய் ஆக்கி விட்டிருந்தன.

அம்மா மாதவியின் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் பருவம் பரஞ்சோதிக்கு வந்த போது வீட்டிலே ஒரு போரே தொடங்கி விட்டது. பரஞ்சோதி, தாய் மாதவியோடு சண்டை பிடித்தாள், எரிந்து விழுந்தாள். ஒரு பரம எதிரி போலவே தாயை எதிர் கொண்டாள். தான் தன் தாய் போல வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்தாள். அதனால் பருவமடைந்ததிலிருந்து பதினெட்டு வயது வரை வீட்டுப் படலையைக் கூடத் தாண்டாது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாள். தாய் மாதவி எவ்வளவு கேட்டும் வீடுகளுக்குச் சென்று சலவைக்கான உடுப்புக்களை எடுத்து வரவோ, போடியார் வீட்டுக்குப் போய் வீட்டுவேலைகளுக்கு உதவவோ மறுத்தாள்.

அவளது இந்த வைராக்கியம் வென்றதா அல்லது அவளைச் சுற்றியிருந்த சமூகம், அவள் ஆசைகள், கனவுகள், வைராக்கியம் எல்லாவற்றையும் கொன்று போட்டதா என்பதுதான் கதை.

**********

அந்தக் கதையைத்தான் தீவுக்காலை, கோளாவில், பனங்காடு... போன்ற இடங்களுக்கே வாசகர்களை அழைத்துச் சென்று விமல் குழந்தைவேல் சொல்கிறார். பல இடங்களில் நெகழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.

கண்ணகி மதுரையை எரித்து விட்டு இலங்கையை நோக்கி வந்து குந்திய இடங்கள்தான் இலங்கையில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்கள் என்றும் எழுதியிருக்கிறார். வாசிக்கச் சுவாரஸ்யம்தான். இது அவரின் கற்பனையா அல்லது எங்கேயும் பதியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

கதை நகர்த்தலில் சிற்சில குறைகளும் உள்ளன. தான் தாயைப் போல வந்து விடக் கூடாது என்ற மிகுந்த வைராக்கியத்துடன் வாழும் ஒரு பெண், யாரென்றெ தெரியாத ஒருவன் தன்னைப் புணரும் போது, அதுவும் இருட்டில் அவன் முகம் கூடத் தெரியாத போது தன்னை அவனிடம் அர்ப்பணித்து விடுவது என்பது ஏற்புடையதே அல்ல. அதை ஒரு வன்புணர்வு. அவள் விரும்பாமலே நடந்தது என்று சித்தரித்திருந்தால் அது ஒரு நிதர்சனமான சம்பவமாகத் தோன்றலாம். அவள் அதைக் கனவாக நினைப்பது என்பது நிட்சயமாக நடைமுறையுடன் ஒட்டாத ஒன்று.

மற்றும் மாதவி கர்ப்பமாயுள்ளது பேய்வண்ணானுக்குத் தெரியவந்த காலையில் அவள் கர்ப்பத்துக்குக் காரணமான செம்பவனை முதலை விழுங்கி விட்டது என்பதுவும் நாடகம் போலவே உள்ளது. ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று அவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்றிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

இருந்தாலும் காதல், சோகம், கோபம், பாசம், நெகிழ்ச்சி, சில பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்... என்று மிகுந்த சுவாரஸ்யமான விடயங்கள் கதை நெடுகிலும் இறைந்து கிடக்கின்றன.

எல்லா சுவாரஸ்யமும் முதல் அத்தியாயம் வரைதான். இரண்டாவது அத்தியாயத்தில் விமல் குழந்தைவேல் வாசகர்களை ஏமாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் இயக்கங்கள் முளைத்து விட்டன. ஈழப்போர் தொடங்கி விட்டது. பரஞ்சோதியின் மகன் அரவிந்தனுக்கும் பதினைந்து வயதாகி விட்டது. அதோடு விமல் குழந்தைவேல் கதையையே புரட்டிப் போட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போர் எமது வாழ்வைப் புரட்டிப் போட்டதுதான். அதற்காக சும்மா எதையாவது எழுதிவிட்டுப் போய் விட முடியாது. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மாபெரும் விடயம். அதை எழுந்தமானத்தில் அல்லது நுனிப்புல் மேய்வது போல் தொட்டு விட்டுச் செல்வது எந்தவகையில் சரியாகும்.

இந்நாவலை இன்னும் பலவருடங்கள் கழித்து வாசிக்கும் ஒருவர், `வீட்டிலே சைக்கிளோ அன்றில் வேறு பிரியமான பொருளோ வாங்கிக் கொடுத்திருந்தால் ஒருவர் விடுதலைப் போராட்டத்துக்குப் போயிருக்க மாட்டார்´ என்று எண்ணக் கூடும். `பரஞ்சோதியின் மகன் சைக்கிளை விற்று காசைக் கொடுத்து விட்டு விடுதலைப் போராட்டத்துக்குப் போய் விட்டான்.´

விமல் குழந்தைவேல் இப்படி எழுதி எத்தனையோ போராளிகளின் தியாகங்களையும், செயற்பாடுகளையும், அவர்களின் உத்வேகங்களையும் நெருப்பில் போட்டுக் கருக்கி விட்டார். அவர்கள் எந்த இயக்கத்தவர்களாய் இருந்தால் என்ன... அவர்களை அர்த்தமற்றவர்களாகவே ஆக்கி விட்டார்.

நாவலை முதல் அத்தியாயத்துடன் நிறுத்தியிருந்தால் நாவல் பேசப்பட்டிருக்கும். ஒரு பதிவாக இருந்திருக்கும். இப்போது...

- சந்திரவதனா
29.08.2017


உங்கள் கருத்துக்களுக்கு : Manaosai

Related Articles