என் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்)

என் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்) வீரமரணமடைந்த நாள் இன்று.
11-11-1993 - பூநகரித்தாக்குதல் - தவளைப்பாய்ச்சல்

அவன் பிறந்தது 01-11-1970. வீரமரணம்:- 11-11-1993.

எத்தனை ஞாபகங்கள். ஒன்றா, இரண்டா?


சின்ன வயதில் மிகவும் சாதுவாக இருப்பான். மொழுமொழுவென்று உருண்டுருண்டு நடப்பான். கத்தினாலும் சிரிப்பான். பேசினாலும் சிரிப்பான். தடக்கி விழுந்தாலும் கண்ணில் கண்ணீர் வருமே தவிர சிரித்துக்கொண்டு எழும்புவான். நடையில் உடையில் பேச்சில் சிரிப்பில் செல்லத்தனம் அதிகம் .
.
நாங்கள் எட்டுப்பேர். எங்களில் ஏழாவது பிள்ளை அவன். குடும்பத்தில் மூத்தவர்கள் அதிகம் இருந்தால் வேலைக்குப் பஞ்சமிருக்காது என்பார்கள். அது போல் தொட்டதிற்கெல்லாம் பரதன்..... அல்லது சபா....என்றே நாங்கள் எல்லோரும் அழைத்துக் கொண்டிருப்போம். கூப்பிட்ட குரலுக்கு இருவருமே அலுக்காமல் ஓடிவருவார்கள். பாசம் அவர்களை எங்களோடு இறுகக் கட்டிப் போட்டிருந்தது.

'இளையக்கா' என்று என்னை அவன் அழைக்கும் போது ஒலிக்கும் வாஞ்சையான குரல் நான் அவனைப் பிரிந்திருந்த காலங்களிலெல்லாம் என்னுள் ஒலித்துக் கொண்டேயிருந்தது! இப்பவும் எனக்குள் கேட்பது போல..!

அப்பா புகையிரத நிலைய அதிபர். தென்னிலங்கைப் பகுதிகளிலேயே அவர் நீண்ட வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் முக்கிய வெளிவேலைகளை ஆண் சகோதரர்கள் தான் செய்வார்கள். அதிலும் என் அண்ணன்மார் படிப்பு வேலையென்றாகிய பின்னர் தம்பிகள் தான் பேருதவி.

இருவரையும் இரட்டையர்களா என்று தான் பலரும் கேட்பார்கள். சிறுவயதில் ஒரேயளவு உயரமாக ஒரே தோற்றத்துடன் இருப்பார்கள். அம்மா ஒரே மாதிரி ஒரே நிறத்தில் உடைகளையும் தைத்துக் கொடுத்து விடுவா. வித்தியாசம் எதுவுமில்லாமல் போய்விடும்.

வீட்டுக் கிணறு உப்புத் தண்ணீர். நல்ல தண்ணீர் எடுப்பதற்காக ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் கிணற்றுக்குப் போக வேண்டும். பரதனும் சபாவும் ஒன்றாகச் சேர்ந்து போய் நல்ல தண்ணீர் அள்ளி வருவார்கள். அதனை சுலபமாக தூக்கி வருவதற்கு தொழில்நுட்ப ங்களை தாமாகவே கண்டுபிடித்து செய்து வருவார்கள். சில சமயம் தண்ணீர் குடுவைகள் வீதியில் எங்காவது இருக்கும் .இவர்களை காணக்கிடைக்காது. தேடினால் ஏதாவதொரு பனங்காணிக்குள் அல்லது பிள்ளையார் கோவில் வீதியில் விளையாடிக்கொண்டும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டும் இருப்பதாகச் செய்தி வரும்.

பாடசாலைப் படிப்பு, பின்னேரங்களில் ரியூசன் வகுப்பு. இவற்றிற்கிடையே யார் என்ன கேட்டாலும் மறுக்காமல் ஓடியோடி உதவி செய்வார்கள். எல்லாச்சமயங்களிலும் அந்தக் குழந்தைத்தனமான புன்னகையை மட்டுமே நான் அவர்கள் முகங்களில் கண்டிருக்கிறேன்!

