என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி நான் முன்னமே கேள்விப் பட்டிருக்கிறேன். படலை இணையத்தளத்தில் தொடராக வெளிவந்தது என்றும் அறிந்திருக்கிறேன். படலை தளத்தில் இது வெளிவந்த காலத்தில் ஜேகே என்னும் Jeyakumaran Chandrasegaram என்றொருவர் வாழ்ந்து கொண்டிருப்பதோ, எழுதிக் கொண்டிருப்பதோ எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஓரிரு வருடங்களின் முன்னர் - 2016ஆக இருக்கலாம். தற்செயலாக அவரது எழுத்துக்களை முகநூலில் காணக்கிடைத்து மிகவும் ரசித்து வாசித்தேன்.

அதன் பின்னான ஒரு பொழுதில், அவரது இந்த ´என் கொல்லைப்புறத்துக் காதலிகள்` நூலை Amazon இல் கண்டு, பரீட்சார்த்த வாசிப்புக்காகத் தரவிறக்கக் கூடிய ´பங்கர்´ என்ற பதிவையும் `கடவுள்` என்ற பதிவையும் தரவிறக்கி வைத்திருந்தேன்.

மீண்டும் ஒரு தற்செயலாக நேற்று அந்த `பங்கர்´ என்ற பதிவை, எனது Kindle இல் கண்டு வாசித்தேன்.

ஒருவித அன்னியோன்னியமான எழுத்து. எளிமையான நடை. கடினமான வார்த்தைகளற்ற, பாமரரும் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்பிரயோகங்கள். கொடுமையான பங்கர் வாழ்வைக் கூட ரசனையுடன் எழுதியிருக்கும் தன்மை.

அப்படியே பங்கருக்குள் இறங்கி அவரது குடும்பத்துடன் வாழ்ந்து விட்டு வந்தது போன்றதொரு உணர்வு.

சில பயனுள்ள தகவல்களும் கிடைத்துள்ளன. உங்களுக்குச் சிலவேளை தெரந்திருக்கலாம். எனக்குப் புதிதாக இருந்தன. பீப்பீ ஊத, வடை தட்ட, ஆட்டுக்கு உணவாக வெட்டிப்போட, வேலிக்குக் கதியாலாக... என்றளவிலான பூவரசின் பயன்களையே அறிந்திருந்த எனக்கு இது புதியதகவல்

இந்த மரப்பிடி செய்யும் முறையே ஒரு தனியான கலை. கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வதற்குச் சரியான ஆள் ‘பூவரசு’. இடியப்ப உரல், மாட்டுவண்டில்களின் சிலைக்கம்புகள், சில்லுக்கட்டைகள் எல்லாமே பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே.

மரப்பிடி செய்வதற்கு பூவரசு மரத்திலிருந்து நல்ல பழுத்தக் கொப்பாகப் பார்த்து வெட்டி நெருப்புத் தணலில் போட்டுச் சுடுவார்கள். பொன் நிறத்தில் அது எரிந்து வரும்போது, தோலைக் கீறி அகற்றி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுப்பார்கள். அதை மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்குப் பிடியாகப் போட்டால் சிங்கன் அசையாமல் இருப்பார்.

- ஜேகே என்னும் Jeyakumaran Chandrasegaram


கூடவே நகைச்சுவை.

அப்படியே Amazon இல் நூலின் Kindle பதிப்பை வேண்டி, முழுவதையும் வாசித்து விடலாம் என்றிருக்கிறேன்.

- சந்திரவதனா
09.09.2018

Related Articles