1983,84,85... களில்....!
அறம்புறமாக வாசிப்பிலும் எழுத்திலும் நான் மூழ்கத் தொடங்கியிருந்த காலம் அது. என்னுடைய சிறுகதைப் படைப்புகள் இலங்கைப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. இடையிடையே மேடைப்பேச்சுகள் வேறு. குண்டு வெடித்தாலென்ன, எத்தனை தோட்டாக்கள் குறுக்குமறுக்காகப் பாய்ந்தாலென்ன, எல்லாவற்றையும் மீறிக்கொண்டு எனக்குப் பிடித்த அத்தனை விடயங்களையும் நான் செய்து கொண்டேயிருக்க விரும்பினேன். போராட்டமும் கலையும் வாழ்வும் எனக்கு வேறாக இருக்கவில்லை.

அப்போது கரவெட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் மாதத்தின் கடைசி வார இறுதி நாட்களில் அங்கிருக்கும் கலைஇலக்கிய வட்டத்தினர் நல்ல திரைப்படங்களை தெரிவு செய்து திரையிடுவார்கள். காலம் சென்ற எழுத்தாளர் நெல்லை பேரன், செ.யோகராஜா, குப்பிளான் ஐ.சண்முகம் உட்பட பலர் வந்து கலந்து கொள்வார்கள். திரைப்படம் முடிவுற்ற பின்னர் அதுபற்றிய உரையாடல் நடைபெறும். என்னையும் அழைப்பார்கள். து.குலசிங்கம், டொக்டர் முருகானந்தன், ரகுவரன் ஆகியோர் உட்பட இயங்கிக் கொண்டிருந்த பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினர் அனைவரும் அத்திரைப்படங்களை பார்ப்பதற்காகச் சென்று வருவார்கள். நானும் சென்று வருவேன். அது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது.

ஊர்கள் எழுச்சி பெற்றிருந்தன. கலை முயற்சிகளும் தான். நாடு குழம்பிக் கிடந்தது. போராட்டம் ஒரு வேகத்துடன் நகரத் தொடங்கியிருந்தது. இத்தகைய கலை இலக்கியக்கூட்டங்களிற்கு சென்று வீடு திரும்புவதென்பதே பாதுகாப்பானதல்ல என்ற அபிப்பராயம் ஊருக்குள். எப்பவும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை. இராணுவம் எதையும் செய்யத் தயாராக இருந்தது. ஆயினும் எங்கள் வீட்டில் எது நடக்க வேண்டுமோ அனைத்தும் அப்படியே நடந்து கொண்டிருந்தன!

தம்பி மொறிஸ் விடுதலைப் போராட்ட பணிகளிற்குள் ஆழமாக தன்னை அர்ப்பணித்து விட்டிருந்தான்.. இருந்தாலும் நான் கேட்டால் மறுக்காமல் ஏதோவிதமாகக் குறிப்பிட்ட கூட்டங்களிற்கு சைக்கிளில் ஏற்றிச் சென்று என்னை இறக்கி விடுவான். பல இலக்கியக் கூட்டங்களிற்கு சபா சைக்கிளில் என்னை ஏற்றிப் போய் விட்டிருக்கிறான்.
விடுதலைப் போராட்டமும் வாழ்வும் எம் கலைகளும் ஒன்றுக்குள் ஒன்றாய் பிணைந்தே நகர்ந்தன!

மொறிஸ் விடுதலை இயக்கத்திற்குள் முற்று முழுதாக இணைந்து பணியாற்றத் தொடங்கிய பின்னர், சபா(மயூரன்) வின் அன்றாட செயற்பாடுகளில் பின்னடைவும் சோர்வும் ஒருவித தனிமையும் ஆட்கொள்ளத் தொடங்கியதை நான் கண்டேன். அத்தருணம் நான் யாழ் கச்சேரியில் வேலைக்குத் தெரிவாகி போகத் தொடங்கியிருந்தேன். ஒரு நாள் வேலையால் வீடு திரும்பும் போது தம்பசெட்டி வீதியில் அப்பா சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்பா திடீரென்று விடுமுறையில் வந்திருக்கிறார் என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னைக் கண்டதும் தயங்கி சைக்கிளை நிறுத்தினார். அப்பாவின் முகத்தில் அத்தனை தயக்கத்தையும் ஆழ்ந்த யோசனையையும் நான் முன்னெப்போதும் கண்டதில்லை.

'என்னப்பா' என்றேன்.
'சபா.. இயக்கத்திற்கு போயிட்டான்..' என்றார்.
அவரின் முகம் ஒருவித கவலையில் மூழ்கிக் கிடந்தது. எனக்கு துயரம் தொண்டையை அடைத்தது. அதுவரை அவன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனின் உயர்வகுப்புக் கல்வி பாதியில் குழம்புகிறதே என்ற கவலை தான் என்னை அதிகம் வருத்தியது. அவன் சின்னப்பிள்ளை, இந்த வயதில் இதற்கான செயற்பாடுகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தாங்குவானா என்ற பதற்றம் வேறு. போய்த்தான் ஆகவேண்டும் என்னும் நிலையில் அவன் தனது படிப்பை முடித்துவிட்டாவது போயிருக்கலாமே என்று உள்ளுர நினைத்து நினைத்து உழன்று கொண்டிருந்தேன்.

வி.பு களின் ஒவ்வொரு முகாமாக தேடித்தேடி.... அப்பா போய்க் கொண்டிருந்தார். கடைசியாக அவன் சாவகச்சேரி பிரதான முகாமில் அதிரடிப் பயிற்சியில் இருக்கிறான் என்ற செய்தி வந்தது.

ஏற்கனவே மொறிஸ் அதற்குள் இருப்பதால், இப்போ அவசரப்படாமல் போய்ப் படிப்பை தொடரும்படி மேலிடத்தால் கேட்கப்பட்டது என்றும் அதற்கு சபா- 'நான் இப்போ இங்கே வரவேண்டிய தருணம் இது. நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்' என்று பதில் சொன்னதாகவும் எமக்கு தகவல் வந்து சேர்ந்தது. அவ்வளவு தான்!

83 கலவரத்தில் மிக மோசமாக அழிக்கப்பட்ட தமிழர்களின் உயிரும், ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான பொலிகண்டி கணேசண்ணாவின் தொடர்பும், மொறிஸின் விடுதலை ஈடுபாடும்..... என்று ஏராளம் காரணங்கள் அவனை ஓர்மத்துடன் விடுதலைப்போராட்டத்திற்குள் வேகமாக இழுத்துச் சென்றிருந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை!

கிட்டண்ணருடன், பின்னர் மாத்தயாவுடன், பின்னர் சொர்ணம் அண்ணருடன், பின்னர் தலைவருக்கு அருகில்... என்று அவன் எங்களை விட்டு வெகுதூரம் போய்க்கொண்டேயிருந்தான்!

நீண்ட வருடங்கள் நகர்ந்தன. என் வேலை, என் எழுத்து, வாசிப்பு என்ற சட்டத்திற்குள் விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான என் பணிகள் என்ற விடயமும் காத்திரமாக இடம்பிடித்துக் கொண்டது!

1990 ல் யாழ்ப்பாணத்தில் நாமிருந்த வீடு குண்டுத்தாக்குதலில் தரைமட்டமான பின்னர் இருபாலைக்கு நகர்ந்திருந்தோம். சுற்றிவர இராணுவ முகாம்கள். இரவுகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டபடியிருக்கும். ஒருநாள் நள்ளிரவில் மோட்டார் வாகன இரைச்சல். நானும் கணவரும் இடம்பெயர்ந்து குடியிருக்கும் வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்கிறது. எழுந்து பார்க்கிறேன். இருளில் சீருடை அணிந்த இரு போராளிகள். மின்சாரம் இல்லை. எண்ணெய் விளக்கை ஏற்றி அவசரமாகச் சென்று பார்க்கிறேன். அவர்கள் அருகில் வருகிறார்கள். ஒரே திகைப்பு. அது சபா(மயூரன்) .அருகில் அவன் தோழன்! கேதீஸ்(திருகோணமலையை சேர்ந்தவன்). தனது கையில் ஒரு பிரச்சனை சிகிச்சைக்காக யாழ் வந்திருப்பதாக மயூரன் சொன்னான்.

"பசிக்குது இளையக்கா. ஏதும் சாப்பாடு இருக்கா.." என்றான்.
உடனே புட்டு அவித்து, சொதியும் வைத்து, ஒருசம்பலும் அரைத்து, முட்டைப்பொரியலும் செய்து அவசரமாகக் கொடுத்தேன்.

"எவ்வளவு காலத்துக்குப் பிறகு உங்கட கையால வீட்டுச் சாப்பாடு. சுப்பராயிருக்கு இளையக்கா..'" என்று சொல்லிச் சாப்பிட்டான். எனக்கு கண்கள் குளம் கட்டிக் கொண்டது!

அந்த சந்திப்பை தொடர்ந்து யாழ் வரும் போது, இராணுவத்தின் கண்களுக்கு மண் தூவிவிட்டு, என்னையும் வந்து பார்த்துவிட்டுப் போவான்.
திடீரென்று எல்லாவற்றையும் துறந்து விட்டு லண்டன் வந்து விட்டேன். உயிர்ப்பயம் என்பது முட்டாள்த்தனமாக எல்லா வேர்களையும் அறுத்துவிட்டு மூழித்தனமாக வாழவைத்து விடுகிறது! அதைத்தான் நானும் செய்திருக்கிறேன்! ஆனால் உயிர் அங்கேயே நின்று விட்டது. நான் இங்கே வந்துவிட்டிருக்கிறேன்! வேடிக்கையில்லையா? நான் இங்கு வந்தபின்னர் அவன் காட்டிற்குள்ளிருந்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். அதை வாசிக்கும் தோறும் இரத்தக் கண்ணீர் வந்துவிடும் போலிருக்கும்!

"நீங்கள் போனதையிட்டு அண்ணர் கவலைப்பட்டார்'
'விழுதுகள் பத்திரிகையில் என் மாவீரத் தோழர்கள் பற்றி எழுதுங்கள்"
முக்கிய விடயங்கள் காட்சிப்பதிவாக்க வேண்டியிருக்கிறது. முடிந்தால் ஒரு கமரா வாங்கியனுப்புங்கள்"
அவனது அந்த வரிகள் இன்னமும் நெஞ்சிற்குள் உயிர் மையால் எழுதப்பட்ட வரிகள் போல!

எத்தனை வருடங்கள் ஓடிக் கழிந்தாலும் முடிவற்ற நினைவுகள் தன்னுள் அரற்றிக் கொண்டேயிருக்கின்றன!!!

(அவனது வீரமரணச் செய்தியை லண்டனிலிருந்து தொலைபேசியூடாக் கேட்டவுடன் எழுதிய வரிகள்-1993)

நானுன்னை இனி எப்படித் தழுவுவேன் !
------------------------------
'கடல் கொந்தளித்தது....ஜனங்களின்
மனங்களைப் போல...
பனிக்காற்று உடலைத் துளைத்தது..கூரிய
ஊசிகளைப் போல..
மேகம் நிலவுக்கு விடைகொடுத்து மூளியாய்
இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது...!
கனவுகள் திரைகளாய் தூக்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை நினைத்துத் தவித்தது!
நாழிகள் மரத்தனமாய் ஓட மறுத்தது..!
மின்னல் கோடிட்டு இடிகள் முழங்கின..!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தன..!
களத்தில்.. அவன் காவியமானான் என்று...!!
கடலும் காற்றும் பனியும் மேகமும்....
நிலவும் உலக ஒலிகளும்.........
எங்கோ ஒரு அந்தந்தத்தில் அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில்.......ஜில்லிட்ட குருதியில்.......
சபா ..என்ற கூவலின் நீண்ட கேவல்.....!
மௌனத்தின் விறைப்பில் ஏமாந்த கோபத்தில்....
மயூரன் என்ற விநோதமான விக்கல்..!
என் இனிய உடன் பிறப்பே......!
என் ஆசைத் தம்பியே...!
அழகிய அந்த ஈழ பூமியில்.......
நீ எங்கே உறைந்து கொண்டாய்..?

கடல் கடந்து...வான்பறந்து...
மலை தாண்டி....மண்குதித்து....
படை மீறி வந்தாலும்....
நானுன்னை இனி எங்கு தேடுவேன்...!?
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!?
கொடிய பசியுடன் கூடவே தோழருமாய்...
திடுமென்று என் வாசலைத் தட்டிய
போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி ....
மறு கையால் உதவி செய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத ...
தூயவனே....மயூரா...!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்...?
தம்பி...நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்..!?'

--------------
(1994 எரிமலையில் பிரசுரமானது)

-சந்திரா இரவீந்திரன்
11.11.2017

Drucken   E-Mail

Related Articles

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

காஸ்ரோ

`மே´ மாதம்